தொடர்கள்
வலையங்கம்
வெள்ளை அறிக்கை சில கேள்விகள்

தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒரு விதமான ' பொருளாதார அவசர நிலை நிலவுகிறது' என்பதை அந்த அறிக்கை கொஞ்சம் வெளிப்படையாக சொல்கிறது போல் தெரிகிறது. வருமானம் 100 ரூபாய் ஆனால், செலவு 145 ரூபாய். தமிழகத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை என்பது 4 லட்சம் கோடி. ஆனால், கடன் 13 லட்சம் கோடி என்றும் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

முதலீட்டு செலவை விட கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கிறது. மக்கள் நல திட்டங்கள் என்ற பெயரில் மகளிர் உரிமை திட்டம், விடியல் பயண திட்டம் என இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டதும் மாநில நிதி நிர்வாகம் சிக்கலானதற்கு முக்கிய காரணம் என்று வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் அமைச்சர் அது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை. காரணம் திராவிடக் கட்சிகளை தூக்கி சாப்பிடும் அளவிற்கு தமிழக வெற்றி கழகம் இலவச திட்டங்களை அறிவித்திருக்கிறது என்பதுதான்.

பதிவுத்துறை, கனிமவளத்துறை, வணிகவரித்துறை, டாஸ்மாக் போன்ற வருமானத்துறைகளில் நிறைய குளறுபடிகள் என்று சொல்கிறார் அமைச்சர் ?

பழைய பென்ஷன் திட்டத்தை பற்றி கேட்டால் அது பற்றி முதல்வர் முடிவு செய்வார் என்கிறார் நிதி அமைச்சர். இந்த அறிக்கை பிரச்சனைகளை சரி செய்வதற்கான செயல் திட்டமா ? அரசியல் காரணங்களுக்காக முந்தைய ஆட்சிகள் மீது பழிபோடும் திட்டமா என்பது தெரியவில்லை.

புதிய அரசின் எதிர்கால செயல் திட்டத்துக்கான ப்ளூ பிரிண்ட் இது என்பது உண்மையானால் இன்றைய ஆட்சியாளரிடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பது இந்த அரசின் செயல் திட்டம் எப்போது வெளியாகும் என்பதுதான்.