தொடர்கள்
அனுபவம்
ஐ சி யூவில் ஆறு நாட்கள்-   ஒரு நிஜ அனுபவம்              -  பொன் ஐஸ்வர்யா

20260127144253451.jpg

(வாழ்க்கை பயணத்தில், மறக்க முடியாத அனுபவத்தைத் தருவது மருத்துவமனை வாசம். அதிலும் ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குச் சென்று, மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது மறு பிறவிக்குச் சமமான உணர்வைத் தரும். அங்கு சந்திக்கும் மருத்துவர்கள், செவிலியர், சக நோயாளிகள், மருந்து வாசம், விதவிதமான மருத்துவ சிகிச்சைகள், என்று கலவையான அனுவங்களை மற்றும் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு மினி தொடர் - புகைப்பட உதவி AI )

யாரோ படபடவென்று கன்னத்தில் தட்டி "கண்ணைத் திறந்து பாருங்க” என்று கூறுவது, கனவு போல் காதில் கேட்டது. இது ஆபரேஷன் தியேட்டரா, ஐ. சி. யூ வார்டா என்று சரியாக தெரியவில்லை. கண்களைத் திறக்க முடியவில்லை.

மிகுந்த சிரமப்பட்டு கண்ணைத் திறந்ததும், நொடிப் பொழுதில் தானாய் மூடிக் கொண்டது. படுக்கையை சுற்றி நர்ஸ்களும் மருத்துவர்களும் கூட்டமாய் நிற்பது மங்கலாகத் தெரிந்தது. ஒருவர் என் முகத்திற்கு எதிரே வீடியோ கருவியை தூக்கிப் பிடித்து படம் எடுத்துத் கொண்டிருப்பதை உணர முடிந்தது. "உங்களுக்கு ஆபரேஷன் முடிந்து விட்டது, கையை அசைத்துக் காட்டுங்கள்” என்றது ஒரு குரல்.

என்னால் கையை அல்ல, விரலைக்கூட சிறிதும் அசைக்க முடியவில்லை. அந்த மயக்கத்தில் அப்படியே தூங்கிப் போய் விட்டேன்.

அடுத்து கண் விழித்தது மறுநாள் அதிகாலை என்று நினைக்கிறேன். லேசான மயக்கம் தொடர்ந்தாலும் காதுகள் மட்டும் நன்றாக கேட்டன. தூர பார்வை இன்னும் மங்கலாக தெரிந்தது. எதிரே சுவர் ஓரமாய் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த டிராலியில் என்ன வாசகம் எழுதப்பட்டிருக்கிறது என்பதை, எழுத்து கூட்டிக்கூட படிக்க முடியவில்லை.

சற்று உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்த டிஜிட்டல் சுவர் கடிகாரத்தில் என்ன நேரம் என்பதையும் எவ்வளவு முயன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அருகில் நின்ற ட்யூட்டி நர்ஸ் என்னையும் என் தலைக்கு மேலிருந்த மானிட்டரையும் கண்காணித்தப்படியே, விறுவிறுப்பாய் எழுதிக் கொண்டிருந்தார்.

ஐ சி யூவில் இருக்கின்றோம் என்பது புரிந்தது. “தாகம்” என்று சைகையில் காண்பித்தேன்.

தண்ணீரை எடுத்து எண்ணி ஐந்து சொட்டுகள் உதடுகளுக்கிடையில் மெல்ல விட்டார் அந்த புண்ணியவதி. உதடுகளைத் தாண்டி அவை தொண்டை வரை கூட சென்றிருக்க வாய்ப்பில்லை.

உச்சந்தலை தொடங்கி, உள்ளங்கால் வரை “விண்-விண்”-னென்று வலி தெறித்தது. என் மொத்த உடலுறுப்புகளும் மருத்துவ உபகரணங்கள் வசம் குத்தகைக்கு விடப்பட்டிருப்பது தெரிந்தது. வாய் வழியே வெண்டிலேட்டர், மூக்கிலிருந்து இரைப்பை வரை நீளும் டியூபுகள், நடுவயிற்றில் இருந்து செங்குத்தாய் வெளியேறி படுக்கையின் அடியிலிருந்த குடுவைகளுக்குள் நுழையும் விரல் சைசில் மூன்று குழாய்கள், பிளாடரில் இருந்து சிறுநீரை வெளியேற்ற கத்தீட்டர் ட்யூப் மற்றும் யூரின் குடுவை, கழுத்தின் வலதுபுறத்தில் தமனி இரத்தக்குழாயில் கொத்தாய் செருகப்பட்டிருந்த இன்ஜக்‌ஷன் ட்யூபுகள், அவைகளின் மறுமுனையில் இணைக்கப் பட்டிருக்கும் பம்ப், மார்பைச் சுற்றி ஈ.சி.ஜி எலக்ரோடுகள், இரண்டு கை மணிக்கட்டுகளிலும்

