தொடர்கள்
விளையாட்டு
உலக கோப்பை கனவு - கோமதி லண்டன்

20260128083010967.jpeg

டி20 உலகக்கோப்பை இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், சூப்பர் எயிட் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாவே மற்றும் மேற்கு இந்திய அணி முதல் பிரிவிலிருந்தும், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கை அணி இரண்டாவது பிரிவிலிருந்தும் தேர்வு பெற்றுள்ளன. இந்தியா டி20 விளையாட்டில் வெல்ல முடியாத வலுவான அணி என்று தொடர்ந்து நிரூபித்து வந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில், மூன்று போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியதும், இந்தியா இந்த உலகக்கோப்பையை வெல்லும் என்கிற நம்பிக்கையை வலுவாக்கியது .

இந்நிலையில், சூப்பர் எயிட் சுற்றின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அக்சர் படேல் இந்திய அணியில் இடம்பெறாதது இந்த தோல்விக்கு முக்கிய காரணம் என்று கருதப்பட்டது. சிலர் இந்திய அணியின் திறனை விமர்சிக்கும் வகையில், ஐசிசி விதிகளின் படி உருவாக்கிய மைதானத்தில் இந்திய அணி விளையாட திணறுகிறது என்னும் கருத்தையும் முன் வைத்தனர். அபிஷேக் ஷர்மா மூன்றாவது முறையாக ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்ததும், அவரது திறனை கேள்விக்குறியாக்கியது. இந்தியாவின் தோல்வி, அரையிறுதிக்கு முன்னேற இயலுமா என்னும் சந்தேகத்தையும் எழுப்பியது. கிரிக்கெட் ஆய்வாளர்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கு இந்திய அணி தோல்வி பெறவேண்டும் என்றும், இந்திய அணி மற்றுமுள்ள இரண்டு போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் இருந்தனர். வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தும் அவருக்கு சாதகமாக அது அமையாதது ஏமாற்றத்தையே அளித்தது, சிறப்பாக சுழற்பந்து வீசும் வருண் சக்ரவர்த்திக்கும் இந்தப் போட்டி பெயர் ஈட்டித் தரும் வகையில் அமையவில்லை. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்கோ ஜான்சன் 3.5 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவை 111 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இந்தத் தோல்வியின் மூலம், மற்றுமுள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்னும் கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது.

பிப்ரவரி 26ஆம் தேதி நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். இந்த வெற்றி, இந்திய அணி அரையிறுதியில் பங்கேற்கும் வாய்ப்பையும் உருவாக்கியது. அன்று நடந்த இரண்டாவது போட்டியில், இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வென்ற இந்திய அணி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா அருமையான துவக்கத்தை அளித்தனர். அபிஷேக் சர்மா உலகக் கோப்பை விளையாட்டில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து விளையாடிய இஷான் கிஷன்,அணித் தலைவர் சூர்யா குமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா அனைவருமே அணிக்கு வலிமை சேர்த்தனர். இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற 257 ரன்கள் என்னும் இலக்கை நிர்ணயித்தது. ஜிம்பாப்வே அணியின் பிரைன் பென்னட் நிதானமாகவும், திறமையுடனும் விளையாடி 59 பந்துகளில் 97 ரன்கள் அடித்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று போராடினார். இருப்பினும், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை இலகுவாக வீழ்த்தியது.

இந்த வெற்றி, இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து பயணம் செய்யும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் மேற்கு இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வென்றால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பெறும். ஜிம்பாப்வேக்கு எதிரான வெற்றி,வரவிருக்கும் போட்டியை வெல்வதற்கான ஊக்க மருந்தாக இருக்கும் என்பது, நம்மைப் போன்ற பலரது கருத்தாகவும் உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிராக விளையாடியதைப் போன்றே விளையாடினாலே போதும், கோப்பை நம் கையில் என்று கூறுகிறது கிரிக்கெட் ஆய்வாளர் வட்டம். மார்ச் 8ஆம் தேதி அஹமதாபாதில் இறுதி ஆட்டம் நிகழ்ந்தால் (பாக்கிஸ்தான் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில்), கடந்த முறை கை நழுவிய உலகக் கோப்பையை இந்த முறை இந்திய அணியின் கையில்!