தொடர்கள்
அனுபவம்
விழிப்புணர்வு - சுந்தர் பிச்சை

20260520071627623.jpeg

விழிப்புணர்வு ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா... "சுத்தி என்ன நடக்குது, நமக்குள்ள என்ன நடக்குதுன்னு கண்ணை முழிச்சு, கவனமா பார்க்குறது!"

இன்னும் கொஞ்சம் ஆழமா, சொல்லணும்னா... வாழ்க்கைங்கிற வண்டியை ‘ஆட்டோ பைலட்’ மோடுல போடாம, ‘அலார்ட்’ மோடுல வச்சு ஓட்டுறதுதான் விழிப்புணர்வு.

இதை ஒரு மூணு வகையா பிரிச்சுப் பார்த்தா டக்குனு புரியும்:

1. நமக்குள்ளே பார்க்கும் விழிப்புணர்வு

நம்ம மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு நமக்கே தெரியணும்.

உதாரணத்துக்கு: ஆபீஸ்ல மேனேஜர் திட்டுனா கோபம் வரும். அந்த நேரத்துல, "ஆஹா... இப்ப நமக்குக் கோபம் வருது, நாக்கு துடிக்குது, இப்போ வாயைத் திறந்தா வேலை காலி ஆகிடும்" அப்படின்னு மனசுக்குள்ளேயே அலர்ட் ஆகி, ‘சைலண்ட்’ மோடுக்கு மாறுறோம் பாத்தீங்களா... அதுதான் சுய விழிப்புணர்வு.

2. சுத்தி நடப்பதைப் பார்க்கும் விழிப்புணர்வு

நாம இருக்குற இடத்தை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்குறது.

உதாரணத்துக்கு: ரோட்ல நடந்து போகும்போது ஹெட்போன் மாட்டிட்டு, பாட்டு கேட்டுட்டே போனா அது ‘மறதி’. பின்னாடி வர்ற வண்டிக்காரன் ஹார்ன் அடிக்கிறானா, ரோடு சரியா இருக்கான்னு கண்ணும் கருத்துடா போறது விழிப்புணர்வு. (இல்லனா நேரா போயி சாக்கடையிலதான் விழ வேண்டியிருக்கும்!)

3. காலத்திற்கேற்ற விழிப்புணர்வு

காலம் மாற மாற, நாமளும் சில விஷயங்களை அப்டேட் பண்ணிக்கணும்.

உதாரணத்துக்கு: "உங்க அக்கவுண்ட் பிளாக் ஆகிடுச்சு, இந்த லிங்க்கை கிளிக் பண்ணுங்க"ன்னு வர்ற வாட்ஸ்அப் மெசேஜை நம்பி ஓடிபி (OTP) குடுக்காம, "டேய்... நீ ஏமாத்துற குரூப் தானே!"ன்னு உஷார் ஆகுறதுதான் டிஜிட்டல் விழிப்புணர்வு.

பல்லு முளைக்கும் பருவம் (பள்ளி & கல்லூரி காலம்)

இந்த வயசுல விழிப்புணர்வுங்கிறது ரொம்ப முக்கியம். ஏன்னா, அப்போதான் ‘உலகமே என் கால் அடியில’ அப்படின்னு ஒரு ஃபீலிங் இருக்கும்.

படிப்பில் விழிப்புணர்வு: "நாளைக்கு எக்ஸாம், இன்னைக்கு நைட்டு மட்டும் படிச்சா போதும்" அப்படின்னு நினைக்கிறதே ஒரு மாயை. சிலபஸ் புக் ‘பாகுபலி’ மாதிரி இருக்கும், நாம ‘கட்டப்பா’ மாதிரி மாட்டிக்கிட்டு முழிப்போம். அதனால, எப்போ படிக்கணும்ன்ற விழிப்புணர்வு வேணும்.

நட்பில் விழிப்புணர்வு: கூடவே இருந்து ‘மச்சான், நீ எக்ஸாமுக்கு படிக்கவே வேணாம், நாம ஒண்ணா சேர்ந்து ஃபெயில் ஆவோம்’ அப்படின்னு சொல்ற ‘பஞ்ச பாண்டவ’ நண்பர்களைக் கொஞ்சம் தள்ளியே வைக்கணும். ஏன்னா, ரிசல்ட் அன்னைக்கு அவன் பாஸ் ஆகி ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குவான், நாமதான் ‘சிங்காரவேலன்’ கமல் மாதிரி விக்கித்து நிப்போம்.

