
காந்தி, காமராஜ், கக்கன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் தலைவர்களின் வரிசையில், இந்நாளில் நாம் இணைத்துப் பார்க்க கூடிய தலைவர் தோழர்.நல்லகண்னு. அவர் வாழ்ந்து காட்டிய நெறிகளால், எளிமை, நேர்மை, சமூக வாழ்வில் களங்கம் இல்லாத பண்புகளால், நம் தலைமுறையில் இம்மாமனிதர்களுடன் ஒன்றாக வைத்து போற்றப்படுகிறார்.
இப்பூமியில் 101 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த தோழரின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம்.
அவரது இழப்பு இந்திய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது . அவரை வழிகாட்டியாகவும், குடும்பத்தின் தலைவராகவும் கொண்ட தோழரின் குடும்பத்தவருக்கு சொல்ல முடியாத பேரிழப்பு.
தோழர் நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, விட்டு , அவர் குடும்பத்தினர் சென்னையை விட்டு புறப்பட்டு செல்கையில் அவர்களிடம் விகடகவி சார்பாக நமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டோம்.

முழு அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும், அரசு மருத்துவமனையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டதும் அவர்கள் பெருமையாகவும், கௌரவமாகவும் நினைக்கின்றனர்,
தோழர் .நல்லகண்ணுவின் மைத்துனர் , அவரது மனைவி ரஞ்சித்தம்மாளின் சகோதரர், அண்ணாமலை ராஜன் தன் 'அத்தானைப் பற்றிய நினைவுகளை நம்முடன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

" என் அத்தானை நான் முதல் முதலாக சந்தித்த நினைவு இருக்கிறது. 1970ல் சிறுவனாக அப்பா அன்னசாமியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அக்கா வீட்டுக்குச் சென்று பார்த்த நினைவு இருக்கிறது. அதன் பின் பல நாட்கள் அக்கா வீட்டில் தங்கி இருக்கிறேன். அக்காவின் மகள்கள் படிக்க சென்று விட்ட பிறகு, மாமா சிறையில் இருந்த போதும், இயக்க பணிகளுக்காக வெளியில் இருக்கும் போதும் நான் ரஞ்சிதம் அக்காவுக்கு துணையாக நான் தங்கி இருப்பேன்.

எங்கள் குடும்பத்தின் அடையாளமாகவே அத்தான் இருந்து வந்தார். அவர் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். அவர் இறந்த செய்தி கேட்ட போது எங்கள் பெரிய குடும்பமே கண்ணீரில் மூழ்கியது. ஒரு தந்தைக்குத் தரக்கூடிய மரியாதையை இத்தமிழ் நாடும், மக்களும், முதல்வரும் அவருக்குத் தந்து சிறப்பாக வழி அனுப்பி வைத்துள்ளனர்.
பொது வாழ்வில் மிகுந்த நேர்மையைக் கடைபிடித்தவர். அவரது தேர்தல் செலவுக்கு என்று குடும்பத்தினர் ஒரு தொகையைக் கொடுத்த போது , அதை கட்சியில் ஒப்படைத்து அதற்குறிய ரசீதை பெற்று தந்தார். அவரது பெயரை எதற்காகவும் , எங்கள் குடும்பத்தவர் பயன்படுத்தியதில்லை.

எங்கள் எல்லோரின் மீதும் அவருக்கு நிறைய அக்கறையும், பாசமும் இருந்தது. எல்லா நேரங்களிலும் அவரது வழிகாட்டுதல் இருந்து வந்துள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணத்தின் போதும் , மேற் கல்வியை தேர்வு செய்யும் போதும் அவர் முடிவே சரியானதாகவும் , முடிவானதாவும் இருக்கும். குடும்பத்தில் யார் நோய் வாய்ப்பட்டாலும் அவர் தேறுதல் சொல்லி திடமாக இருக்க செய்வார்

.
என் அண்ணன் , அக்காக்கள் அவர்கள் பிள்ளைகள் அனைவர் மேலும் அன்பையும், அக்கறையும் கொண்டிருந்தார். குழந்தைகளும் அத்தானிடம் மிகுந்த அன்பும், பாசமும் கொண்டவர்கள் . என் மகள் சந்தோஷி சாரோன் அவரது நூறாவது பிறந்தநாளுக்கு தயாரித்த வாழ்த்து மடலை மிகவும் ரசித்தார். என் நண்பர்களை மிகவும் மரியாதையாக நடத்துவார். அவரது கொள்கைகளுக்கு மாற்று கருத்தை யார் சொன்னாலும் , கோபமின்றி அதை மறுக்கும் பாங்கு கற்றவர் அவர்.

என் அத்தானின் இறுதி நாட்களில் அவருக்கு சிகிச்சை தந்து கவனித்த ராஜிவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தார் சார்பாக நன்றி" என்று முடித்தார் ராஜன்.

இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தின் ஒப்பற்ற செயல் வீரர், தலைவர், தொழிற் சங்கவாதி, விவசாயிகளுக்குத் துணை நின்ற போராளி, அரசியலில் கறை படாத கரங்களைக் கொண்டவர். சமரசம் செய்யாத நேர்மை, எவரையும் கண்ணியமாக நடத்தும் பண்பு, இவற்றின் ஒட்டு மொத்த அடையாளமாக இருந்த தோழர் மறைந்தார். சமூக அநீதிகளுக்கு எதிராக தவறாமல் எழும் அவர் குரல் இனி ஒலிக்காது.
ஆயினும் அவர் நடத்துச் சென்ற பொதுவுடைமை பாதையில் ஆயிரமாயிரம் தோழர்கள் செங்கொடி ஏந்தி நடந்துச் செல்வார்கள். ஏழை எளிய தொழிலாளர்கள் ஏற்றம் பெற அவர் ஏற்றிய தீபங்கள் சுடர் விட்டு பிரகாசிக்கும்.
அரசியல் வானில் அவர் ஒரு நட்சத்திரம், இணையில்லாத முன் உதாரணம்.
"தகைமை சால் தமிழருக்குச்" செவ்வணக்கம்..! சென்று வாருங்கள் தோழர்! .

Leave a comment
Upload