தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 14 - ஆரூர் சுந்தரசேகர்.

சனி ஸ்தலம் - திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில்

The heroes of the nine planets that bring good luck..!! - 14

பிரசித்தி பெற்ற சுக்கிரன் ஸ்தலம் - கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் ஏழாவது ஸ்தலமாக விளங்குவது
இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால்
மாவட்டம் திருநள்ளாறு பிராணேஸ்வரி சமேத தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில். இத்தலத்தில் சனி பகவான் தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டு பேறு பெற்றார். இக்கோயில் சனிபகவானுக்கு உரியப் பரிகார ஸ்தலமாகத் திகழ்கிறது. இங்கு அருளும் சனீஸ்வர பகவான் அனுக்கிரக மூர்த்தி. மற்ற கிரகங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பாக, ஈஸ்வர பட்டத்தைச் சனீஸ்வர பகவானுக்கு வழங்கி, தர்ப்பாரண்யேஸ்வர் அருளால் சனீஸ்வர பகவானாக இவ்வாலயத்தில் அபயம் தரும் சாந்த மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார்.
நள மகாராஜனின் வேண்டுகோளின்படி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான், சிவனருள் பெற்றவர் என்பதால், தம்மை வழிபடும் பக்தர்களை, தொல்லைகளிலிருந்து விடுவித்து அருளுகின்றார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

நவகிரகங்களில் மந்த காரகன் எனக் குறிப்பிடப்படும் சனீஸ்வரன், சூரிய தேவன் மற்றும் சாயா தேவியின் மகன். காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனி பகவானுக்குக் கறுப்பு நிறம், எள், நல்லெண்ணெய், இரும்பு மற்றும் வன்னி இலை மிகவும் பிடிக்கும். சனிக்கிழமைகளில் கறுப்பு எள் கொண்டு தீபம் ஏற்றுவது, காகத்திற்கு உணவளிப்பது, கறுப்பு வஸ்திரம் தானம் செய்வது மற்றும் எளியோருக்கு, ஊனமுற்றோருக்கும் உதவுவது சனி பகவானின் அருளைப் பெற்றுத்தரும்.
சனியின் வக்கிர பார்வையில் இருந்து தெய்வங்கள் கூட தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரையும் ஏழரை ஆண்டுகள் பிடித்தே தீருவார். இதில் ஆஞ்சநேயர் மற்றும் விநாயகர் மட்டுமே விதி விலக்கு. இக்கோயில் தேவாரப் பாடல் பெற்ற 52-வது காவிரி தென்கரைச் சிவதலமாகவும் விளங்குகிறது. இத்தலத்தில்தான் நளன் சனி தோஷத்தில் இருந்து விடுபட்டான் அதனால் இங்கு வந்து நளதீர்த்தத்தில் நீராடி, எள் தீபம் ஏற்றி வழிபட்டால் சனித் தொல்லைகள், நோய்கள் மற்றும் தீராத துயரங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகும். பிறகு வந்த விஜயநகர பேரரசர்கள் மேலும் இக்கோயிலை விரிவுபடுத்தினார்கள். இக்கோயிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த இரண்டு முக்கியமான கல்வெட்டுகளும் உள்ளன.

ஸ்தல புராணம்:

The heroes of the nine planets that bring good luck..!! - 14

திருநள்ளாறு, தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. சுயம்புவாக தர்ப்பை வனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். அதனால் தர்ப்பாரண்யேஸ்வரர் என அழைக்கப்படுகின்றார். தமிழகத்தின் சப்தவிடங்கத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. விடங்க என்றால் "செதுக்கப்படாத மூர்த்தி" என்று பொருள். ஏழு சுயம்புத் தலங்களில் திருநள்ளாறும் ஒன்று. இத்தலத்தில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர். அம்பாள் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் எனப் பல நாமங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறார்.
சனிபகவானின் பிடியில் சிக்கிய நள சக்கரவர்த்தி எல்லா செல்வத்தையும் இழந்து, இறுதியில் தமயந்தியையும் பிரிந்து, சேவகனாக மாறினான். பின்னர், சகல தோஷங்களும் நீங்கவும், தான் இழந்த இராஜ்ஜியம், பதவி மற்றும் குடும்பம் இவைகள் மீண்டும் கிடைக்க வேண்டியும் கலியுகத்தில் இறுதியாக இருந்த திருநள்ளாற்றில் உள்ள தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

நள சக்கரவர்த்தியைச் சனி பகவானின் பிடியிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது. ‘திரு’ என்ற சொல் மதிப்பிற்குரியதைக் குறிக்கிறது, மேலும் ‘நள’ என்ற சொல் நள அரசனைக் குறிக்கிறது, ‘ஆறு’ என்ற சொல் தமிழில் குணப்படுத்துவதைக் குறிக்கிறது.
தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற ஸ்தலம். மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ஜுனன், நளச் சக்கரவர்த்தி, அஷ்டதிக்கு பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.
இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர, அஷ்ட தீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.
பக்தர்கள் சனி தொல்லை நீங்க நள தீர்த்தத்திலும், முந்தைய சாபங்கள் நீங்கப் பிரம்மதீர்த்தத்திலும், கவி பாடும் திறன் பெற வாணி தீர்த்தம் எனப்படும் குளத்திலும் நீராடி பிரார்த்தனை செய்வார்கள்.