ஐ வி ஊசித் தொகுப்புகள், விரலில் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், போதாக்குறைக்கு வலது தொடையும் அடிவயிறும் இணையும் இடத்தில் ஊசி போன்றொரு ப்ரோப். மார்பிலும் கால்களிலும் ஆபரேஷன் செய்த இடங்களில் சாண்நீள, முழநீள பாண்டேஜ்கள்.

ஐயோ, சுயமாய் மூச்சுகூட விட முடியவில்லை!

இருதய இரத்த குழாய்களில் ஏற்பட்டிருந்த மூன்று பெரும் அடைப்புகளை சரி செய்ய, “பை பாஸ்” என்னும் மருத்துவ அறுவை சிகிச்சை. மார்பை இரண்டாய் பிளந்து, நுரையீரலை மெதுவாய் விலக்கி விட்டு, நடுவிலிருக்கும் இதயத்தை மிக நுணுக்கமாய் பட்டிப் பார்த்து, ஒட்டு போடுகிற வேலை. மார்பிலிருந்தும், கால்களிலிருந்தும் ஆரோக்கியமான இரத்த குழாய்களை லாவகமாய் உருவி எடுத்து, அடைபட்ட இடங்களில் மாற்று வழிகளை ஏற்படுத்தும் நவீன மருத்துவ நிபுணத்துவம். நேற்று அறுவை சிகிச்சை அரங்கில் படுக்க வைத்து மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்பாக, மருத்துவர் ஒருவர் எனது பெயரைக் கேட்டது மட்டும்தான் ஞாபகம் இருக்கிறது. மற்றபடி அதற்குப் பிறகு இருபத்திநான்கு மணி நேரம், என்ன நடந்தது என்று எனக்கு சுத்தமாய் தெரியவில்லை.

மயக்க மருந்தின் வீரியம் குறையக் குறைய, வலி உக்கிரமாய் உயர்ந்து கொண்டே போனது. கண்ணில் பட்டவர் வருவோர் போவோர் எல்லோரிடமும் “வலி, வலி” என்று கதறிக் கொண்டிருந்தேன். வந்து பார்க்கும் மருத்துவர்கள், இன்னும் கொஞ்சம் “பெயின் கில்லர்” போட்டு விடுங்கள் என்று நர்ஸிடம் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றார்கள். தண்ணீர் தாகம் வாட்டி எடுத்தது. வெண்டிலேட்டர் எடுத்தால்தான் தண்ணீர் கொடுக்க முடியும் என்று சமாதானம் பேசினார்கள். வெண்டிலேட்டர் எடுக்க குறைத்தபட்சம் ஐம்பது சதவீதம் சுயமாய் சுவாசிக்க வேண்டுமாம். மூக்காலும் வாயலும் மூச்சை இழுத்துவிட முயற்சிக்கின்றேன். நரக வேதனை என்பார்களே, அதுதான் இதுவா?

ஒரு வழியாய் நுரையீரல் மருத்துவர், (பல்மனாலஜிஸ்ட்) பரிசோதித்து விட்டு வெண்டிலேட்டரை எடுத்து விடலாம் என்று கருத்து சொன்னார். கண்களை மூடச் சொல்லி, வேக்வம் குழாயை வாயில் செருகி, சுத்தம் செய்து கொண்டே, ஒரே நிமிடத்தில் வெண்டிலேட்டரை உருவி வெளியே எடுத்து விட்டார்கள். கடைகண் வழியே, ப்ளாடர் போன்றொன்று நீளமாய்த் தெரிந்தது. மூக்கின் குழாய்களும் அகற்றப் பட்டன. “அப்பாடா” என்று நெஞ்சின் பாரம் குறைந்தது. வாக்கு கொடுத்தபடி தண்ணீர் தாரளமாய் தருவார்கள் என்று எதிர் பார்த்ததில் பெரும் ஏமாற்றம். ஐந்து சொட்டு ரேஷன் இன்னும் தொடர்ந்தது. உடனே தண்ணீர் குடித்தால் உணவுக் குழாயிருந்து மூச்சுக் குழாய்க்குள் தண்ணீர் புகுந்து விடுமாம். சற்று நேரம் பொறுத்திருக்க சொன்னார்கள். பொறுத்திருந்தேன்!.

தொடரும்