தொடர்கள்
கதை
அரிச்சந்திரனும் தர்மனும் - கி. ரமணி)

20260520062643589.jpeg
அரிச்சந்திரன் ரொம்ப பரபரப்பாக யோசித்தார்.

"ஆம் தர்மன் தான் இதற்கு சரியான தீர்வு." என்று முடிவெடுத்தார்.

தலைமைச் செயலகத்தில்,


செய்தி - மக்கள் தொடர்புத் துறையில் இருந்து வந்த உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் முக்கியமான வாசகங்கள் கொண்ட புதிய போர்டுகளை மிகக் குறைந்த காலத்தில் அமைக்கும் பொறுப்பு, அரசு அதிகாரி அரிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

தர்மனுக்கு போன் செய்து வரச் சொன்னார். அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடி வந்தான் தர்மன்.

தர்மன் ஒரு வளர்ந்து வரும் சிறிய அரசு பெயிண்டிங் காண்ட்ராக்டர்.

எல்லா விதமான பெயிண்டிங் வேலையும் அத்துப்படி. அரிச்சந்திரனின் மனைவியின் தூரத்து உறவு. மரியாதையானவன். நெளிவு சுளிவு தெரிஞ்சவன். பெயிண்ட்டுக்கு டர்பன்டைன் மாதிரி, சூழ்நிலைக்கு ஏற்ப கலந்து ஒன்றி உதவி செய்வான்.

பவ்யமாக கூனிக் குறுகி நின்று தர்மன் அரிச்சந்திரனைப் பார்த்தான்.

"உக்காரு தர்மா" என்றார் அரிச்சந்திரன்.

"நீ மூணு அடிக்கு ரெண்டு அடி போர்டு எல்லாம் செய்வியா? அதுல அழகா எழுத்து எழுதணும். உடனே நூறு பீஸ் ஆர்டர் இருக்கு."

"ஸ்டீல் ஷீட்ல, பிரைமர் அடிச்சு, வெள்ளை எனாமல் அடித்து, கருப்பு எழுத்து... இப்படி பண்ணா போதுமா சார்?"

"போதும்பா தாராளமா."

"செஞ்சுக்கலாம் சார்."

"நூறு பீஸ்னு வச்சுக்கோ. ஒரு பீஸ் என்ன ஆகும் விலை?"

"ஆயிரத்தி ஐந்நூறு ரூபாய் கிட்ட ஆகும். நமக்குன்னா கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம் சார்."

"ஒவ்வொரு போர்டிலும் அஞ்சு தமிழ் வார்த்தை தான் வரும். முதல் லைன்ல ஒரு வார்த்தை, அடுத்தது ரெண்டு வார்த்தை, அதுக்குப் பிறகு ரெண்டு வார்த்தை. அவ்வளவுதான்.

இதை நீ சப்ளை பண்ணா மட்டும் போதாது. தலைநகரத்தில் நிறைய அரசு அலுவலகங்களுக்கு போய் போர்டை ஃபிக்ஸ் பண்ணணும். அரசு ஊழியர், பொதுமக்கள் எல்லாரும் பாக்கிற இடத்துல போர்டு வைக்கணும். இது முக்கியமான அரசாங்க உத்தரவு."

"பண்ணிட்டா போச்சு சார். ஃபிக்சிங்கும் பண்ணணும்னா ரேட் கூட ஆகுமே..."

"பரவால்ல. ரேட் நல்லா போட்டுக்கோ. வேலை செய்யறதுக்கு நல்ல ஆளாப் போடு. எனக்கு, அரசுக்கு, எல்லாம் குவாலிட்டி நல்லா இருந்தாலே போதும். அமைச்சர்ங்க, பெரிய அதிகாரிங்க எல்லாம் பார்ப்பாங்க. போர்டு நல்லா இல்லன்னா என்னை பெண்டு கழட்டிடுவாங்க."

"இல்ல சார். ஜம்முன்னு பண்ணிட்டா போச்சு."

"அதுதான் உன்ன கூப்பிட்டேன். நீ நம்பிக்கையானவங்கிறதுனால உன்கிட்டயே கொடுத்துடலாம் என்று பார்க்கிறேன்."

"டெண்டர் கிடையாதா சார்?"

சிரித்தார்.

"இது ரொம்ப சின்ன வேலை தானேப்பா? நேரா உனக்கே கிடைக்கும் படி வழி செஞ்சுடுவேன். எல்லாம் நன்றாக இருந்தது என்றால் இன்னும் 500 போர்டுக்கு மேல் ஆர்டர் வரும். மாநிலம் முழுக்க எல்லா அரசு ஆபீஸ்லயும் போர்டு மாட்டணும்."