ஸ்தல அமைப்பு:

The heroes of the nine planets that bring good luck..!! - 14

இத்திருக்கோயில் ஏழு நிலை இராஜகோபுரம் கொண்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. அதற்கு முன்பு உள்ள முற்றம், மண்டபமாக்கப்பட்டுள்ளது. இங்கு வடபுறம் அலுவலகமும், தென்புறம் இடையனார் கோயிலும் உள்ளது. விசாலமான பிராகாரத்துடனும், உயர்ந்த மதில் சுற்றுகளுடனும் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள சுவரில் நளனின் வாழ்க்கை வரலாறு வண்ண ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், அன்னை பிராணாம்பிகை சந்நிதிக்கும் இடையில் கோயிலின் வட வாசலுக்கு அருகே சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.

20260128001040399.jpeg

உள்சுற்றில் சுந்தரர், மற்றும் அறுபத்துமூவரும் உள்ளனர். இதன் வரிசை முடிவில் நளன் வழிபட்ட நளேஸ்வரர் சிவலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தியும், விநாயகரும், பிரம்மனும் துர்க்கையும் உள்ளனர். மேலும் ஸ்தல விநாயகரான சொர்ணகணபதி சந்நிதியும், சப்தவிடங்கத் தல சிவலிங்கத் திருமேனிகளும், மூலஸ்தானத்திற்கு தெற்கே சோமாஸ்கந்தர் சந்நிதியும், ஆதிசேஷன், நளநாராயணப் பெருமாள், மகாலட்சுமி, பைரவர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. மேலே படியேறிச் செல்லும்போது, பலிபீடமும், நந்தியும் சற்று விலகியிருப்பதைக் காணலாம்.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

இங்கே சனி பகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலிப்பதால் இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. இத்தலத்தில் சனி பகவானின் வாகனமாகக் காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி பகவான் சந்நிதி முன்னால் மகர, கும்ப ராசிகளின் உருவங்கள் உள்ளன. இந்த இரு ராசிகளுக்குச் சனி அதிபதியாவார். அதையடுத்து பிராணாம்பிகை அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.
விசேஷ காலங்களில் சனி பகவான் தங்க காகம் வாகனத்தில் அமர்ந்து வீதி உலா வருகிறார்.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

ஸ்தல தீர்த்தம் : நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள்
ஸ்தல விருட்சம்: தர்ப்பை

ஸ்தல பெருமை:
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. இங்கு வீற்றிருக்கும் தியாகராஜப் பெருமான் ஆடும் நடனம் 'உன்மத்த நடனம்' என்று அழைக்கப்படுகிறது.
திருநள்ளாறு கோவிலின் மிக முக்கியமான பொக்கிஷங்களில் ஒன்று அங்குள்ள பச்சை மரகத லிங்கம் ஆகும். இது 'நகவிடங்கர்' என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கம், தர்ப்பை முளைத்த தழும்பைக் கொண்டு, சற்று சாய்வாகக் காட்சியளிக்கிறார், இதுவும் இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

சிவபெருமான் தன் பக்தனைக் காக்க, நந்தி மற்றும் பலிபீடம் நேர்க்கோட்டில் இல்லாமல் சற்றே விலகி இருக்கும் வகையில் இந்தத் தலம் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் விநாயகருக்கு சொர்ணவிநாயகர் என்று திருப்பெயர்.. இவரை வழிபட, செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை..
தீர்த்தங்கள் நிறைந்த ஸ்தலம்: இத்தலத்தில் நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் தவிர அஷ்ட தீர்த்தங்கள் எனப்படும் மொத்தம் எட்டு தீர்த்தங்கள் உள்ளன. திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று கூறுவார்கள்.
நளதீர்த்தத்தில் நீராடினால் சனியின் தொல்லை நீங்கும்.
பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் முன்வினை சாபங்கள் யாவும் விலகும்.
வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடனாக இருந்தால் கூட கவிதை பாடுவான் என்பது நம்பிக்கை.
பச்சைப் பதிகம்: திருஞானசம்பந்தர், மதுரையில் சமணரோடு நடத்திய அனல் வாதத்தில், இத்திருத்தலத்தில் இயற்றிய திருப்பதிகமான 'போகமார்த்த பூண்முலையாள்' என்று துவங்கும் பதிகத்தை நெருப்பில் இட, அது எந்த வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் வெளிவந்தது.. அதனால் இது 'பச்சைப் பதிகம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

அறிவியல் சிறப்பு: பூமத்திய ரேகையில் நீள்வட்டப் பாதையில், சனிக் கிரகத்தின் கதிர்வீச்சுகள் இங்கு அதிகமாகக் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.
சிவதலமாக இருந்தாலும் கூட, இங்கேயுள்ள சனி பகவான் சந்நிதி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பரிகார பூஜை செய்து சனி பகவானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.
சனீஸ்வர பகவானுக்குச் சங்கு புஷ்பம் (பாலாடை புஷ்பம் அல்லது காக்கட்டான் புஷ்பம் ) போன்ற நீல நிறமுடைய புஷ்பங்கள், மற்ற புஷ்பங்களுடன் வன்னிபத்ரமும், வில்வ பத்ரமும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படுகிறது.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

திருவிழாக்கள்:
வைகாசியில் பிரம்மோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் போன்ற விழாக்களும் இங்குச் சிறப்பானவை. இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
சோம வாரம், சுக்கிர வாரம், மற்றும் பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுகிறது. இது தவிர அமாவாசை, கிருத்திகை, பெளர்ணமி, சதுர்த்தி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை:
பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழவும், செழுமையும், நேர்மறையான எண்ணங்களுடன் வாழவும் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். மற்றும் சனியின் பாதகமான பாதிப்பில் இருந்து விடுபடவும், தங்கள் பிறப்பு ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 5.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேஷ நாட்கள் மற்றும் திருவிழா காலங்களில் நேரங்கள் மாறுபடலாம்.

The heroes of the nine planets that bring good luck..!! - 14

எப்படிச் செல்வது:
இக்கோயில் காரைக்காலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.

சனி தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமையத் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!