
வைணவ தலமான ஸ்ரீவைகுண்டத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நல்லகண்ணு.
ஸ்ரீவைகுண்டம் கார்னேஷன் பள்ளியில் இடைநிலை கல்வி, பிறகு திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் புதுமுகவகுப்பில் சேர்ந்தார்.
அவர் கல்லூரியில் படிக்க தொடங்கிய காலத்தில் சுதந்திரப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்தது.
ஏற்கனவே பாரதியார் பாடல்களால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு, வஉசியின் சுதந்திரப் போராட்டத்தை தொடர்ந்து கவனித்து வந்த நல்லகண்ணு படிப்பை பாதியிலேயே நிறுத்தி 1942-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அறிவித்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார்.
அதுதான் அவரது அரசியல் வாழ்க்கைக்கான ஆரம்பம்.
அவருக்கு ஏனோ காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பிடிக்கவில்லை. அப்போதே அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கான கட்சி அடித்தள மக்களுக்கான உரிமைக்குரல் அங்குதான் உரக்க ஒலிக்கிறது என்று தீர்மானமாக முடிவு.
1943-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார் நல்லகண்ணு. விவசாய குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை நன்கு அறிந்தவர். அவரது முதல் குரல் பதுக்கலை எதிர்த்து தான் தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஒரு கிடங்கில் 2000 நெல் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதை ஆதாரத்துடன் கண்டுபிடித்து ஜனசக்தி இதழில் எழுதினார். இதுதான் அவரது முதல் அரசியல் நடவடிக்கை என்று கூட சொல்லலாம்.
அவரது மக்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது. அதனால் ஸ்ரீவைகுண்டம் நகர கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நல்லக்கண்ணு.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த விவசாய சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டார் நல்லகண்ணு. திருநெல்வேலி மாவட்டத்தில் தோழர் நல்லகண்ணுவை தெரியாதவர்களை யாரும் இல்லை என்ற அளவுக்கு அவர் பிரபலமானார்.
1952-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவுடைமைக் கொள்கை தொழிலாளர் ஆதரவு குரல் இதெல்லாம் தங்களுக்கு எதிராக திருப்பி விடப்படுவதாக எண்ணியது.
அதன் விளைவு ஆயுதம் தாங்கிய புரட்சி மூலம் அரசை கவிழ்க்க கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்கிறது என்று குற்றம் சுமத்தி அந்தக் கட்சியை தடை செய்தது.
கட்சியின் தலைவர்களை தேடி தேடி கைது செய்து சிறையில் அடைத்தது.
நல்ல கண்ணுவும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தேச துரோக வழக்கில் நீதிமன்றம் நல்லகண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை செய்து கொண்டு அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள். அப்போது நல்லகண்ணும் விடுதலை ஆனார்.
விசாரணை கைதியாக இருந்தபோது நல்லகண்ணு சிறை அதிகாரிகளால் பெரிய அளவு கொடுமைப்படுத்தப்பட்டார்.
அவரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்து துன்புறுத்துவதுடன் இல்லாமல் அவரது மீசையை தீ வைத்து பொசுக்கினார்கள் சிறை அதிகாரிகள் .அதனால்தான் அவர் மீசை இனி வேண்டாம் என்று முடிவு செய்து மீசை வைத்துக் கொள்ளவில்லை.
அவர் போராட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் சிறையில் அவர் மீது ஏவி விடப்பட்ட வன்முறை இவற்றையெல்லாம் அவர் மேடையில் பெரிதாக பேசி பாராட்டலாம் பெறமாட்டார்.
இன்னும் சொல்லப்போனால் அவர் மீது நடத்தப்பட்ட வன்முறையை அவருடன் சிறை சென்ற தோழர்கள் பொதுவெளியில் சொல்லி தான் எல்லோருக்குமே தெரிய ஆரம்பித்தது. அவர் அது பற்றி பெரிதாக என்றுமே பேசியது கிடையாது.
அவரைப் பொறுத்தவரை கம்யூனிச சித்தாந்தம் என்பது போராட்டம் என்பதுதான்.
சிறையில் இருந்து வெளியே வந்த நல்லகண்ணுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தார்கள். அவரது மனைவி ஆசிரியையை ரஞ்சிதம் அம்மாள் அவரது போராட்ட வாழ்க்கை நன்கு தெரிந்து தான் திருமணத்துக்கு சம்மதம் சொன்னார்.
திருமணத்திற்கு பிறகும் நல்லகண்ணுவின் கட்சி நடவடிக்கை தீவிரமானது.
தோழர் ஜீவானந்தத்துடன் நெருக்கமாக இருந்த நல்லகண்ணு அவரது வழிகாட்டலின் படி கட்சி வேலை பார்த்தார். கட்சியின் விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளராக 25 ஆண்டுகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக 13 ஆண்டுகள் என்று நல்லகண்ணு கட்சியின் வளர்ச்சிக்கு தன்னை முழுக்க முழுக்க அர்ப்பணித்துக் கொண்டவர்.
போராட்டம் தான் நல்லகண்ணுவின் அன்றாட வாழ்க்கை நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். கட்சிப் பணி தனது கவனத்திற்கு வரும் பொது பிரச்சனை எல்லாவற்றையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முதல் தோழராக நல்லகண்ணு இருந்தார்.
