
இந்திய இராணுவத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்று இந்த வாரத்தில் நிகழ்ந்தது . குறுகிய கால பணியில் சேர்க்கப்படும் பெண் அலுவலர்கள் இனி நீண்ட கால பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் .
டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் (Passing out Parade ), குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டு 9 பெண் அதிகாரிகள் உள்ளிட்ட 515 அதிகாரிகளை பணியில் அமர்த்தினார். இந்திய தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA ) பயிற்சி முடித்த இவர்கள் இனி நீண்ட கால பணியில் ராணுவ சேவை செய்ய இயலும். இந்த 9 அதிகாரிகளும் முதல் முதலாக நிரந்தர பணி கமிஷன் வழியாக தேர்வு செய்யப்பட்டு ராணுவ அகாடமியில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள்.
இந்திய ராணுவத்தில் 11000 பெண்கள் பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டு இருப்பினும் அவர்கள் குறுகிய காலத்துக்கே பணி செய்ய முடியும் என்ற நிலை இன்று மாறி இருக்கிறது .
ராணுவத்தில் பெண்களின் பங்கு நெடிய வரலாற்றை உடையது.
முதல் முதலாக 1888 ஆம் ஆண்டில் இந்திய ராணுவச் செவிலியர் சேவை உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து , இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு தொடங்கியது. அதன் பின்னர் பெண் மருத்துவர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து அருஞ்செவை புரிந்தனர்,
மருத்துவத்துறை மட்டுமன்றி , மகளிர் துணைப்படை உருவாக்கப்பட்ட போது பெண்கள் தகவல் தொடர்பு, கணக்கியல் , நிர்வாகம் போன்ற தளங்களில் பணியாற்ற தொடங்கினர். உலகப்போரில் பெண்கள் போர்க்களம் சென்று போரிடவில்லை . நேதாஜி உருவாக்கிய ஆசாத் ஹிந்த் பவுஜ்ல் பெண்களுக்கான ஜான்சி ராணி படை இருந்ததும் அதில் கேப்டன் லட்சுமி சேகல் தளபதியாக இருந்ததும் நாம் அறிந்ததே.
இருப்பினும் , இவ்வளவு காலமாக பெண்கள் குறுகிய கால கமிஷன் ( Short service commission ) வழியாகவே தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகளில் நியமிக்கப்பட்டனர். 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற இப்பணி நியமனங்களில் , இராணுவ அஞ்சல் துறை , கல்வித்துறை, பொறியியல் துறை ,நீதித்துறை, ஆயுதப்படை என்று பல துறைகளிலும் பெண்கள் அலுவலர்களாகவும், பணியாளர்களாகவும் நியமிக்கப்பட்டு சேவை ஆற்றி வந்தனர். இந்த குறுகிய கால சேவை என்பது பத்தாண்டு முதல் 14 ஆண்டு சேவையாகவே இருந்து வந்தது .
பெண்கள் துணைச் சேவைகளில் ஈடுபட்ட போதும் , அவர்களுக்கு நிரந்தரமான , நீண்ட கால பணி வழங்கப்படாமல் இருந்தது. 14 ஆண்டு சேவை முடித்தவர்கள் இது குறித்து வழக்கு பதிவு செய்ய, இனி ஆண்களைப் போலவே பெண்களும் நிரந்தர கமிஷன் ( Permanent commission ) வழியாக பணி நியமனம் செய்யப்படுவர் என்று 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இனி இந்திய ராணுவப்படையில் பெண்கள் 14 ஆண்டுகள் கழித்தும் தாங்கள் விரும்பும் வரை தங்கள் பணியில் தொடரலாம் .
இந்தியா விடுதலை பெற்று 80 ஆண்டுகள் நிறையும் காலத்தில் தான் பெண்களுக்கான நிரந்தர ,நீண்ட கால பணி உரிமையையும் , உயர் பதவிகளை அடையும் வாய்ப்பையும் இந்திய ராணுவம் வழங்கி உள்ளது. இந்திய ராணுவ அகாடமியின் 94 ஆண்டு வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத்தலைவர் அவ்விழாவில் வாழ்த்திப் பேசியது போல வரும் காலங்களில் மேலும் பெண் அதிகாரிகள் அங்கு பயிற்சியில் இணைந்து ஆண்களுக்கு நிகரான நீண்ட கால சேவையை நாட்டுக்கு வழங்குவார்கள். இந்தியாவின் பாதுகாப்பையும் , இறையாண்மையையும் காப்பதில் ஆண்களுடன் சரிநிகர் சமமாக நிற்பார்கள்.

Leave a comment
Upload