"சார் இந்த ஆர்டர் எப்படியும் எனக்கு வர மாதிரி பாத்துக்கோங்க சார். உங்களுக்கு ரொம்ப நன்றி."

"அதுக்குத்தானே இப்ப உன்னைக் கூப்பிட்டேன். எனக்கு குவாலிட்டி தான் முக்கியம். நீ நல்லா பண்ணுவேன்னு ஒரு நம்பிக்கை. விலை என்ன சொன்ன? 1500 ரூபாயா? கொஞ்சம் இன்னும் ஏத்திக்கப்பா. போர்டு மாட்டறதுக்கும் சேத்து. அப்பறம் கவர்மெண்ட் விஷயம் இல்லயா... பேமெண்ட் டிலே ஆச்சுன்னா உனக்கு தாங்கணும் இல்லையா."

"ஒரு பீஸுக்கு 2500 ரூபாய் வெச்சுக்கலாமா, சார்?"

"3000 ரூபாய் வச்சுக்கோப்பா ஒரு பீஸுக்கு."

"சரி சார்! ரொம்ப நன்றி சார். பிரமாதமா பண்றன் சார் போர்ட. எப்போ ஆர்டர் பண்ணுவீங்க சார்? டெலிவரி, ஃபிக்சிங் எப்போ சொல்லிடுங்க."

"ஒரு விஷயம். 3000 ரூபாய் சொன்னேன் இல்லையா ஒரு பீஸுக்கு? அதுல நீ எனக்கு 500 ரூபாய் கொடுத்துடணும். ஆர்டர் உனக்கு கொடுக்கறதுக்கு நான் சில பேர கவனிக்க வேண்டி இருக்கு. அவசரமான ஆர்டர் என்பதால் ஒனக்கு ஆர்டருக்கு முப்பது பர்சென்ட் அட்வான்ஸ் கிடைக்கும் படி செய்யறேன். அதிலேயே மொத்தமா எனக்கு கொடுக்க வேண்டிய அம்பதாயிரம் பணத்தை கொடுத்துடணும். மிச்சமெல்லாம் உனக்குத்தான்.

அடுத்த மாசம் பாக்கி ஐநூறு பீஸ் ஆர்டரும் வந்துவிடும்."

"ரொம்ப நன்றி சார். நிச்சயமா செய்யறேன் சார்."

"அடுத்த திங்கட்கிழமை ஆபீசுக்கு வா. ஆர்டர் வாங்கிட்டு போயிடலாம். உன் கொட்டேஷன், உன் கம்பெனி டீடைல்ஸ், எல்லாம் கொடுத்துட்டு போ."

அடுத்த திங்கட்கிழமை தர்மன் அரிச்சந்திரன் ஆபீஸ் சென்று ஆர்டரை வாங்கிக் கொண்டான். முப்பது பர்சென்ட் அட்வான்ஸ் எப்படி, எந்த டிபார்ட்மெண்ட்ல வாங்குவது என்று கேட்டுக்கொண்டான்.

பின்னர் "சார்! போர்டுல என்ன எழுதணும் சார்? எழுத்து சைஸ், டைப், எல்லாம் எழுதி... அதுக்கு ஒரு டிராயிங் இருந்தா கொடுங்க." என்றான்.

அரிச்சந்திரன் பீரோவில் இருந்து ஒரு பிரிண்ட் செய்யப்பட்ட ட்ராயிங் பேப்பரை எடுத்து பிரித்து காண்பித்தார்.

"இந்த ட்ராயிங்க எடுத்துக்கோப்பா. இப்படித்தான்பா எழுதணும்." என்று தூக்கிக் காட்டினார்.

லஞ்சம்

வாங்குவதும் குற்றம்

கொடுப்பதும் குற்றம்

என்று அந்த ட்ராயிங்கில் எழுதி இருந்தது.

அதை கொஞ்ச நேரம் பார்த்த தர்மன்,

"ரொம்ப நல்ல கருத்து சார். ஆனா இதெல்லாம் பார்த்து எங்கே சார் நம்ம மக்கள் திருந்தறாங்க!" என்று வருத்தப்பட்டுக் கொண்டான்.

"ஆமாம்பா. நம் ஆளுங்க திருந்தவே மாட்டாங்க." என்று அரிச்சந்திரனும் தர்மனின் வருத்தத்தில் சேர்ந்து கொண்டார்.