தொடர்கள்
ஆன்மீகம்
பைரவர் வழிபாட்டுப் பலன்கள்..!! - மீனாசேகர்.

Bhairava Worship Benefits..!!

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒருவராவார். இவர் வைரவர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
பைரவர் என்ற சொல்லுக்குப் பயத்தை போக்குபவர் என்று பொருள். நாம் அவரை மனதார நினைத்து வழிபடுபட்டால் உடனடியாக அருளைத் தரக் கூடியவர். இவரின் அருள் இருந்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும்.
பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. இதனால் தமிழ்நாட்டில் நாய்களுக்குப் பைரவர் என்ற பொதுப் பெயரும் வழக்கத்தில் இருக்கிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்கிர பைரவர் என்றெல்லாம் அழைக்கின்றார்கள். ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச் சன்னிதியில் கால பைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு.
காலையில் கோயில் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று “பார்த்த நித்ய பூஜா விதி” கூறுகிறது. கோயிலின் மற்ற சன்னதிகளைப் பூட்டி சாவியைப் பைரவர் பாதங்களில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவைப் பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது. பாதுகாப்பற்ற இந்நாளில் சில கோவில்களில் இப்படி சாவிகளை வைப்பதைத் தவிர்த்து பூஜை முடிந்தவுடன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசத்தையும் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.
காலத்தின் கடவுள் எனச் சொல்லப்படுவதால் ஒருவரின் தலைவிதியை மாற்றும் சக்தி இவருக்கு உண்டு. நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்த வல்லவர் என்பதால் இவரை வழிபட்டால் நவகிரக தோஷங்கள், மற்றும் நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்தும் மீண்டு வர முடியும். இவர் சனீஸ்வரரின் குருவும் ஆவார்.

பைரவர் வழிபாட்டுப் பலன்கள்:
அஷ்டமி திதி என்பது பைரவர் வழிபாட்டுக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது கூடுதல் விசேஷமான நாள். தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்குப் பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம் என்பது ஐதீகம்.

Bhairava Worship Benefits..!!

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிறு அன்று சிவனின் அம்சமான பைரவருக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும். நிதிநிலை மேம்படும். ராகு நேர வழிபாடு மிகச் சிறந்தது, வடை மாலை சாற்றி வழிபடலாம். வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யலாம். அதன் மூலம் செல்வ வளம் பெருகும்.

திங்கட்கிழமை:
திங்கட்கிழமை சிவனுக்கு உரிய நாள். பைரவர் சிவ அம்சம் என்பதால் அன்று சிவபெருமானுக்குப் பிரியமான வில்வத்தால் அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டால், அவரின் அருளுடன் சிவனருளும் நமக்குக் கிடைக்கும். மேலும் பன்னீர் அபிஷேகம் செய்து சந்தனக்காப்பு போட்டு, புனுகு பூசி நந்தியாவட்டை மலரைச் சாற்றி வழிபட்டால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

செவ்வாய்க்கிழமை:
செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நாம் இழந்த பொருள் எதுவாக இருந்தாலும் அது திரும்பக் கிடைக்கும். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி இணைந்து வருவது சிறப்பு. அதுவும் செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்கு இன்னும் விசேஷமானது.

புதன்கிழமை:
புதன்கிழமை அன்று பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடும் பட்சத்தில் வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும்

வியாழக்கிழமை:
வியாழக்கிழமைகளில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம், காத்து, கருப்பு போன்றவைகள் நம்மை அணுகாது விட்டு விலகி நலம் கிடைக்கும்

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக்கிழமை மாலை வேளையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வந்தால் செல்வ வளம் பெருகும்

சனிக்கிழமை:
சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும். அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி விலகும்.

நாம் பைரவரை வழிபட்டு வாழ்வில் அனைத்து பலன்களையும் பெறுவோம்!!