தொடர்கள்
கவர் ஸ்டோரி
விழிப்புணர்வு - ஒரு ஆன்மீகப் பார்வை – மோகன் ஜி

20260518204858161.jpg

இன்றைய வாழ்க்கையில், விழிப்புணர்வு என்பது அத்தியாவசியமான தேவை என்பதை உணர்கின்றோம். அலைபேசியை உபயோகிக்கும்போது கவனம்; கடவுச்சொல் பயன்பாட்டில் ஜாக்கிரதை என விழிப்புணர்வென்பது மானம் காக்கும் ஆடையை விடவும் முக்கியத்துவம் பெற்று விட்டது.

மேற்சொன்ன விழிப்புணர்வையும் தாண்டி, அதற்கு ஒரு ஆன்மீக இயல்பு உண்டு என்பதை மறுக்க முடியாது.

இம்மைக்கும் மறுமைக்கும் இன்றியமையாத ஒரு கலனே ‘விழிப்புணர்வு’ ஆகும். முக்கியத்துவம் வாய்ந்த விழிப்புணர்வு நம்மால் குறைந்த அளவே புரிந்து கொள்ளப் படுவது நம் துரதிர்ஷ்டமே!

நமது ஒவ்வொரு எண்ணத்திற்கும் உணர்வெழுச்சிக்கும் பின்னால் இயங்கும் சாட்சியாக இந்த விழிப்புணர்வை சொல்லலாம்.

நம்மைச் சுற்றி உள்ள உலகத்தையும், நமக்குள்ளே இயங்கும் உலகத்தையும் அறிந்து கொள்ள விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

இந்த விழிப்புணர்வு ஞானத்திற்கு திறவுகோல். மனசாந்திக்கு மாமருந்து. நமது ஆன்மீக மரபுகளும் தத்துவங்களும் இதையே போதிக்கின்றன. நம்மைச் சுற்றி நடப்பவற்றையும் நம் எண்ணங்களின் போக்கையும் பற்றிய விழிப்புணர்வு தேவை. இது இல்லாத பட்சத்தில், புலன்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் அடிமையாகிப் போகின்றோம். அவையே நம்மை கொண்டு செலுத்துகின்றன.

விழிப்புணர்வை ஆங்கிலத்தில் AWARENESS என்றும் வடமொழியில் ஜாக்ரதா என்றும் பிரக்ஞா என்றும் சொல்லப் படுகிறது.

20260518204824794.jpg

‘ஆத்மானம் வித்தி’என்று நம் உபநிடதங்கள் மொழிகின்றன. இதற்கு ‘உன்னை நீயே அறிந்து கொள்’ என்பது பொருளாகும்.

‘இன்பத்தின் போதும் துன்பத்தின் போதும் கலங்காது தன்னுணர்வுடன் நிலைத்திருப்பவனே ஞானி ஆகின்றான்’ என்கின்றது கீதை.

நாம் சந்தோஷத்தையும் ஆன்மீக மேம்பாட்டையும் வெளியே தான் தேடிக் கொண்டிருக்கிறோம் .ஆனால், உண்மையில் அவை நமக்குள்ளே தான் இருக்கின்றன என்பதை விழிப்புணர்வு உள்ளவர்கள் விரைவில் அறிந்து கொள்கிறார்கள்.

விழிப்புணர்வு என்பது நடப்பனவற்றை கூர்ந்து கவனிக்கும் நெறிமுறை. இது எதையும் நியாயப்படுத்துவதில்லை; கண்டனம் கொள்வதில்லை; தீர்ப்பாக எதையும் முடிந்து கொள்வதில்லை. மதிப்பிடுவதும் இல்லை. யாவற்றுக்கும் நுண்ணிய சாட்சி பூதமாக விளங்குகிறது.

