
தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அவ்வப்போது ரசிப்பதுண்டு. சலிப்பூட்டும் நெடுந்தொடர்களைத் தவிர்த்துப் பார்த்தால் , நல்ல டாக் ஷோக்களும், இசை தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.
இவற்றுள் 'நீயா, நானா' இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் விவாத அரங்கம். சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளை அலசும் சுவையான நிகழ்ச்சி. இதே பாணியில் 'தமிழா தமிழா', 'வா தமிழா வா' போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்கள் வரவேற்பைப் பெறுகின்றன.
இசை மற்றும் பாடல்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை பல தொலைக்காட்சி சானல்கள் நடத்தி வருகின்றன. அவற்றுள் முக்கியமான நிகழ்ச்சி, "சூப்பர் சிங்கர், ' விஜய் டீ,வி யில் 'நீயா, நானா' போலவே இருபதாண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது, திரைப்பாடல்களை மையமாக வைத்து, 'தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் ' என்ற அடை மொழியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இப்போது வெளி மாநிலத்தவரும், வெளி நாட்டவரும் கூட பங்கு கொண்டு பரிசுகளைத் தட்டிச் செல்கின்றனர். பிரபல பின்னணி பாடகர்கள், இசை அமைப்பாளர்கள் நடுவர்களாக இருந்து பல சுற்றுகளில் தேர்வு செய்து வெற்றியாளரைத் தீர்மானிக்கிறார்கள்.
கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11 எல்லோரையும் நெகிழ வைத்தது. அதில் பாடிய 'சர்வேஸ்வரன்' என்னும் சிறுவன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி முழு அரங்கத்தையும் வசப்படுத்தினார், தொலைக்காட்சி ரசிகர்களை மெய் மறக்கச் செய்தார்.
அவர் இந்த ஷோவில் பங்கெடுத்துக் கொண்டு , 'மலையோரம் வீசும் காத்து ' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து, 'வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி' என்ற தேவர் மகன் பாடலையும் பாடினார். அவர் பாட, பாட அரங்கமே கண்ணீரில் நனைந்தது. நடுவர்களாக வந்தவர்கள் அனைவரும் முன்னாள் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள். அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் கரைந்தனர்.
அருமையான குரல் வளம், சரியான உச்சரிப்பு என்று அற்புதமான ஒரு அனுபவத்தை தன் மந்திரக்குரலால் வழங்கினார் சர்வேஸ்வரன். கடினமான இதயம் கொண்டவரையும் கரைத்து கண்ணீர் சிந்த வைத்தது அவர் பாட்டு. புதுக்கோட்டையில் இருந்து வந்துள்ள அந்த சிறுவன் இசை உலகில் பெரிதாக சாதிப்பான் என்று நம்புகிறேன்.
பல எளிய மனிதருக்கு இசை உலகின் கதவுகளைத் திறந்து வைத்த இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, இந்த பார்வை இல்லாத, ஏழை குடுமபத்து மாற்றுத்திறனாளிக்குப் புதிய வாழ்வைத் தரும் என்பதில் ஐயமில்லை.
டாப் 20 தேர்வில் நூறு மதிப்பெண் பெற்று தேர்வாகி இருக்கும் சர்வேஸ்வரனுக்கு மேலும் பல மேடைகளை இந்த நிகழ்ச்சி சாத்தியமாக்கும்.
பழைய பாடல்களுக்கு புத்துயிர் தந்து, போன முறை டைட்டில் ஜெயித்த திவினேஷ் போலவே சர்வேஸ்வரன் ஜெயிக்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர்.
நாமும் வாழ்த்துகிறோம்.
https://www.youtube.com/watch?v=0ehH2B09r6I

Leave a comment
Upload