தொடர்கள்
விகடகவியார்
நீட் தேர்வு

20260422211955884.jpeg

மருத்துவ இளநிலை பட்டப்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடந்தது.

இதில் 20 லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தேர்வை எழுதினர்.

தமிழ்நாட்டில் சுமார் 1.4 லட்சம் மாணவர்கள் இத்தேர்வு எழுதினார்கள்.

ஒன்பது நாட்கள் கழித்து தேசிய தேர்வு முகமை முதல்முறையாக இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதற்கான காரணத்தை அதனை இயக்குனர் அபிஷேக் சிங் குறிப்பிடும் போது தேர்வு நடந்த நான்கு நாட்கள் கழித்து மே 7-ஆம் தேதி அன்று மாதிரித்தாள் ஒன்றின் பிடிஎப் வாட்ஸ் அப்பில் பரவியதை பார்த்தபோது அது கிட்டத்தட்ட உண்மையான வினாத்தாளை ஒத்திருந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 வினாக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வினாக்கள் தேர்வுக்கு பல நாட்கள் முன்பே ராஜஸ்தானில் வெளியாகிவிட்டது.

உத்தேச வினாக்கள் தொகுப்பு என்ற பெயரில் கைகளால் எழுதப்பட்ட 410 வினாக்கள் கொண்ட ஆவணம் ராஜஸ்தானில் மற்றும் வட மாநிலங்களில் மின்னல் வேகத்தில் பரவியது.

அதில் உள்ள வினாக்களை மட்டும் படித்தால் கிட்டத்தட்ட 720-க்கு 600 மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்று இந்த விஷயத்தில் வழக்கு பதிவு செய்துள்ள ராஜஸ்தான் காவல்துறை தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக 13 பேரிடம் ராஜஸ்தான் காவல்துறை விசாரித்துக் கொண்டிருந்தது.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு பத்தாண்டாகும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வினாத்தாள் கசிவது, விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் குளறுபடிகள், தேர்வில் ஆள் மாறாட்டம் என ஏதாவது ஒரு முறை கேடு நடப்பது வழக்கம் ஆகிவிட்டது.

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேசியத் தேர்வு முகமை தரப்பில் திருப்தி அளிக்கும் வகையில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

நடப்பாண்டிலும் வினாக்கள் கசிந்தது குறித்த சர்ச்சையை மூடி மறைக்கவே முதலில் முயற்சி நடந்தது. இப்போது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது.

நீட் வினாத்தாள்கள் ஐந்து கட்டங்களாக தயார் செய்யப்படுகிறது.

முதல் கட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் நீட் தேர்வுக்கான வினாக்களை தயாரிக்கின்றனர்.

இரண்டாம் கட்டமாக பேராசியர்கள் அளித்த வினாக்கள் தொகுக்கப்பட்டு இருவகையான வினாத்தாள்கள் தயாரிக்கப்படும்.

மூன்றாம் கட்டமாக இருவகை வினாத்தாள்களிலும் எழுத்து கருத்துப் பிழைகள் சரிபார்க்கப்பட்டு...

நான்காம் கட்டமாக தேர்வு முகமை மூத்த அதிகாரிகள் வினாத்தாள்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்குவார்கள்.

ஐந்தாம் கட்டமாக இருவகை நீட் வினாத்தாள்கள் அச்சடிக்கப்படும்.

இதில் ஒருவகை வினாத்தாள் மட்டுமே தேர்வின் போது வழங்கப்படும்.

சிபிஐ விசாரணையில் நீட் வினாத்தாள்களை விற்பனை செய்ததாக நீட் வினாத்தாள் தயாரிப்பு குழுவில் இருந்த மகாராஷ்டிராவை செய்த பேராசிரியை மனிஷா குருநாத் மற்றும் பேராசிரியர் குல்கர்னி இருவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த வினாத்தாள்களை நீட் பயிற்சி நிலையங்களுக்கு விற்பனை செய்து 32 லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வுக்குழுவில் இருக்கிறார்கள்.

இப்படி மோசடி வேலை தொடர்ந்து செய்து இருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர இவரது குடும்பத்தை சேர்ந்த பலர் நீட் தேர்வில் வெற்றி பெற்று, இப்போது மருத்துவர்கள் ஆக மற்றும் மாணவர்களாக இருக்கிறார்கள் என்பதும் இப்போது விசாரணையில் தெரிந்தது.

இவர்களே ரகசியமாக நீட் தேர்வு பயிற்சி முகாமும் நடத்தி இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட இருவரும் இதன் மூலம் ஒரு கோடிக்கு மேல் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பது சிபிஐ விசாரணையில் தெரிந்திருக்கிறது.

இதுவரை சிபிஐ 13 பேரை கைது செய்திருக்கிறது.

சிபிஐ விசாரணை மூலம் தேசிய தேர்வு முகமை மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கிறது.

தேர்வு முகாமை உள்ளிருந்தே இந்த வினாத்தாள் மோசடி நடந்திருப்பதை கைது நடவடிக்கைகள் மூலம் சிபிஐ உறுதி செய்து இருக்கிறது.

மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு...

இளநிலை மருத்துவ படிப்புக்கான தேசிய தேர்வு முகமையை கலைக்க கோரி உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள்.

தேர்வு எழுதுவோர் எதிர்கொள்ளும் மிகுதியான மன உளைச்சல்களையும் மீறி தேர்வு எழுதியவர்களுக்கு மறுதேர்வு என்பது ஏமாற்றத்தை தான் தந்திருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் 3 மணி நேரம் தூக்கம் என்று கடின உழைப்புடன் படித்தேன். யாரோ செய்த தவறுக்கு இப்போது நான் பலிக்கடா என்னுடைய உழைப்பு இன்று எதற்கும் பயனில்லமால் போய்விட்டது என்று மாணவர்கள் வருத்தப்படுகிறார்கள்.

பல மாணவர்கள் மருத்துவர் கனவில் தேர்வாக வேண்டும் என்று இரண்டு முறை மூன்று முறை தொடர்ந்து எழுதுகிறார்கள்.

மாணவர் இந்த முறை நான் நன்றாக எழுதியிருந்தேன் நிச்சயம் மருத்துவராவேன் என்ற கனவில் இருந்தேன். இப்போது அந்த கனவு உடைந்து விட்டது. மறுதேர்வு என்பது மன உளைச்சல் தான் என்கிறார்.

யாரோ செய்த தவறுக்கு என்னை ஏன் தண்டிக்கிறீர்கள் என்பது தான் பெரும்பாலான மாணவர்களின் கேள்வி.

தேசிய அளவில் பல்வேறு மாநில அரசுகள் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறார்கள். நீட் தேர்வு மீதான அவர்களுக்கு நம்பிக்கை வருவதற்கு மறுதேர்வு மட்டும் தீர்வாக இருக்காது.

மருத்துவர் கனவுடன் நீட் தேர்வு எழுதிவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவ மாணவிகளின் எதிர்கால கனவில் 'குறுக்கு வழியில் வெற்றி பெற 'முயற்சிப்பவர்களால் மண் விழுந்திருப்பது வேதனை அளிக்கிறது.

நீட் தேர்வு அவசியமா என்பது இந்தியா முழுவதும் இப்போது குரல்கள் சத்தமாக ஓலிக்க தொடங்கியிருக்கிறது.