பட்டியலின மக்கள் குடியிருப்பு கோரிக்கையை அரசு புறக்கணித்ததை கண்டித்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் தோழர்.
தமிழ்நாட்டில் சமய மடங்களில் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய நிலங்கள் பற்றிய முழு விவரங்களும் சேகரித்து அதை வெளியிட்டு இந்த நிலங்களை ஏழை விவசாயிகளிடம் தந்தால் அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அன்று முதல் இன்று வரை சாதிய கொடுமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருபவர் தான் தோழர் நல்லகண்ணு.
குற்றாலம் அருவிக்கு அருகில் ரேஸ் கோர்ஸ் மைதானம் அமைக்க அரசு திட்டமிட்டு இருந்தது. அதை எதிர்த்து பெரிய போராட்டம் நடத்தி தோழர் நல்ல கண்ணு அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினார்.
மணல் கொள்ளையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அந்த வழக்கில் அவரே ஆஜர் ஆகி ஆதாரங்களுடன் வாதாடினார்.
அதன் விளைவு இது பற்றி விசாரணை மேற்கொள்ள உண்மை அறியும் குழுவை நியமித்தது உயர் நீதிமன்றம். அதன் பிறகு மணல் கொள்ளையை தடுக்க உண்மை அறியும் குழு தந்த பரிந்துரைகளை ஏற்று ஆணை பிறப்பித்தது உயர்நீதிமன்றம்.
சாதிய மோதல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்த தோழர் 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி கிராமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பதவி ஏற்க விடாமல் தடுத்த ஆதிக்க சாதியினரை எதிர்த்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
1997-ஆம் ஆண்டு இரு சாதிப் பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களால் இவரது மாமனார் அன்னாச்சாமி கொல்லப்பட்டார்.
எனினும் அந்த குறிப்பிட்ட சாதியை மீது பகைமை பாராட்டாமல் தனது மாமனார் இறப்பையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஒற்றுமைக்காக பாடுபட்டார் தோழர் நல்லகண்ணு.
தோழர் நல்லகண்ணு புத்தகப் பிரியர். நிறைய படிப்பார். அவரது வீட்டிலேயே நிறைய புத்தகங்களை சேகரித்து ஒரு நூலகமாக வைத்திருந்தார் 2015-ஆம் ஆண்டு சென்னை பெருநகரில் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது இவரது வீட்டிலும் வெள்ளம் புகுந்தது கிட்டத்தட்ட 2000 புத்தகங்கள் முற்றிலும் நனைந்து சேதம் ஆகி யாருக்கும் பயன்படாமல் போக மிகுந்த வேதனைக்கு உள்ளானார் தோழர்.
நல்ல எழுத்தை எழுதியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேடிப் பிடித்து வஞ்சனை இல்லாமல் பாராட்டுவார் தோழர். அவரே பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.
மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் தோழர் நல்லகண்ணு யாரிடமும் எந்த உதவியோ கோரிக்கையோ இதுவரை தனக்காக வைத்தது கிடையாது.
தனது ஆசிரியர் மனைவியின் ஊதியத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் தோழர்.
ஏனோ தெரியவில்லை பணத்தின் மீது அவருக்கு இம்மியளவு கூட நாட்டம் இல்லாமல் இன்று வரை வாழ்ந்து வருகிறார் தோழர் நல்லகண்ணு.
கட்சியின் எண்பதாவது ஆண்டு விழாவின் போது தனக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாயை கட்சிக்கே வழங்கியவர் தோழர். தமிழக அரசு சார்பில் அம்பேத்கர் விருது வழங்கி கொடுக்கப்பட்ட நிதியையும் கட்சி வளர்ச்சிக்கும் விவசாய சங்க வளர்ச்சிக்கும் பகிர்ந்து அளித்தவர் தோழர் நல்லகண்ணு.
தமிழ்நாடு அரசு வழங்கிய தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அந்த 10 லட்சம் ரூபாயுடன் தான் எடுத்து வந்த ஐந்து ஆயிரம் ரூபாயும் சேர்த்து 10 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக தமிழக அரசிடம் வழங்கியவர்.
இந்த தகைசால் தமிழர். இவருக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. இதைக் கேள்விப்பட்ட ஒரு நண்பர் இவருக்கு சொந்தமாக ஒரு காரை பரிசளிக்க அந்தக் காரையும் கட்சிக்கே தந்தவர் இந்தப் பொதுவுடமை தலைவர்.
இப்படி மக்களுக்காக உழைத்த மக்களுக்காக சிந்தித்த மக்களுக்காக போராடிய இவரை தேர்தல் அரசியல் இவரை புறக்கணித்து விட்டது என்பது ஒரு சோகமான வரலாறு.

1980-ஆம் ஆண்டு நடைபெற்ற அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் தோழர்.
1999-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதிலிருந்து மக்கள் வேட்பாளர் பின்புலம் பார்க்காமல் அவர் தகுதி பார்க்காமல் கட்சிப் பார்த்து வாக்களிக்கின்றார்கள் என்பது நன்றாக தெரிகிறது
மக்கள் தேர்தல் அரசியலில் அவரை புறக்கணித்தாலும் அவர் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்.
சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத ஒரு அரசியல் தலைவர் உண்டு என்றால் அது தோழர் நல்லகண்ணு தான்.

எல்லா கட்சித் தலைவர்களாலும் கொண்டாடப்பட்ட தோழர் இவர் .

Leave a comment
Upload