
நவகிரகங்களில் சனி பகவானை என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம். அவருடைய பார்வை மட்டும் பட்டு விட்ட கூடாது என எச்சரிக்கையாக இருப்பதுண்டு. பொதுவாக நாம் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி மற்றும் கண்ட சனி கால கட்டங்களில் சனி பகவானின் சாதக, பாதக தாக்கங்களுக்கு ஆளாகிறோம். நமக்கு ஏற்படும் பாதகமான தாக்கங்களில் இருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
நவகிரகங்களில் சனி பகவானை நேரடியாக வணங்குவதை விட அவரையும் கட்டுப்படுத்தும் அனுமனை வணங்குவது சிறப்பு. அனுமனை வழிபடுபவர்களுக்கு அவரது அருள் மட்டுமின்றி, ஶ்ரீஇராமரின் அனுகிரமும் நமக்குக் கிடைக்கும்.
அனுமனைப் பிடித்த ஏழரைச் சனி:

ஶ்ரீராமர் இராவணனை வதம் புரிய தன் வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த சேது பந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவரது வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. வானரங்கள் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. இராம, இலட்சுமணர் இருவரும் கடலில் பாலம் உருவாவதைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
சனீஸ்வரர், நாம் வணங்கும் தெய்வங்களை அவர்களின் அனுமதியுடன் தான் பிடிக்க வேண்டும் என்பது ஒரு விதி. அதுபோல ஒரு சமயம் சனீஸ்வரர் இராம பக்த ஆஞ்சனேயரைப் பிடிக்க, ஸ்ரீராம லட்சுமணரை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார். 'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள் என இராமர் கூறினார்.

சனீஸ்வரர், அனுமனிடம் சென்று அவரை வணங்கி தங்களை ஏழரைச் சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. அதனால் உங்களைப் பிடித்துக் கொள்ள உங்கள் உடலில் உள்ள ஏதாவது ஒரு இடத்தை கொடுங்கள்” எனக் கேட்டார். அதற்கு அனுமனோ, “சனீஸ்வரனே! நான் தற்போது சீதா தேவியை மீட்பதற்காக இராமனுக்கு உதவியாகப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணிகள் முடிந்து சீதா தேவியை மீட்ட பிறகு நானே உங்களைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதையும் கூட நீங்கள் பிடித்துக் கொள்ளலாம்” என்றார். அதற்குச் சனி பகவான், ஆஞ்சநேயா! எதற்கும் ஒரு கால வரையறை என்பது உண்டு என்று தாங்கள் அறிவீர் அல்லவா? எனவே யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால் காலம் தாழ்த்தாமல் விரைவில் உங்களுடைய உடலின் எந்த பாகத்தை நான் பிடிக்க வேண்டும் எனச் சொல்லுங்கள்” என்றார் சனீஸ்வரன். இதைக் கேட்ட அனுமன், “சரி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். நான் இப்பொழுது இராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கைகள் தற்போது ராமருக்காகப் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அதனால் அங்கு இடம் தர முடியாது. பாதத்தில் இடம் கொடுத்தால் அது உங்களை அவமரியாதை செய்தது போல் ஆகிவிடும். எண் சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம். அதனால் எனது தலையில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

சனீஸ்வரனும் அனுமனின் தலையில் ஏறி அமர்ந்து கொண்டார். அதுவரை சிறிய பாறைகளை மட்டுமே தூக்கிச் சென்ற அனுமன், சனீஸ்வரன் தனது தலை மீது ஏறிக் கொண்ட பிறகு பெரிய பெரிய மலைகளைப் புரட்டி, தனது தலையில் சுமந்து எடுத்துச் சென்று கடலில் போடத் துவங்கினார். அனுமனின் தலையில் அமர்ந்திருந்ததால் மலைகளின் பாரத்தைச் சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாயிற்று. ஒரு கட்டத்தில் மலைகளின் பாரத்தைத் தாங்க முடியாமல் அனுமனின் தலையில் இருந்து கீழே இறங்கி விட்டார் சனீஸ்வரன்.

இதைக் கண்ட அனுமன் “என்ன சனீஸ்வரரே…என்னை ஏழரை ஆண்டுகள் பிடிக்கப் போவதாகச் சொல்லி இடம் கேட்டீர்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இறங்கி விட்டீர்களே” என்றார். துவண்ட நிலையில் சனீஸ்வரர் “வாயு புத்திரனே என்னை மன்னித்து விடு. சூரியனையே கலங்கடித்தவன் நீ. அவ்வளவு ஆற்றல் படைத்த உன்னைச் சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஆனால் இப்போது உன் ஆற்றலை நேரில் கண்டேன்.
இப்போது உங்களைப் பிடிக்க முடியாமல் தோற்று விட்டேன்" என்றார். அதற்கு ஆஞ்சநேயர், "நீங்கள் தோல்வி அடையவில்லை. ஏழரை ஆண்டுகள் என்னைப் பிடிக்க வந்த நீங்கள் ஏழரை நாழிகைகள் பிடித்து உங்கள் பணியைச் சரியாகச் செய்து விட்டீர்கள்" என்றார்.

அனுமனுக்கு வரம் கொடுத்த சனீஸ்வரன்:
ஆஞ்சநேயரின் இனிய சொற்களால் மகிழ்ந்து சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னைப் பிடிக்க உன் தலையில் அமர்ந்து உனக்குப் பதில் சேது பாலம் அமைப்பதற்கான பாறைகளை என் தலை மீது தாங்கியதால் நானும் உன்னால் புண்ணியம் அடைந்து விட்டேன். “அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.“இராம நாமத்தைப் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் தாக்கங்களிலிருந்து இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் அனுமன். சனி பகவானும் அந்த வரத்தைத் தந்து அருள் புரிந்தார்.
ஆஞ்சநேயருக்கு அளித்த இந்த வரத்தினால், சனி பகவானால் நமக்கு ஏற்படும் ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, அஷ்டம சனி மற்றும் கண்ட சனி போன்றவற்றால் பாதிப்பு அடைந்து வருகிறவர்கள், இராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், நிச்சயம் சனி பகவானால் எந்த இன்னலும் ஏற்படாது.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி |
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத் ||
சனி தோஷம் நீக்கும் அனுமன் வழிபாட்டு ஸ்லோகம்:
"அஞ்சனா நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம்
கப்பீச ரக்ஷக வீரம் ஹனுமந்தம் நமாம்யஹம்"
ஸ்ரீ ராம் ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்

Leave a comment
Upload