
என்னடா இது! தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா!!! நாம் அந்த நிலைக்குதான் சிறிது சிறிதாக வந்துகொண்டிருக்கிறோம். இப்பொழுதே விழித்துக்கொண்டால் சேதாரமில்லாமல் செழிப்போடு வளரலாம். சரி சரி புதிர் போடாமல் விடயத்திற்கு வந்துவிடுகிறேன்.
சுமார் 30 வருடங்களாக நம் தமிழ்நாட்டில் கல்வி சதவிகிதம் பெரிதாக வளர்ந்துள்ளது. எந்த அளவுக்கு இது மகிழ்ச்சியான செய்தியோ, அதே அளவிற்கு பல விடயங்களில் நாம் பின்னோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம், என்பதும் உண்மை. படித்து விட்டோம் என்பதாலேயே, நிறைய விடயங்களை பூமர்(boomer) என்றும், பழைய பஞ்சாங்கம் என்றும், ஒதுக்கி நம்மை நாம் தனிமையாக்கி கொண்டிருக்கிறோம்.
தனித் தனி மனிதர்களாக வாழ்ந்துக்கொண்டிருந்த மனித இனம், அறிவு வளர வளர குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது. மனித உறவுகளை வளர்க்கும் இடமாக குடும்பம் இருந்தது. இப்போது இந்த அமைப்பே சிதைந்து வருகிறது.
‘நான், என் விருப்பம்”, “எனக்கு பிடித்தது,” “என்னுடைய வாழ்க்கை” என்பது தான் படித்தவர்களிடையே அதிகம் புழங்கும் வார்த்தை. ஆனால் நீ யாராக இருந்தாலும் வீட்டில் நீ நிம்மதியாக உறங்க வேண்டும். எதில் தனித்து செயல்பட வேண்டும் எதில் குடும்பத்துடன் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.
காலையில் வெள்ளென எழுந்து, பேருந்து ஏறி உறவினர் வீட்டு திருமணத்தில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு, மீண்டும் வந்து வெயிலில் வேலைப் பார்த்தனர். ஆனால் இன்றோ “வார இறுதி எனக்கானது’, யார் இதற்கெல்லாம் செல்வார்கள்” என்பது இப்போது நினைக்கிறோம் ,
நம் குழந்தைகளுக்கு இது போன்ற குதூகலமும், மகிழ்ச்சியும், உறவினர் சந்திப்பும் தேவை என நாம் உணர்வதில்லை. எனக்கு “கிடைக்காதது” என் குழந்தைக்கு கிடைக்க வேண்டும் ,என நினைக்கும் அளவு, எனக்கு “கிடைத்த” சிறு வயது மகிழ்ச்சிகள், என் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏன் இல்லை? காதணி விழா, கெடா வெட்டு, திருமணம், ஊர்த் திருவிழா, இப்படியெல்லாம் வைத்தது பிற்போக்கு தனமல்ல மக்கள் ஒன்று கூடி குலாவினால்தான், மகிழ்ச்சியாக இருந்தால் தான் மனிதனின் மனமும், உடலும் நலம் பெறும்,.
வெளிநாட்டவரும் பிறந்தநாள் விழா, ஹாலோவீன், கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் ஞானத்தோடும், அறிவோடும் யோசித்தார்கள். பின்னால் வந்தவர்கள் அறிவால் மட்டுமே யோசித்தார்கள். மகிழ்ச்சி என்பது மனதோடு சேர்ந்தது. நீங்கள் உங்கள் குழந்தைகள் முன் உங்கள் உறவினர்களையும், பெற்றோர்களையும் பேணும் விதத்தை பார்க்கும் குழந்தை, நாளை அதையே, உங்களுக்கும் செய்யும்.
உறவுகள் மனித மனதிற்கான அச்சாணி. உறவுகளால் பலன் உண்டோ, இல்லையோ அவர்கள் இருப்பது ஒரு பலம். வெளிநாட்டில் கவுன்சிலிங் என்ற பெயரில் காசு வாங்கிக் கொண்டு இதைத் தான் சொல்கிறார்கள் மன மகிழ்ச்சிக்கு. வீட்டிலும் சரி உறவினர்களோடும் சரி அளவளாவுங்கள், கிண்டல் கேலி பேசுங்கள். சேர்ந்து உணவருந்துங்கள் விழாக்களில் முடிந்தவரை கலந்து கொள்ளுங்கள். படித்துவிட்டோம், ஸ்டேடஸ், சொகுசு என்ற பெயரில் குடும்ப உறவுகளிடமிருந்து ஒதுங்கி தனிமையாகி விடாதீர்கள் பிறகு அதிலிருந்து மீள்வது எளிதல்ல.
வடிவேல் அவர்கள் சொல்வது போல் “ பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ் மட்டம் வீக்கு” என்றபடி படிப்பு, பணம் எல்லாம் இருந்தாலும், உடலும் மனமும் நன்றாக இருத்தல் முக்கியமல்லவா? இப்பொழுதே கவனம் செலுத்தி விழிப்புணர்வோடு செயல்படுங்கள் வளமான வாழக்கை உங்களுக்கு மட்டுமல்ல வளமான சமுதாயமாக இருக்கும். குடும்பங்கள் தான் சமுதாயம். குடும்ப உறவுகளை வளர்ப்பதில் விழிப்புணர்வு பெறுவோம்.

Leave a comment
Upload