
தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், தொடர் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. அரசாங்கம் சார்பாக அமைச்சர்கள் சில கருத்துக்களை சொல்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சில சம்பவங்களை சமூக ஆர்வலர்கள் மிகைப்படுத்தி வலைதளத்தில் பரப்புகிறார்கள் என்கிறார்கள். ஒரு சமூக ஆர்வலர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழக வெற்றி கழகத்தின் பனையூர் அலுவலகம் முகவரிக்கு செவித்திறன் கருவி ஒன்றை பார்சல் மூலம் அனுப்பி இருக்கிறார். அதன் பிறகு நிருபர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம் என்பதற்கான மிகப்பெரிய பட்டியலையே வெளியிட்டார். கூடவே அரசு தரப்பில் எந்த ஒரு கடுமையான நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் உரிய பதில் சொல்வதில்லை. அதற்காகத்தான் நான் செவித்திறன் கருவியை முதல்வருக்கு அனுப்பினேன். இதன் பிறகாவது இந்த அரசு விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பெரியார் மணி என்கின்ற அந்த சமூக ஆர்வலர்.
கும்மிடிப்பூண்டி அருகே பிகார் மாநிலத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் போது அதை காவல்துறை மறுத்து இருக்கிறது. ஒருவர் மட்டுமே குற்றச்செயலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்தது. ஜூன் 16-ஆம் தேதி மாலை சுமார் ஐந்து மணியளவில் தங்களின் மூன்று வயது குழந்தை காணவில்லை என்று சுற்றுப்புறப் பகுதிகளில் தேடி இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இயற்கை உபாதை கழிப்பதற்காக அந்த பகுதி பெண்கள் சென்றபோது புதர் ஒன்றில் ரத்த காயங்களுடன் குழந்தை கிடந்ததை பார்த்துள்ளனர். இந்தத் தகவல் உடனே காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த குழந்தையை முதலில் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அதன் பிறகு அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரையின் பெயரில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த குழந்தை சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குழந்தை இறந்து போனது. குழந்தையை கொலை செய்த அந்த இளைஞர் அந்த குடும்பத்துக்கு பரிச்சயமானவர்தான். குழந்தைக்கு பிஸ்கட் கொடுத்து கூட்டிச் சென்றிருக்கிறார். அதன் பிறகு வன்கொடுமை கொலை என்று சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
மருத்துவர்கள் உடல் ரீதியான வன்முறையால் அந்தக் குழந்தைக்கு அதிக ரத்தம் வெளியேறி இருக்கிறது அதன் பிறப்புறுப்பு பின்பாகம் எல்லாம் கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். பொதுவாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பு வழக்கமாக சொல்வதைத் தான் இந்த அரசும் சொல்லி இருக்கிறது. தவிர இதுபோல பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் உண்மை. தமிழ்நாடு இப்போது வட இந்தியர்களின் வேடந்தாங்கல் ஆகிவிட்டது. வட இந்தியாவில் குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் கூட தலை மறைவு வாழ்க்கைக்காக இங்கு வந்து ஏதாவது வேலை செய்து தங்களை பாதுகாத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் அமர்க்கும் போது அவர்கள் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து காவல்துறையிடம் தந்து விட வேண்டும். காவல்துறையும் அவர்கள் பின்னணி பற்றி விசாரிக்க ஏதுவாகும்.
தவிர காவல்துறை 60-களில் சைக்கிள் அல்லது நடை பயணமாக இரவில் ரோந்து போவது வழக்கம் சில இடங்களில் ஒரு நோட்டுப் புத்தகத்தில் இத்தனை மணிக்கு நாங்கள் ரோந்து போனோம் என்று நேரம் குறிப்பிட்டு கையெழுத்து போடுவது வழக்கமாக இருந்தது. அப்போது குற்றச்செய்ல்கள் குறைவாகவும் இருந்தது என்பதையும் கவனிக்க வேண்டும் .இந்த நவீன யுகத்தில் அவர்களுக்கு ரோந்து வாகனங்களில் கடனே என்று ஒரு ரவுண்ட் அடித்து விட்டு எங்காவது தூங்கி விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆட்சி மாறினாலும் அதே காவல்துறை அதே அதிகாரிகள் தான். காவல்துறையை அரசியல் கட்சிகள் தங்கள் சொந்த லாபத்துக்கு பயன்படுத்துவது கூட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஒரு காரணம். இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் போது ஆக்டிவா இருக்கும் காவல்துறை அதன் பிறகு சைலன்ட் மோடுக்கு போய் விடுகிறது .
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியும்போது போக்ஸோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்குகளை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். நீதிமன்றங்களும் இது போன்ற வன்கொடுமை வழக்குகளை முன்னுரிமை தந்து அல்லது தனி நீதிமன்றம் மூலம் தொடர் விசாரணை நடத்தி மேல்முறையீடு செய்யாத அளவுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற வன்கொடுமை குற்றங்கள் குறையும்.

Leave a comment
Upload