நமது எல்லா செயல்களிலும் விழிப்புணர்வு பின்புலமாக செயல்படுகையில், செய்வன யாவும் சிறந்தவை ஆகின்றன. கூர்ந்த கவனத்துடன் சமைக்கப்படும் உணவு ருசியாக அமையும். கற்றுக்கொள்ளும் வித்தை மேன்மையாக உருக்கொள்கிறது. மேற்கொள்ளப்படும் கலைகள் சிறப்பாக அமைகின்றன.

அவ்விதமே நாம் மேற்கொள்ளும் தியானமும் பூஜையும் சிறந்த பலன்களை அளிக்கின்றன.

விழிப்புணர்வுடன் வாகனமோட்டுபவன் விபத்துகளில் சிக்குவதில்லை. அண்டை அயலாருடன் வீணான விரோதங்கள் ஏற்படுவதில்லை. கவனத்துடன் செய்யும் தொழிலால் செல்வத்தையும் நேரத்தையும் சேமிக்க முடியும்.

20260518205232211.jpg

நமது எண்ணங்கள் நம் வசம் இருப்பதில்லை. அவை அலைபாயும். மரத்துக்கு மரம் தாவும் குரங்கிற்கு ஒப்பானது மனம் என்பார்கள். நல்ல பயிற்சியின் மூலமே விழிப்புணர்வை நாம் வளர்த்துக் கொள்ள முடியும்.

இதைக் கருத்தில் கொண்டே பகவான் ஸ்ரீ ரமணர்

20260518205650571.jpg

நான் யார்? எனும் சுயவிசாரத்தை மேற்கொள்ளுமாறு உபதேசிப்பார். இந்தக் கேள்விக்கு விடை நோக்கி நம் விழிப்புணர்வின் கூர்மை ஒன்றே விட்டுச்செல்லும்.

நல்ல விழிப்புணர்வுடன் இருப்பவர், தனது எதிர்வினைகளின் மேல் கவனம் வைப்பார். காரண காரியங்களை சீர்தூக்கிப் பார்த்தே எந்த தருணத்தையும் எதிர்கொள்வார். உணர்ச்சிகள் அவர்தம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். தன்னை ஆள்பவனே அகிலத்தை ஆள இயலும்.

விழிப்புணர்வு கூர்மை கொள்வதால் கவனம் சிதறாது.

பிரச்னைகளுக்கு சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

மன அழுத்தங்களுக்கு ஆட்படாத அமைதி நிலைக்கும்.

தன்னைத் தான் அறியும் சுகானுபவம் கைகூடும்.

நமது விழிப்புணர்வை விடாமுயற்சியால் செறிவானதாக ஆக்க முடியும்.

1.செய்யும் செயலில் மனதைச் செலுத்தி முழு ஈடுபாட்டுடன் இருத்தல்.

2. பிறர் பேசுகையில் கூர்ந்து கவனித்தல்.

3. தினந்தோறும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து தியானம் மேற்கொள்ளுதல். நம் எண்ணங்களை அப்போது கூர்ந்து கவனித்தல்.

4. பிறருடன் பேசும்போது மிகச்சிறிய இடைவெளியேனும் விட்டு பதில் உரைத்தல்

ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம், ‘நீங்கள் இவ்வளவு தியானம் செய்கிறீர்களே என்ன பலன் கண்டீர்கள்?’’ என்று கேட்கப் பட்டது.

அதற்கு விவேகானந்தர் சொன்ன பதில் இது :

20260518205127303.jpg

“நண்பரே! உண்மையில் இந்த தியானத்தால் நான் எதையும் பெறவில்லை. ஆனால், இழந்தவையே அதிகம். என் கோபத்தை இழந்தேன். என் பயங்களை இழந்தேன். என் கவலைகளை இழந்தேன். என் அகந்தையை இழந்தேன்‘’ .

விழிப்புணர்வு என்பது மனப்பயிற்சியினால் மேன்மையுறுகின்ற வாழ்க்கைக் கலையாகும்.

இன்னமும் தாமதமாகி விடவில்லை. முயற்சியுடன் நமது விழிப்புணர்வை வளர்த்துக் கொள்வோம்.