
ஒரு செய்யுளைப் படித்தவுடன் அதன் பொருள் நமக்குப் புரிவது ஒருவகை .
செய்யுளை வரிவரியாக படித்து, சிந்தித்து, சொல்லப்படும் பொருளை உணர்வது என்பது மற்றொரு வகை.
இந்த இரண்டாம் வகைப் பாடல்களே நம் மனதிற்கு ரசனையையும் நற்சிந்தையையும் ஊட்ட வல்லவை.
அறநெறிச்சாரம் என்றொரு சிறந்த நீதிநூல் உண்டு. இது 700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கலாம். இதை எழுதியவர் முனைப்பாடியார் என்ற சமணர். இன்று இதிலிருந்து ஒரு அரிய வெண்பாவை ரசிக்கலாம்.
இந்த வெண்பாவை மேலோட்டமாக படித்தால், வெறும் சொற்களை வெண்பா இலக்கணத்துக்குள் அடங்கும் வகையில் அடுக்கியது போலத் தோன்றும்.
பறவை அரும்பொருள் இன்சொல் முதிரை
உறுதிக்கண் ஊன் ஊண்விலங்கு - சிறியன
நீர்ப்புள் குயக்கலம் புல்லவை ஊர்வது
பேர்த்தீண்டு வாரா நெறி
இந்த வெண்பா சொல்ல வருவது நாம் வாழ்வில் மேம்பட ஆறு வகை நீதிகளாகும்.
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதல் நீதி : -
பறவை அரும்பொருள் - இங்கு பறவை என்பது பறக்கின்ற ‘ஈ’ எனப் பொருள்படும். ‘ஈ’ என்பது ஈதல் எனும் தர்மம் செய்தலையும் குறிக்கிறது.
மிகவும் பிரயாசைப்பட்டு ஈட்டிய செல்வத்தை தர்மம் செய்க என்கிறது முதல் நீதி.
இரண்டாம் நீதி :
இன் சொல் முதிரை - முதிரை என்னும் சொல் ‘கொள்’ எனும் தானியத்தை குறிப்பது. கொள் என்பது ‘இருத்து’ என்பதையும் சுட்டுகிறது.
இனிய சொற்களையே நாவிலும் மனத்திலும் இருத்திக் கொள் என்பது இரண்டாம் நீதி.
மூன்றாம் நீதி:
உறுதிக்கண் ஊன் ஊண்விலங்கு -
ஊன் ஊண்விலங்கு என்பது மாமிசத்தைப் புசிக்கும் விலங்கான சிங்கத்தினை குறிக்கின்றது. சிங்கத்திற்கு மற்றுமொரு பெயர் ‘மடங்கல்’ ஆகும் .மடங்கல் என்பது நிலை தளராமையைச் சுட்டும் சொல்.
அறவழி, சொன்ன சொல் காப்பாற்றுதல், தர்மம் போன்றவற்றை மேற்கொள்கையில், நிலை தவறாமல் இருப்பதே மூன்றாம் நீதி.
நான்காம் நீதி :
சிறியன நீர்ப்புள் -நீர்ப் புள் என்பது நீரில் வசிக்கும் உள்ளான்/உள்ளல் எனும் பறவையை குறிக்கும் சொல். உள்ளல் என்றால் கருதாதே என்றும் பொருள்.
சிறியன என்ற பதம் கீழான சிற்றின்பங்களைச் சுட்டுகிறது. எப்போதும் சிற்றின்பங்களை நுகர்வதையே கருத வேண்டாம் என்பது நான்காம் நீதி.
ஐந்தாம் நீதி:
குயக்கலம் புல்லவை- புல்லவை எனும் சொல்லை புல்+அவை என்று பிரித்து பொருள்கொள்ள வேண்டும். அதாவது, புல்லர்களாகிய கீழ் மக்களின் கூட்டம்.
குயக்கலம் என்பது குயவர் செய்யும் கலமாகிய ‘அகல்’ (தீபம்) என்பதைக் குறிக்கும். அகல் என்பதை ‘விலகு’ என்றும் பொருள் கொள்ளலாம்.
கீழோர்களின் சகவாசத்தை விட்டு அறவே விலகு என்பது ஐந்தாம் நீதியாகும்.
ஆறாம் நீதி:
ஊர்வது பேர்த்தீண்டு வாரா நெறி -
பேர்த்தீண்டு எனும் பதத்தை, பேர்த்து+ ஈண்டு என்று பிரிக்கலாம். மீண்டும் இங்கு (இந்த பூமியில்) வந்து பிறவாமைக்கான வழிமுறை.
ஊர்வது எனும் சொல் தரையில் ஊர்ந்து செல்லும் ‘தேர்’ என்பதைக் குறிக்கிறது.
தேர் என்றால் தெளிந்திடுவாய் என்பது இங்கு பொருள்.
மீண்டும் பிறப்பு எடுக்கும் அவலத்தை தவிர்ப்பதற்கான மார்க்கத்தை உணர்ந்து தெளிவாயாக என்பது ஆறாவது நீதியாகும்.
இவ்வளவு சாவதானமாக வெண்பாவை படித்துப் பொருள் கொள்வது என்பது, இந்த ட்விட்டர் யுகத்தில் சற்று சிரமம் தான்!
இனிய பலாச்சுளையை ருசிக்க வேண்டும் என்றால், சிரமப்பட்டு அதனை அறுத்து சுத்தம் செய்து பின்பு தானே சாப்பிட முடியும்?!
அடுத்த வாரம் இன்னொரு தமிழ் முத்தோடு சந்திப்போம்.

Leave a comment
Upload