
என்னங்க, இன்றைக்காவது அந்த ஹோமிற்குச் சென்று புக் பண்ணிட்டு வாங்க..என தனது கணவன் சுந்தருக்கு ஞாபகமூட்டினாள் ராதிகா..
அவசரப்படாதே, விசாரிப்போம் என்ற அதே பதிலை பலமுறைச் சொன்னதை ராதிகா ரசிக்கவில்லை
" நான் என்ன, அத்தையை பிடிக்காமலா கொண்டுச்சேர்க்கச் சொல்கிறேன்?
அவங்களால ஒரு வேலையும் செய்ய முடியலை,நமது குழுந்தையைக்கூட பார்த்துக்க முடியலை, நமக்கு இருக்கின்ற வேலை நெருக்கடியினாலே அவர்களை நாம் கவனிக்கவும் முடியலை என அவளை அனுப்பி வைக்க இவைகள் காரணமென நீண்டதொரு பட்டியலிட்டாள்.
சரி என்று கிளம்பிய சுந்தர் மாலை அலுவலக வேளை முடிந்து அந்த பிரபல காப்பகத்திற்குச் சென்றான்.
காப்பகம் அமைந்த இடத்தைப் பார்த்ததும், இளம்வயதில் அம்மா சொன்ன வார்த்தைகள் சுந்தருக்கு நினைவில் வந்தன.
"சுந்தரு இங்கேதாண்டா நீ பொறந்த" என்று ஆறாம் வகுப்பின் போது அவ்வழியே அப்பாவுடன் செல்லும் போது சொன்னதாக நினைவு. அதன்பின்பு வெளியூரில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து, பிறகு சென்னையில் இன்ஜி. படிப்பு படித்து வேலையும் பார்த்ததில் ஊர்பக்கம் வருவதற்கு நேரமில்லாமல் போனது இந்த பத்து வருடங்களில் ஊரே வேறு மாதிரி மாறிப்போயிருந்தது.
காப்பக அலுவலகத்திற்குள் வந்த சுந்தரை அம்மையார் ஒருவர் வரவேற்றார்.
யாருக்கு அட்மிசன் ? ஊர் ? அம்மாவின் பெயர், விலாசம் என விபரங்களைக்கேட்ட அம்மையார்..
கொடுத்ததும் உன் பெயர் சுந்தரா?! என கேட்டதும் அதிர்ச்சியடைந்தான் சுந்தர்.
என்னைத் தெரியுமா உங்களுக்கு ?!
தெரியுமாவா ?
உன் அம்மாவிற்குப் பிரசவம் பார்த்ததே நான்தான்பா,அதாவது உன்னை முதலில் கையில் ஏந்தியவள் நான்தான் என்றவள்,
நல்லாயிருக்கியா? அப்பா,அம்மா எப்படியிருக்காங்க என்றவளை ஆச்சரியமாகப் பார்த்தான் சுந்தர்.
கிட்டத்தட்ட 23 வருடங்களாயிற்றே இன்னும் எப்படி ஞாபகம் வைத்திருக்கீங்க என்று சுந்தர் கேட்டான்
நீ பொறந்து பத்துவயது வரை ஊசிகள் போட இங்கேதான் உன் பெற்றோர் அழைத்து வருவார்கள் அதனால் உன்னை நல்லா ஞாபகமிருக்கு என்ற அம்மையார்,
ஐந்து வருடத்திற்கு முன்பு இந்த மருத்துவமனை டிரஸ்ட்டாக மாறி முதியோர் காப்பகமா திறந்திட்டாங்க,
மருத்துவமனை ஊருக்கு வெளியே வேறு இடத்திற்குச் சென்றுவிட்டது என்றவள்,
நீ என்ன செய்கிறாய் சுந்தர் ?!என விசாரனையை ஆர்வமாகத் தொடங்கினாள்.
ஐடீ கம்பெனி ஒன்றில் பணி செய்வதாகவும், மனைவி உள்ளூரில் ஆசிரியராக உள்ளதாகவும், அம்மா தங்கள் கூட இருக்கிறார் என்றதும் அப்பா ? என கேட்டாள் அம்மையார்
அவர் தவறி ஐந்து வருடங்களாயிற்று என்றவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்அம்மையார்.
அம்மாவை இங்கே சேர்க்கணும் நீங்கதான் உதவி செய்யணும் என வேண்டுகோள் வைத்தான்.
உங்க அம்மாவை மட்டுமல்ல சுந்தர், இங்கு பல அம்மா, அப்பாக்கள் இருக்கிறார்கள் நாங்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம் என்றவள்,
அதுக்கு முன்னாடி ஒரு கதை சொல்லணும் உனக்கு என்று நிறுத்தினாள் அம்மையார்.