பர்ஸ் நிறையும் பருவம்

காலேஜ் முடிஞ்சு வேலைக்கு வந்தாச்சு. கைநிறைய சம்பளம் (அல்லது இஎம்ஐ கட்ட தேவையான அளவு சம்பளம்) வரும் காலம்.

பண விழிப்புணர்வு: முதல் மாச சம்பளம் வந்த உடனே, ‘இந்த உலகத்தையே நான் விலைக்கு வாங்குவேன்’ அப்படின்னு கிரெடிட் கார்டை தேய்க்கக் கூடாது. அப்புறம் மாசக் கடைசியில், ‘பழைய சோறு இருக்கா?’ன்னு அம்மாவிடம் கேட்க வேண்டிய நிலைமை வரும். ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ இருந்தா, நிம்மதி ‘கானா’ பாடிட்டு போயிடும். சேமிப்பு ரொம்ப முக்கியம் அமைச்சரே!

ஆரோக்கிய விழிப்புணர்வு: ‘எனக்கு வயசு 25 தான் ஆகுது, நான் எதை வேணாலும் சாப்பிடுவேன்’னு பீட்சா, பர்கர், பிரியாணின்னு உள்ளே தள்ளுனா, 30 வயசுல தொப்பை ‘ஹலோ’ சொல்லும். அப்புறம் ஜிம்முக்கு ஃபீஸ் கட்டிட்டு, போகாமலே வொர்க்-அவுட் பண்ற விசித்திரப் பிறவியா மாற வேண்டி வரும்.

"முடி’ நரைக்கும் பருவம் (குடும்பம் & நடுத்தர வயது)

கல்யாணம் ஆகி, குழந்தைகள் பிறந்து, ‘வாழ்க்கை தத்துவம்’ தானா புரியுற காலம் இது.

உறவுகள் விழிப்புணர்வு: ஆபீஸுக்கும் வீட்டுக்கும் ஓடியே பாதி உசுரு போயிடும். இங்க விழிப்புணர்வு என்னன்னா, ‘மனைவி சொல்வதே மந்திரம்’. அதை விட்டுட்டு ‘நான்தான் இந்த வீட்டுக்கு ராஜா’ன்னு சீன் போடக் கூடாது. ஏன்னா, சமையலறையும், சாப்பாட்டுத் தட்டும் அவங்க கையிலதான் இருக்கு.

வார்த்தை விழிப்புணர்வு: இந்த வயசுல கோபம் அதிகமா வரும். ஆனா, ‘வார்த்தையைக் கொட்டினா அள்ள முடியாது, விவாகரத்து நோட்டீஸைத்தான் அள்ளணும்’னு விழிப்புணர்வோடு, அமைதியா ‘ஓம் சாந்தி’ சொல்லப் பழகணும்.

‘பல்’ உதிரும் பருவம்

ரிட்டயர்ட் ஆகி, திண்ணையில உட்கார்ந்து பேப்பர் படிக்கிற காலம்.

பேச்சில் விழிப்புணர்வு: "நாங்க அந்தக்காலத்துல..." அப்படின்னு ஆரம்பிச்சாலே இந்தக்காலப் பசங்க ‘எஸ்கேப்’ ஆகிடுவாங்க. அதனால, அட்வைஸ் பண்றதைக் குறைச்சுக்கிட்டு, ‘அமைதியோ அமைதி’யா இருந்தா, பேரன் பேத்திகளுக்கு நம்மள ரொம்பப் பிடிக்கும்.

மன விழிப்புணர்வு: ‘அவன் ஏன் அப்படிப் பண்ணான்? இவன் ஏன் இப்படிப் பேசினான்?’ அப்படின்னு அடுத்தவங்க பஞ்சாயத்தை ஆராய்ச்சி பண்ணக் கூடாது. வர்றது வரட்டும், போறது போகட்டும்னு ‘நோ டென்ஷன், ஒன்லி பென்ஷன்’னு இருக்க கத்துக்கணும்.

விழிப்புணர்வுங்கிறது வண்டியோட ‘பிரேக்’ மாதிரி. அது இல்லைன்னா வாழ்க்கை ‘ஆக்சிடென்ட்’ ஆகிடும். அதனால, எந்தக் காலத்துல இருந்தாலும், கண்ணையும் காதையும் (கொஞ்சம் வாயையும்) திறந்து வச்சுக்கிட்டு விழிப்புணர்வோடு வாழ்ந்தா, வாழ்க்கை ‘சூப்பரோ சூப்பர்’!

வாழ்க்கையை ரொம்ப சீரியஸா எடுத்துக்காம, விழிப்புணர்வோடு ‘ஜாலியா’ வாழப் பழகுவோம்!