
6) முகிழும் நாமங்கள் முன்னூறு
சமஸ்த ஜெகத்காரணி
ஏவமித் யாகமாபோத்யா சைகபக்தி மதர்ச்சிதா I
ஏகாக்ர சித்த நிர்த்யாதா சைஷணாரஹிதாத்ருதா II
அம்பிகை இவள்தான் என்று ஆகமங்களால் விளக்க முடியாதவள். யாரால்தான் அவளின் பிரபாவத்தை, அழகை, கடாக்ஷத்தை அளவிட்டுக் கூற முடியும்!
பிடிபட முடியாதவள் அம்பிகை.
ஒருமைப் பட்ட மனதுடன் துதிப்பவர்களால் மட்டுமே பூஜிக்கப் படுபவள்.
அம்பிகையின் அளவற்ற மகிமையை உணர்ந்தவர்கள் அவளை ஒருமைப் பட்ட மனதுடன் பூஜிக்கிறார்கள். அவளே சகலமும், என்று உணர்ந்தவர்களால் மட்டுமே அவளைப் பூஜிக்க முடியும்.
அதற்கு தியானம் உதவுகிறது.
மனதை அடக்கி, அவளையே நினைத்து பூஜிக்க தியானம் உதவுகிறது. அந்த ஏகாக்கிர சித்தியைத் தருபவளும் அவள்தான்.
மனதில் அவளை மட்டுமே நினைத்தால், மற்ற இடையூறுகளை அவளே ஒதுக்க வழி காட்டுவாள். மனதில் ஞான சக்தி பரவ உலக விஷயங்களில் பற்று இன்றி இருக்க வேண்டும். பற்றைக் கொடுப்பவளும் அவளே. அதிலிருந்து நம்மை விளக்கி வைப்பவளும் அவளே. இதைப் புரிந்து கொண்டால் அதுவே ஞானம்.
மந்திர எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றலைக் குறிக்கிறது. ஒரு அக்ஷரத்தின் சக்தியில் உள்ளார்ந்த பல பண்புகளையும் அது குறிக்கிறது. இந்த அக்ஷரங்கள் பிரபஞ்சம் முழுக்கப் பரவி நிற்கிறது. தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட அலை வரிசையில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புவது போல், அந்த அக்ஷரங்கள் அதற்கான சக்திகளை அளிக்கிறது.
மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை. ஆனால் அதை அர்த்தம் புரியாமல் ஆழ்ந்த பக்தியுடன் உச்சரித்தால் அவளே சரியான உச்சரிப்பை கற்றுத் தருவாள். உதாரணன்..நாமெல்லாம் அறிந்த கதை சத்தியவிரதன்.
தேவதத்தன் என்ற அந்தணனுக்கு சாபத்தின் காரணமாகப் பிறந்த உதத்தியன் ஊமையாகவும், மூடனாகவும் இருந்தான். எனவே அவன் எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு, வனம் நோக்கிப் புறப்பட்டான். அம்பிகையை நினைத்து தவம் செய்ய முயன்றவனுக்கு எந்த மந்திரமும் தெரியவில்லை.
ஆனால் உண்மை மட்டுமே பேசுவது என்று விரதம் இருந்தான். எனவே அவன் சத்தியவிரதன் என்று அழைக்கப்பட்டான். ஒருநாள் வேடனிடம் அடிபட்ட பன்றி அவனை நோக்கி உறுமலுடன் ஓடி வந்தது. இவன் பயந்து ஹ்ரூம், ஹ்ரூம் என்று கூச்சலிட ஆரம்பித்தான். அர்த்தம் புரியாமலேயே அம்பிகையின் பீஜாக்ஷர மந்திரத்தைக் கூறியவனின் மேல் அம்பிகையின் பார்வை விழுந்தது. ஊமையாக இருந்த அவன் பன்றியைத் தேடி வந்த வேடனை நோக்கிப் பேசத் தொடங்கினான்.
“யா பஸ்யதி நஸாப்ருதே யாப்ருதே ஸா ந பஸ்யதி
அஹோ வ்யாத ஸ்வகார்யாத்தின்கிம ப்ருச்சஸி
என்று அற்புதமான ஒரு ஸ்லோகம் ஒன்றைச் சொல்கிறான்.
பார்க்கும்போது பேசாது. பேசும்போது பார்க்காது என்ற பொருளில் அவன் சொன்ன ஸ்லோகம் மிக உயர்வாகக் கருதப் படுகிறது. அபூர்வமான வார்த்தைகளைப் போட்டு அவன் கூறிய மந்திரத்தின் பொருள் அறியாது வேடன் அங்கிருந்து சென்று விடுகிறான்.
அம்பிகையின் அருளால் பேசவும், அறிவும் பெற்ற அவன் மிகச் சிறந்த கவிதைகளை மழையாகப் பொழியத் தொடங்கினான். அர்த்தம் இன்னதென்று, அம்பிகையின் பீஜ மந்திரம் என்று அறியாமல் வெறும் வார்த்தைகளை உச்சரித்த அவனுக்கே தேவி அற்புதமான ஆற்றல்களை வழங்கினாள்.
சர்வ மங்கள வடிவானவாள் தேவி. “சமஸ்த ஜகதாதார காரண பூதை” என்று துதிக்கிறது. பராசக்தியின் அருளாலேயே பல அரும்பெரும் செல்வங்களை அடையலாம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் கருணை மழை பொழியும் அருட்சக்தி அம்பிகை.
நைமி சாரண்யம் என்னும் இடத்தில் ஒருமுறை வருகை புரிந்த சூத முனிவர் தேவியின் பராக்கிரமங்களை, லீலைகளை அங்கிருந்த முனிவர்களுக்கு உரைத்தார். அதுவே தேவி பராக்கிரமம். இதை நவராத்திரி நேரத்தில் படித்தால் பராசக்தியின் அருளைப் பெறலாம்.
அம்பிகையே கிருஷ்ண பக்ஷ அஷ்டமி, நவமி, சதுர்த்தசி தனக்குப் பிடித்தமான தினங்கள் என்கிறாள். அவள் ஓம்கார வடிவமாக விளங்குகிறாள். சுவர்க்கமே அவளின் தலை. ஆகாயம் தொப்புள், சூரியன், சந்திரன், அவளின் கண்கள், எட்டு திசைகள் செவியாக, பாதாளமே திருவடியாக விளங்குகிறது.
தன் பக்தர்களின் நலனுக்காகவே அவள் உருவம் தாங்கி நிற்கிறாள். ஒலி ரூபமாகத் திகழ்வதாலேயே லலிதா த்ரிசதீ அக்ஷர வடிவங்களின் ரூபமாக இருக்கிறது. லலிதா சஹஸ்ரநாமம் படித்தாலும், த்ரிசதி படிப்பதன் மூலம் அவளின் அருளை முழுமையாகப் பெறலாம்.

Leave a comment
Upload