அது ஒரு மழைக்காலம் டிசம்பர் மாதம்,அன்று நல்ல மழை நேரம், பிரசவத்திற்காக பெண்மணியை ஒரு வாரத்திற்கு முன்பே இங்கே கூட்டிவந்து அட்மிட் செய்தார்கள் வீட்டில் கவனிக்க யாருமில்லை என.
ஆட்டோக்காரர் ஒருவர்தான் அழைத்து வந்து சேர்த்தார். இடுப்பு வலியும் முன்னரே வந்து விட்டது, குழந்தை பனிக்குடத்தில் உள்ள நீரை குடித்துவிட அதற்கும் மூச்சுத் தினறல் ஏற்பட்டது.
அந்தம்மாவிற்கு லோ பீபி மற்றும் Dehydration ஆகி வியர்த்து மயக்கமடைந்து விட்டாள்.
இரு உயிர்களுக்கும் ஆபத்து,ஒருவரைதான் எங்களால் காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினாலும் அந்த ஏழை ஆட்டோக் காரரின் வேண்டுகோளை ஏற்று, உள்ளூரில் உள்ள மருத்துவர்களை
யெல்லாம் அழைத்து நன்கு கவனித்து முடிவெடுத்து விரைந்து அறுவை சிகிச்சையினைச் செய்து, அந்த பெண்மணியை தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள்.
பசியால் அழுத அந்த பச்சிளங்குழந்தைக்கு இங்கு பிரசவத்திற்கு சேர்ந்த அம்மாக்களிடம் மாற்றி மாற்றி கொடுத்து தாய்ப்பால் கொடுக்கச்செய்தோம்
ஒரே மூலதனமான ஆட்டோவை விற்று கிடைத்தப் பணத்தில் மருத்துவம் பார்த்து தஞ்சாவூர் சென்ற குழந்தையின் அம்மா நல்லபடியாக திரும்ப வந்துவிட்டார். எங்களுக்கெல்லாம் ஒரே மகிழ்ச்சி.
கிருத்ஸ்மஸ் அன்று குழந்தை பிறந்ததினால், ஒவ்வொரு ஆண்டும் அந்த ஏழைப் பெற்றோர்கள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கி தனது மகனின் பிறந்த நாளையும், மனைவியின் உயிரைக்காத்த அந்த நாளையும், தனது மனைவியுடன் சில பல வருடங்கள் வரை இங்கே வந்திருந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த ஆட்டோக்காரர் என்று நிறுத்தியவர், உனக்கு இப்போது புரிந்திருக்குமென நினைக்கிறேன்.. உங்கப்பா அம்மா தான். சுந்தருக்கு கண்ணீர் வந்து விழிகளை முட்டி நின்றது.
நீ உன் அம்மாவை இங்கே சேர்த்துவிடு நாங்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்கின்றோம் என்றவள்,
இந்தாப்பா இதுதான் பார்ம் இதைப்பார்த்து விபரங்களைப் பூர்த்தி செய்திடு என பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி பார்ம் ஒன்றினைக் கொடுத்துவிட்டு வேலை நிமித்தமாக அங்கியிருந்து நகர்ந்தாள்.
அந்த விண்ணப்பத்தில் மனைவி ராதிகாவின் வீட்டு விலாசமும், அவளின் சகோதரரின் பெயரைக்கண்டதும் சிரித்துக்கொண்டே ராதிகாவை அலைபேசியில் அழைத்தபோது,சுந்தர் பார்வையில் பட்டது சுவற்றில் இருந்த
"வாயும் மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண் பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரசனுக்குத்
தாயும் மகளும் தாரமும் ஆமே" (திருமந்தரம் 1184)
என்கிற வாசகம்.
ராதிகா உங்கம்மாவையும் இங்க சேர்க்க உங்கண்ணன் ஃபாரம் எழுதி கொடுத்திருக்கான், அவர்களிடம் சொல், நானே இருவரையும் பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்து விட்டேன்.
பூர்த்தி செய்யாமல் அங்கியிருந்து கிளம்பிய சுந்தரை நிறுத்திய அம்மையார்
என்ன சுந்தர்! தாயைப் புரிந்துக்கொண்டாயா? என கேட்டாள்.
இல்லை, தாய்மை எதுவென புரிந்துக் கொண்டேன் என்று நன்றி சொல்லி விடைபெற்றான்.

Leave a comment
Upload