தொடர்கள்
கதை
நாளை முதல் குடிக்க மாட்டேன் - கி ரமணி

20260311081035855.jpeg

அந்தச் சுற்றுவட்டாரமே இருளில் மூழ்கிக் கிடந்தது.

கடையின் வெளியே மட்டும், தகரக் கூரையின் கீழ் ஒரு அழுக்கு, சிவப்பு நிற மின்விளக்கு தூக்கக் கலக்கத்தில் எரிந்து கொண்டிருந்தது. "நீ எத்தனை வாட்ஸ்?" என்று யாராவது கேட்டால், அந்தப் பல்பே "வாட்?" என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அதன் ஒளி மங்கலாக இருந்தது.

கடைக்குள்ளே ஒரு நீண்ட ஓலைக் கொட்டகை. சில பழைய பெஞ்சுகள், சிதிலமடைந்த நாற்காலிகள், ஓரிரு பிளாஸ்டிக் மேஜைகள். தரை முழுதும் மூடியில்லாத காலி பாட்டில்கள் சிதறிக் கிடந்தன.

'கடை' என்று சொல்வதற்கு, அங்கு விற்கப்படுவதற்கு எதுவுமே இல்லை.

எதிரே சற்றுத் தொலைவில் ஜி.எஸ்.டி சாலை.

வானில் அப்பப்போ மேகங்களுக்கு இடையில் இருந்து எட்டிப்பார்க்கும் பதினான்காம் நாள் நிலவு, கொள்ளை அழகுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது. அந்த நிலவொளி, பழைய ஜன்னல் கம்பி இடுக்குகளின் வழியாகக் கசிந்து, வழிந்து, கடைக்கு உள்ளே கொஞ்சம் மத்தாப்பு கொளுத்தியது.

கடை உள்ளே ஒரு பெஞ்சில் ஒருக்களித்துப் படுத்திருந்த மாணிக்கம் அசையவில்லை. ஆனால், அவன் உடல் முன்னெப்போதும் இல்லாதவாறு மிகவும் இளகியது போல அவனுக்குத் தோன்றியது. ஆகாயத்தில் மிதப்பது போன்ற ஒரு புத்துணர்ச்சி.

'இப்போ வெளில போய் ஒரு கட்டிங் அடிச்சா எப்படி இருக்கும்? ஆனா கைல காசு இல்லையே. அழகுவை எழுப்பிக் கேட்கலாம்' என்று எண்ணினான்.

"எழுந்திரு அளகு..." என்றான் மாணிக்கம்.

அழகு, அவனுக்கு இரண்டு மீட்டர் தூரத்தில் ஒரு அழுக்கு மர நாற்காலியில் அமர்ந்து, தன் தலையை மேஜை மேல், இஸ்திரிக்கு விரிக்கப்பட்டிருந்த துணி போல் பரத்திக் கிடத்தியிருந்தான்.

"அழகு, இன்னும் கொஞ்சம் சரக்கு போடணும்பா. பைசா இருக்கா?"

அழகு அசையவே இல்லை. ஆனால், அவனது குரல் மட்டும் மாணிக்கத்துக்கு அருகில் மிகத் தெளிவாகக் கேட்டது:

"ராமேஷை எழுப்பு அண்ணே. அவன்கிட்ட பணம் இருக்கும். இப்போ மணி என்ன? கடை எதுனாச்சும் திறந்திருக்குமா?"

"நடுராத்திரி... நம்ம சுப்பையா பொட்டிக்கடை திறந்திருக்கும். உள்ள எதுனா சரக்கு வச்சிருப்பான்." என்ற மாணிக்கம், கீழே ரங்கநாதர் போலக் கிடந்த ரமேஷை அழைத்தான்.

ரமேஷும் அசையவில்லை. ஆனால், அவனது குரலும் மாணிக்கத்துக்கு மிக அருகில் ஒலித்தது.

"மாணிக்கம் அண்ணே! நிஜமாவே இப்போ குடிச்சுதான் ஆகணுமா?" என்று கேட்டான் ரமேஷ்.

"ஏண்டா இப்படிப் பேசற? நாளைக்கே உன் பணத்தைத் திருப்பித் தந்துடுறேன். கவலைப்படாதே!" என்றான் மாணிக்கம்.

"சீ சீ... அது இல்லண்ணே! அரை மணி நேரத்துக்கு முன்னாடி நல்லா தூங்கிட்டு இருந்த எனக்கு, திடீர்னு ஒரு மின்னல் அடிச்ச மாதிரி வெளிச்சம் தெரிஞ்சது. உடம்பெல்லாம் லேசாயிடுச்சு.

என் ஆத்தாவும், நான் லவ் பண்ற கங்காவும் தினமும் சொல்லுவாங்க... 'குடியை நிறுத்து ரமேஷ்'னு. இப்போ என்னவோ தெரியல, மனசு ரொம்ப இதமா இருக்கு. நிஜமாவே குடியை நிறுத்திடலாமான்னு தோணுதுண்ணே!"

