
தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், வதம் பச்சேரி, (பல்லிடம் அருகில்) நல்லூர் பாளையம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அழகுநாச்சி அம்மன் கோயில் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் ஒரு சக்தி வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் ஆடி முதல் மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயப் படைவீரர்கள் வழங்கிய புடவையை உடுத்தியபடி, அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது தொன்று தொட்டு இங்கு நடந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்துப் புடவையை அம்மனுக்கு உடுத்தி வழிபடும் இந்த வழக்கம், ஆன்மீகத்தையும் வரலாற்றையும் இணைக்கும் ஒரு சிறப்பான பாரம்பரியமாகும்.
கண் பார்வை பறிபோன ஆங்கிலேயப் படைவீரர்கள்:
1800-களின் தொடக்கக் காலத்தில் (1799-ல் திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோயம்புத்தூர் பகுதி ஆங்கிலேயர் வசம் வந்தது.) நல்லூர் பாளையம் கிராமம் வழியாகச் சென்ற ஆங்கிலேயப் படையில் இருந்த சில வீரர்கள், இங்குள்ள பெண்களிடம் தவறான முறையில் நடக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க அப்பெண்கள் அழகு நாச்சியம்மன் கோயிலுக்குள் சென்று தஞ்சமடைந்தனர். பெண்களைத் துரத்திக்கொண்டு கோயிலுக்குள் புகுந்த ஆங்கிலேயப் படைவீரர்கள் அம்மனின் கோபத்திற்கு ஆளாகி தங்கள் கண்பார்வை இழந்தனர். பார்வையிழந்த வீரர்கள் தவற்றை உணர்ந்து, தங்களை மன்னிக்கும்படி அம்மனிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டனர். இதன்படியே, அவர்கள் கண் பார்வையைத் திரும்பப் பெற்றனர். அழகுநாச்சி அம்மன் எனும் பெயர் கொண்ட இந்த அம்மன், பெண்களுக்கு அடைக்கலம் தந்ததால் 'அடைக்கல அம்மன்' என்ற பெயரும் உண்டு.

ஆங்கிலேயப் படைவீரர்கள் வழங்கிய புடவைகள்:
கண்பார்வை திரும்பப் பெற்ற ஆங்கிலேயப் படைவீரர்கள் அழகு நாச்சியம்மனுக்கு நன்றிக்கடனாகப் பட்டு மற்றும் கதர் புடவைகளை வழங்கி அம்மனை வழிபட்டுச் சென்றனர். இச்சம்பவம் நடந்தது ஆடி மாதம் என்பதால், ஒவ்வொரு ஆண்டும், ஆடி முதல் மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில், ஆங்கிலேயப் படைவீரர்கள் வழங்கிய புடவையை உடுத்தியபடி, அழகு நாச்சியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இன்றும் இக்கோவிலில் நடைபெற்று வருகிறது.
அழகு நாச்சியம்மன் கோயில் சிறப்பு:
ஆங்கிலேயப் படை வீரர்களுக்கு அவர்களின் தவற்றை உணர்த்தி, பின் மன்னிப்பு கேட்டுக்கொண்டதும் கண்பார்வையைத் திரும்ப வழங்கியதால், கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் அம்மனாகவும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தெய்வமாகவும், நீதி வழங்கும் தெய்வமாகவும் அப்பகுதி மக்களால் வழிபடப்படுகிறது.
புடவை சிறப்பு அலங்காரம் - 2026:
இந்த ஆண்டு ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஜூலை 17, 2026, ஆடி நான்காவது வெள்ளிக்கிழமை: ஆகஸ்ட் 7, 2026 இந்த குறிப்பிட்ட இரண்டு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே அம்மனுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆங்கிலேயப் படைவீரர்கள் வழங்கிய புடவை உடுத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் அடைக்கல அம்மனாகப் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்திருவிழாவிற்கு பல்லடம், சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் 11.00 வரை, மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் நேரம் மாறுபடும். முன்னதாகவே உள்ளூர் வாசிகளிடம் நேரம் கேட்டுக்கொள்வது சிறந்தது.
கோயிலுக்குச் செல்லும் வழி:
இந்த கோயில் வதம் பச்சேரி நல்லூர் பாளையம் கிராமம் கோயம்புத்தூரிலிருந்து பல்லிடம் மற்றும் சூலூர் செல்லும் பிரதான வழிகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
காந்திபுரம் அல்லது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து பல்லிடம் அல்லது திருச்சி செல்லும் பேருந்துகளில் ஏறி, காரணம் பேட்டை சந்திப்பில் இறங்க வேண்டும். காரணம் பேட்டையிலிருந்து சூலூர் - வதம் பச்சேரி பகுதிக்குச் செல்லும் உள்ளூர் பேருந்துகள் அல்லது தானிகள் மூலம் கோயிலை அடையலாம்.
சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து வதம் பச்சேரி மார்க்கமாகச் செல்லும் நகரப் பேருந்துகள் மூலமும் நேரடியாக இந்த கிராமத்திற்குச் செல்ல முடியும்.
நாமும் சக்தி வாய்ந்த அழகுநாச்சி அம்மன் கோயில் சென்று அருளினைப் பெறுவோம்!!

Leave a comment
Upload