
உ
ப்ரஹ்மமயீ
ஈத்ருகித் யவிநிர்தேச்யா சேச்வரத்வ விதாயினீ
ஈசாநாதி ப்ரஹ்மமயீ சேசித்வாத்யஷ்ட ஸித்திதா
வேண்டுவதை வேண்டியபடி அளிப்பவள்.
இப்படிப்பட்டவள் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாதவள் அம்பிகை. ஒளி ரூபமாய்த் திகழ்பவள் பராசக்தி.
ஆதி காலத்தில் எங்கும் ஒரே சமுத்திரமாய் இருந்தது. மகாவிஷ்ணு ஆதிசேஷனின் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது அவரின் காது மடல்களிலிருந்து மது, கைடபர்கள் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினார்கள்.
மகாபலம் பொருந்திய அவர்கள் சமுத்திர ஜலத்தில் வளர்ந்து வந்தார்கள். எங்கிருந்து வந்தோம்? எங்கும் நீர்ப் பிரவாகம், என்று யோசிக்கும்போது ஆகாயத்திலிருந்து அம்பிகையின் பீஜா மந்திரம் ஒலிக்கிறது.
அதையே திடமான மனதுடன் சொல்லிக் கொண்டிருக்கையில் அம்பிகை ஒரு அழகான மின்னல் போன்ற ஒளியுடன் அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் விரும்பியபடி மரணமடைவதற்கான வரத்தையும் அளிக்கிறாள்.
அம்பிகையால் வரமளிக்கப் பட்ட அவர்கள், கொழுப்பு அதிகரித்து அனைவரையும் துன்புறுத்தி வந்தார்கள். அவர்களை அழிக்க மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்தபோது அவர் யோகமாயையின் பிடியில் சிக்கி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.
தேவியை ஆழ்ந்து பணிந்த பிரம்மாவின் பிரார்த்தனையைக் கேட்டு அம்பிகை மகாவிஷ்ணுவை விட்டு விலகி பேரண்டமாக ஓங்கி நின்றாள்.
மகாவிஷ்ணுவிற்கும், மது கைடபர்களுக்கும் ஐந்தாயிரம் வருடங்கள் போர் நிகழ்ந்தது. ஆனால் அம்பிகையின் வரம் பெற்றவர்களை வதம் செய்ய முடியவில்லை. எனவே மகா விஷ்ணு பக்தியுடன் மகா சக்தியான பராசக்தியைத் துதித்தார். அம்பிகையின் அருளால் அவர்களை மாயையில் ஆழ்த்தி, அவர்களைக் கொல்கிறார். பராசக்தியாலேயே இவ்விஷயம் சாத்தியமாயிற்று.
ஈசுவர பாவத்தை அளிப்பவள். பிரம்மா, விஷ்ணு, சிவன், ருத்ரன், சதாசிவன் என்று ஐந்து வடிவாக பஞ்சப்பிரம்மம் என்ற வடிவாக இருப்பவள். பஞ்சப் பிரம்மஸ்வரூபிணீ, ச்ரூஷ்டி கர்த்த்ரீ, பிரம்மா ரூபா, கோவிந்த ரூபிணீ, சதாசிவ அனுக்கிரஹதா, என்று அவள் ஸ்ரீ லலிதாவில் போற்றப் படுகிறாள்.
எட்டு விதமான சித்திகளை அளிப்பவள். யோக மார்க்கத்தில் பக்தர்களுக்கு உதவியாக இருக்கிறது இவைகள். வேதங்கள் அனைத்தினாலும் அவளே உலகிற்கு காரணம் என்று அறியப் பட்டது. இவ்வுலகில் வேறு தேவதைகளை வழிபடுவதை விட, அம்பிகையின் பாத கமலங்களில் மனதை லயிக்கச் செய்தவர்களே அவள் அருளைப் பூரணமாகப் பெற முடியும். அனைத்தையும் உற்பத்தி செய்யும் உலக சக்தி அவள். அவளின் சங்கல்பத்தினாலேயே எல்லாம் சிருஷ்டிக்கப் பட்டது.
ஒரு நாடக ஆசிரியர், தான் எழுதிய கதைக்கு நடிகர்களைத் தேர்வு செய்து, நடிக்க வைப்பது போல், அம்பிகை தான் நிர்மாணித்த உலகில் இந்திரஜாலம் போன்ற நாடகத்தை நடத்துகிறாள். தாமரை மலர் போன்ற கண்களால் அவள் தன பக்தர்களைக் காக்கிறாள். அவளின் உருவமே மனதிற்கு அமைதியைத் தருகிறது. அவள் நம் அருகிலேயே இருக்கிறாள். நினைப்பவர், நினைத்த மாத்திரத்தில் வருபவள் அவள். இதையே அபிராமி பட்டர்,
வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே” என்கிறார்.
விண்ணவர்கள் யாவரும் வந்து வணங்கும் அன்னைக்கு எதுவும் எளிதுதான். பரந்த நெற்றியை உடைய, அவள் அழிவற்றவள். நெஞ்சில் அவளை அறியாதவரை அணுகி அருள் புரியாதவள். அவளை அறியாதவர்களையும் தன்பால் ஈர்க்கும் சக்தி படைத்தவள். அவளை அன்புடன் வழிபடத் தோன்றியதும் நம் முன் ஜென்மப் புண்ணியமே என்கிறார்.
லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யா லஹரியில் அம்பிகைக்கு நெற்றிக் கண் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஈசன் நெற்றிக் கண் கூட சக்திதான் என்கிறது சிவபுராணம்.
தினந்தோறும் மூன்று வேலையும் சந்தியா என்ற பெயரால் அம்பிகையின் குண விசேஷங்களை முனி கணங்கள் துதிக்கின்றன என்கிறது தேவி பாகவதம்.
நாம் உணர்வுடன் இருப்பது, கட்டையைப் போல் கிடப்பதும் அவள் அருளால்தான். அவளை ஆராதிக்கும் முறை அறிந்து வழிபட்டு அவளின் கடாக்ஷத்தை பக்தர்கள் அடைகிறார்கள்.
அழிவில்லாத பரம்பொருள் அம்பிகை. அவள் முடிவில்லாத நிரந்தரம் வாய்ந்தவள். அவளும் ஈசனும் பிரிக்க முடியாதவர்கள். இந்த உலகமே சிவசக்தி ரூபம். வேத வழியில் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை அளிப்பவள் என்கிறார் அபிராமி பட்டர்.
அம்பிகையை வழிபடுவதை, தாய்மை வழிபாடு என்கிறார்கள். அம்பிகையே இந்த ஜகத்துக்கு தாயாக இருப்பவள். ஹீரீம் என்ற பீஜமாக இருப்பவள். அதுவே பிரபஞ்ச ஒலி.
நம்மீது கருணை காட்டி, நம்மை எல்லாம் பக்குவப்டுத்தி, வளர்க்கும் அன்னை. அவளை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியையே அடையும். அவளின் அருள் பெற்றவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.

Leave a comment
Upload