மாணிக்கத்திற்கு இது ஆச்சரியமாக இருந்தது. நாற்பத்தைந்து வயதைக் கடந்த அவனுக்கு, தான் குடியால் தொலைத்த வேலைகளும், குடும்பச் சண்டைகளும், மகளின் இன்ஜினியரிங் படிப்பு ஆசையும் நினைவுக்கு வந்தது. கடந்த சில நிமிஷங்களாக அவனுக்கும் உள் மனசில் குடியை நிறுத்தணும் என்று தோன்றிக் கொண்டுதான் இருந்தது.
இருந்தாலும் இந்த பாழாய் போன மனச் சபலம் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

"சரி ரமேஷ், இன்னைக்குத்தான் லாஸ்ட். இனிமே நானும் நீயும் சரக்கை தொட வேண்டாம். நீ என்ன சொல்ற அளகு?"

மேஜையிலிருந்து தலையை நிமிர்த்த முயன்ற அழகு தோற்றுப்போனான். ஆனால், அழகுவின் குரல் இவர்களுக்கு அருகில் ஒலித்தது:

"என்னப்பா, எல்லாரும் திடீர்னு புத்தனா மாறிட்டீங்க? எனக்கும்அப்படி ஆசைதான். மூணு வருஷம் முன்னாடி குடிச்சுட்டு நான் லாரி ஓட்டி மோதினதுல மூணு பேர் செத்துப்போனாங்க. இல்ல... அந்தப் பாவம் இன்னும் என்னைத் துரத்துது. இன்னைக்கு கடைசியா இருக்கட்டும். எனக்கும் கொஞ்ச நேரம் முன்னாடி மனசெல்லாம் ரொம்ப நிம்மதி ஆகி இந்த மாதிரி குடிய நிறுத்தணும்னு தோணித்து. நாளைல இருந்து குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணறேன். சரி, இன்னிக்கு மட்டும் குடிக்கலாம். கிளம்புங்க!"

மூவரும் கிளம்ப எத்தனித்த போதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது.

ஒருவராலும் தங்கள் உடலை அசைக்க முடியவில்லை!

"உடம்பை அசைக்க முடியல அண்ணே!" என்று தவித்தனர் ரமேஷும் அழகுவும்.

"ஆமாம்பா... இது என்னன்னு புரியலையே?" என்ற மாணிக்கம்.

திடுக்கிட்டுச் சொன்னான்: "அட... அந்த பெஞ்சுல ஒருக்களிச்சுப் படுத்துட்டு இருக்கிறவனைப் பார்த்தா என்னை மாதிரியே இருக்கே!"

"என்ன அண்ணே சொல்ற? நீயேதான் அது!" என்று சிரித்த ரமேஷ், அடுத்த நொடியே உறைந்து போனான்.

"கீழே சுருண்டு கிடக்கிறவன்... அது... அது நான் தானா?"

அழகு பதற்றத்துடன் கத்தினான்: "மேஜை மேல தலை வச்சுப் படுத்திருக்கிறது நான் தான்!"

மூவரும் தங்களைத் தாங்களே சில அடி உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்து திகைத்தனர்.

தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது. சில போலீஸ் வேன்களும், ஆம்புலன்ஸ்களும் ஜி.எஸ்.டி சாலையில் வந்து நின்றன.

"போலீஸ் வருது... நம்மைப் பிடிச்சிடுவாங்களோ?" என்று பயந்தான் ரமேஷ்.

"சத்தம் போடாம இருங்க, தூங்குறோம்னு நினைச்சுட்டு போயிடுவாங்க. அப்புறம் பாத்துக்கலாம்." என்றான் மாணிக்கம்.

சுற்றுவட்டாரத்தில் கிடந்த பலரை போலீஸார் அள்ளிச் சென்றனர்.

இன்ஸ்பெக்டர் பார்த்திபன் டார்ச் அடித்தபடி இவர்கள் அருகே வந்தார்.

"இங்க மூணு பேர் கிடக்கிறாங்க. டாக்டர் கொஞ்சம் பாருங்க." என்றார்.

டாக்டர் ஒருவர் மூன்று பேர்களின் நாடித் துடிப்பு, இதய துடிப்பு, மூச்சு, கண்கள் எல்லாம் சோதித்தார். பின் உதட்டைப் பிதுக்கிவிட்டு இன்ஸ்பெக்டரைப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தன் உதவியாளரை அழைத்தார்.

"சரவணன், இங்கேயும் மூணு பாடி கிடக்குது. இதையும் வண்டில ஏத்துப்பா. மொத்தமா 55 பாடி ஆச்சு. எல்லாம் இன்னைக்கு நைட்டு விஷச் சாராயம் குடிச்சு செத்த கேசுங்க!"

தங்கள் உடல்களைப் போலீஸ்காரர்கள் தூக்கிக்கொண்டு செல்வதை, அந்த மூவரும் தடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"நாளை முதல் குடிக்க மாட்டேன்" என்கிற அவர்களின் உறுதிமொழி, மட்டும் எப்படியோ நிறைவேறி விட்டது.!