
அரக்கோணம் இரயில் நிலையத்திலிருந்து அந்த ரயில் மெல்ல நடைமேடையை விட்டுவெளியே வந்தது.அது சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவசர, அவசரமாக ஒரு குழந்தையுடன் எதிரே இருந்த இருக்கையில் வந்து உட்கார்ந்தாள் அந்தப்பெண்மணி. அவளுக்கு வயது 30 இருக்கும். வெள்ளைப்புடவையில் சரஸ்வதியாய்காட்சியளித்தாள்.. நெற்றியில் பொட்டு இல்லை.கூந்தலில் ஒன்றுமில்லை. எனக்கு ஏனோபார்க்க கஷ்டமாக இருந்தது.
அவளுடன் கூட இன்னொரு நடுத்தர வயது பெண்மணி. அவள் மடிசாரில். அதுஅவளுடைய அம்மாவா? மாமியாரா? உடனடியாக என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.ஆனால்,அவள் ஒரு பக்கா மாமியார் மாதிரித்தான் நடந்துக் கொண்டாள்.அவள்யார் என்பதைப் பற்றிய அக்கறையும் எனக்கு இல்லை.
மாலை மணி ஆறு இருக்கும். அவளுடன் இருந்த அந்த குழந்தைக்கு பால் வாங்கவேண்டும்என்று அந்த பெண்மணியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அதை கண்டு கொள்வதாகதெரியவில்லை.அவள் அவளுடைய மாமியார்தான் என்பதை என் மனம் உறுதிப்படுத்தியது.
அந்த அம்மாவுக்கு அவளுடைய மகனை இழந்துவிட்ட துக்கம் இருக்குமோ? என்னவோஇவளுக்கு ஏன் நெற்றியில் பொட்டு இல்லை? கழுத்தில் உள்ள தங்கச் சைன் தாலியா?வெற்றுச் செயினா? வெள்ளைப் புடவையைக் கட்டச் சொல்லியது அந்த மடிசார்தானோ?என்னுடைய மனம் இதைத்தான் ஆராய்ந்து கொண்டு இருந்தது.
ஒருவேளை என்னுடைய அம்மா இன்று என்னுடன் வந்திருந்தால் இதைப்பற்றி விசாரித்துஇருக்கலாம்.35 வயதாகும் எனக்கு அம்மா பெண் பார்த்துக் கொண்டிருப்பது உங்களுக்குதெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஊரெல்லாம் எனக்கு பெண் பார்க்க சொல்லிக் கொண்டுஇருக்கிறாள். இப்படி ஒரு பெண் எனக்கு முன்னாடியே இருப்பது தெரியாமல். கைம்பெண்ணாக இருந்தால் என்ன? எனக்கு ஆட்சேபனை இல்லை. அப்பா இல்லை. அம்மா நான்எடுக்கும் எல்லா முடிவுக்கு ஓகே தான்.அவளுக்கு அவளின் ஒரே கடமை நல்லபடி முடிந்தால்சரி.அவ்வளவுதான்.
நானே எப்படி என் கல்யாணப் பேச்சை ஆரம்பிப்பது? மனதில் நல்லது நடக்கும் என்ற உணர்வுபட்டாம் பூச்சியாய் பறந்துக் கொண்டிருந்தது. அன்று இரவு முழுவதும் என்னால் தூங்கமுடியவில்லை.
அவளுக்கு வேண்டிய உதவியை எல்லாம் அவள் கேட்காமலேயே செய்துகொண்டிருந்தேன். இரவு நெடுநேரம் வரை அந்த குழந்தை தூங்கவில்லை. அவர்கள் இருவரும்தூங்கி விட்டார்கள். நான்தான் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தேன்,எதோ நான் பெற்றகுழந்தையைப்போல்.
மறுநாள் காலையில் டீ வந்தது. அவர்கள் இருவருக்கும் டீ வாங்கி கொடுத்து நானும்குடித்தேன்.ஒரு நன்றி கூட சொல்லவில்லை.அவளிடமிருந்து எதிர்பார்க்கக் கூடாது.என் மனம்சொன்னது.மனம் கண்டபடி கற்பனை செய்தது.உங்களுக்கு புரியவில்லை என்றால்,நான்அதை நம்பத் தயாரில்லை.
காலை இரயில் சென்னையை வந்தடைந்தது. அந்தப் பெண்மணி இப்போது என்னைப்பார்த்து முதன் முதலாக நன்றி சொன்னாள்.மனசெல்லாம் பட்டாம் பூச்சி பறந்தது.
இறங்கும் பொழுது அவருடைய பெட்டியை வாங்கிக் கொண்ட ஒரு வாலிபன் என்னநெற்றியில் பொட்டையை காணோம்? என்று ’வள்’ என்று விழுந்தான்.
‘இதுவரை உங்க அம்மா கூட இதைச் எனக்கு சொல்லவே இல்லை.பாருங்க.’ அவள்பர்ஸிலிருந்த ஸ்டிக்கர் பொட்டு ஒன்று அவளின் நெற்றியில் போய் ஒட்டிக் கொண்டது.
’ரொம்ப சாரிங்க’ என்று செல்லமாக இறங்கி அவள் தோளில் சாய்ந்து கொண்டு சமாதானப்படுத்தினாள்.இப்படி அடிக்கடி நடக்கும் போலிருக்கு. பிறகு தான் புரிந்துகொண்டேன்.அவளுடைய நெற்றிப் பொட்டு எங்கேயோ விழுந்து விட்டது. கூட வந்தமாமியாரும் இதை கவனிக்கவில்லை. அவளும் பையனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.இதை அறியாத நான் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாரானதை எண்ணி நொந்துக்கொண்டேன்.
‘அண்ணா’என்று அழைத்த குரல் கேட்டு திரும்பினேன்.
‘இந்த அண்ணாதான் எனக்கு பயணத்தில் ரொம்ப உதவியாக இருந்தார்’சொல்லிமுடித்தாள் அவள்.அவனும் என்னைப் பார்த்து கைக் கூப்பினான்.நானும் கைக் கூப்பினேன்.
என் மனதில் பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சியை தேடினேன். காணவில்லை.
விரைவாக இரயில் நிலையத்திற்கு வெளியே நான் என்னை நானே தள்ளிக் கொண்டிருந்தேன்.

Leave a comment
Upload