
அந்தக் காலை நேரம் மிகவும் இதமாக இருந்தது. கையில் டீயுடன் மொட்டை மாடிக்கு வந்த இனியாவின் மனதில் எண்ண அலைகள் ஓட ஆரம்பித்தது. நேற்று நடந்த நிகழ்ச்சிகள் ஒரு முறை கண்முன் வந்து நின்றது.
பெண் பார்க்கும் படலம். இரண்டு கார்களில் எட்டு பத்து பேர் வந்து இறங்கினார்கள்.
மாப்பிள்ளை சொந்தமாக பிசினஸ் செய்கிறார். இனியா ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியை. எல்லோரையும் வரவேற்று உட்கார வைத்தாயிற்று. அம்மா தண்ணீர் உபசரிப்பு செய்தாள். பின்னர் சம்பிரதாயப்படி பெண்ணை அழைத்துப் பேசி, பாடி, சொஜ்ஜி பஜ்ஜியுடன் ஃபில்டர் காபியும் சாப்பிட்டு லௌகீகம் பேச ஆரம்பித்தார்கள்.
ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டபடி ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டார் இனியா அம்மா.
“மாமி நீங்க ஒங்கப் பொண்ணுக்கு என்ன பண்ண நெனைக்கறேளோ அதப்பண்ணுங்கோ. மாப்பிள்ளைக்குன்னு ஒரு செயின் முடிஞ்சா போடுங்கோ. மத்தபடி ட்ரெஸ், மத்ததுக்கெல்லாம் நாங்க பாத்துக்கறோம்” பையனின் அம்மா.
“இனியாவுக்கு பதினைஞ்சு பவுன் நகை போடறேன். மாப்பிள்ளைக்கும் செயின் வாங்கியிருக்கேன். பாத்திரம் பண்டமெல்லாமும் வாங்கி வச்சுருக்கேன்”.
பையனுக்கும் பொண்ணுக்கும் புடிச்சா மேற்கொண்டு பேசலாம்னு நெனைக்கிறேன்” என்றார்.
இப்படியும் மனிதர்களா என்று ஆச்சர்யப்பட்டனர் இனியா குடும்பத்தினர்.
அடுத்தடுத்து நிச்சயதார்த்தம், திருமணம் என்று நாள் குறிக்கப்பட இனியாவிற்கு ஒரு பக்கம் பயமும் இருந்தது.
எல்லாம் பாஸிட்டிவாக அமையும் போது ஒரு சின்ன சந்தேகமும் கூடவே இருந்தது.
பெண்ணும் பிள்ளையும் தனியாகப் பேசும்போது அப்பா போனதுக்குப் பின் அம்மாவும், மாமாவும் எப்படி இவளைப் பார்த்து பார்த்து வளர்த்தார்கள் என்பதும், இவள் கஷ்டப்பட்டுப் படித்ததும் நினைவில் வந்தன.
டீயின் கடைசி சொட்டு வாயில் படும்போது மொபைல் மணியடித்தது.
அசோக்தான் போன் செய்தான்.
“ஹாய் இனியா, குட் மார்னிங். என்ன பண்றீங்க?”
“சொல்லுங்க அசோக், இப்பத்தான் எழுந்தேன்” என்றாள்.
“அதான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். நம்ப கல்யாணத்துக்கு அப்புறம் ஒங்கம்மா என்ன பண்ணுவாங்க?”
“அதப்பத்திதான் யோசிக்கிறேன். அம்மா தனியா இருக்கனும். அவங்களுக்கும் அறுபது வயசாகுது....” என்று இழுத்தாள்.
“அதான் நாங்க இப்ப இருக்கிற ப்ளாட்டிலேயே ஒரு சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட் விலைக்கு வந்தது. சின்னதா இருக்கும்னு நெனைச்சோம். ஆனா இப்ப நாங்க அதை வாங்கிடலாம்னு இருக்கோம். என்னுடைய கிப்ட் உனக்கும் உங்கம்மாவிற்கும். ஆர் யூ ஹேப்பி?”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில அசோக். ஐ லவ் யூ அசோக்” என்று சொல்லிவிட்டாள். எத்தனை வெட்கம் அந்த முகத்தில்.
இது எல்லாமே அசோக்கின் பெற்றோர்கள் முடிவு. நிறைய திருமணங்களில் பணம் காசு பிரச்சினையை விட பெண்ணின் பெற்றோர், பிள்ளையின் பெறறோரின் ஈகோவினால் மனஸ்தபங்களும், வருத்தங்களும், இவ்வளவு ஏன் விவாகரத்தும் நடக்கிறது.
“நம்ப கிட்ட எல்லா வசதியும் இருக்கு. நல்ல குடும்பமா, நல்லப் பெண்ணா கிடைச்சா போதும்” என்று சொன்னவள் அசோக்கின் அம்மா.
நாட்டில் நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லோரையும் ஒரே மாதிரி பேசுவதும், மதிப்பிடுவதும் தவறு என்று இந்தக் கல்யாணத்திற்கு பிறகு நிறைய பேருக்குப் புரிந்தது.
நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்.

Leave a comment
Upload