தொடர்கள்
வலையங்கம்
எது நல்ல அரசு

20260422211528829.jpeg

20260422211622586.png

மேற்கு வங்கத்தில் புதிதாக அமைந்திருக்கும் பாஜக அரசு குடும்பத் தலைவிக்கு மாதம் மூன்றாயிரம் உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த திட்டத்துக்கு மாதம் 5 ஆயிரத்து 750 கோடி ஒரு ஆண்டுக்கு 69 ஆயிரம் கோடி செலவழிக்க வேண்டும். சென்ற நிதிஆண்டில் அந்த மாநிலத்தின் பற்றாக்குறை 35 ஆயிரத்து 314 கோடி ரூபாய். ஆனால், மாநிலத்தின் மொத்த ஜி.டி.பி யை அதிகரிக்க அந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

இதேபோல் தமிழ்நாட்டிலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை 2500 ரூபாயாக உயர்த்துவதாக தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது தமிழக வெற்றி கழகம். தற்சமயம் 10 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்துவிட்டு போய் இருக்கிறது முந்திய அரசு. இது தவிர அண்ணன் சீர் ஒரு சவரன், ஆண்டுக்கு 6 சிலிண்டர் இப்படி தேர்தல் வாக்குறுதி சமாளிக்க தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்பது தெரியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இது போன்ற இலவச திட்டங்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால், பாஜகவும் இப்போது இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்க ஆரம்பித்து விட்டது. நாட்டு மக்களை தங்கம் வாங்குவதை தவிருங்கள். பெட்ரோல் பயன்பாட்டை குறையுங்கள் என்று சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் ஆயிரக்கணக்கான கோடிகளை ஒவ்வொரு மாநிலமும் இலவச திட்டங்களுக்கு செலவிடுவது என்பது நகை முரண்.

ஒரு நல்ல அரசு என்பது மக்கள் வருமானத்துக்கான வாய்ப்புகள் அதிகரிக்க கூடிய அரசாங்கமாகத்தான் இருக்குமே தவிர கையேந்த வைக்கும் அரசாக இருக்க முடியாது என்பதை மத்திய மாநில அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.