
காலையில் எழுந்ததும் ஃபில்டர் காஃபியைச் சுவைத்துக்கொண்டே, கைப்பேசியைத் திறந்து முகநூலில் மூழ்கினேன். என் விரல்கள் ரீல்ஸில் வேக மெடுத்தன.
ஒரு ரீல்ஸ்... இன்னொரு ரீல்ஸ் என வரிசையாய் வந்து போக, காஃபியின் சுவை பின்னுக்குப் போனது.
சிரிப்பு, நையாண்டி, அரசியல், சங்கீதம் எனத் திரையில் காட்சிகள் கரைந்து கொண்டிருந்தன.
அப்போது, இழுத்துக் கட்டிய வேஷ்டி, பனியன், முண்டாசுடன், டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்து, தினசரித் தாளுடன் திடீர் தரிசனம் தந்தார் நம்ம "லட்டு பேபி".
ஆஹா…! "பேபி லட்டு" வந்துட்டான்! ஏஐ (A.I.) வார்த்தெடுத்த லட்டு. மிடுக்குடன் மின்னும் மாம்பழ மேனி, பிசிரே இல்லாத பேச்சு.
திரையில் அவனிடம் மைக் நீட்டப்பட்டது. "என்ன லட்டு! ஏதோ கவலையில இருக்க?"
"அது ஒன்னுமில்ல மைக்காரே... என் பொஞ்சாதிக்கிட்ட பேசினேன்" என்றான் சோகமாக.
"பொஞ்சாதி கிட்டதானே பேசினே, அதுக்கு ஏன் சோகம்? அப்படி என்ன பேசினே?"
"நைட்டு வீட்டுக்கு வர லேட் ஆகும்னு சொன்னேன், அவ்வளவுதான். ஏன், எதுக்குன்னு கூடக் கேட்காம, 'உனக்கு இதே புழப்பா போச்சு, தினம் தினம் லேட்டா வர்ற, கேட்டா ஏதோ கதை சொல்ற... நீ வீட்டுக்கு வா, உன்னை என்ன பண்றேன் பாரு'ன்னு எதையும் புரிஞ்சுக்காம கத்தறா பாஸ்!"
லட்டு பேபியின் இந்த ரீல்ஸ் காட்சி, என் மனதில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பழைய நினைவை சட்டென்று எழுப்பியது.
என் நண்பன் ராஜ் அன்று அடிக்கடி என்னிடம் புலம்புவான்: "இந்த விவகாரத்தை என் பெண்டாட்டிக்கிட்ட எப்படிச் சொல்லி சமாளிப்பேன்னு தெரியலடா..."
"அப்படி என்னதான் பிரச்சனை?" - தீர்த்து வைக்கும் ஆவலில் கேட்டேன்.
"ஒரு வாரமா நைட்ல வீட்டுக்குப் போக ரொம்ப நேரமாகுதுடா." அவனிடம் நிஜமான கவலை தெரிந்தது.
"ஆபீஸ்ல வேலைப் பளு அதிகமாயிடுச்சா?"
"அதெல்லாம் ஒன்னுமில்லடா. எங்க ஆபீஸ்ல ஒர்க் பண்ற மாலதி, ஒரு அவசர புராஜெக்ட்டை முடிக்க லேட் ஸ்டே பண்ணிட்டு, நைட் வீட்டுக்குத் திரும்பும்போது, ஒரு மேஜர் ஆக்ஸிடெண்ட்ல மாட்டிக்கிட்டா.
ஹாஸ்பிட்டல்ல அட்மிட்டாகி நாலு நாளாச்சு, இன்னும் நினைவு திரும்பல. ஐசியூவில் தான் இருக்கா. கிராமத்துப்பொண்ணு, வயசான அம்மாவைத் தவிர வேற யாரும் உதவிக்கு இல்ல. அதான் நான் கூடவே இருந்து ஹெல்ப் பண்ண வேண்டியதாப் போச்சு."
"இதை உன் மனைவி அனுகிட்ட ஓபன்னா சொல்ல வேண்டியதுதானே?"
"அவ தப்பா நினைச்சுப்பாளோ, தேவையில்லாம பிரச்சனை பெரிசாயிடுமோங்கிற பயத்துலதான் மறைச்சேன். அவ ஃபோன் பண்ணும்போதெல்லாம் ஆபீஸ்ல அர்ஜென்ட் ஒர்க், பாஸ் பிரஷர் தர்றார்னு பொய் சொல்லிக்கிட்டே இருந்தேன்.
ஆனா, நேத்து என் குழந்தைக்கு உடம்பு சரியில்லாம போகவும், அவசரமா டாக்டர் கிட்ட போகணும்னு அனு ஆபீஸுக்கு போன் பண்ணியிருக்கா. போனை எடுத்த என் பிரண்ட், 'அவன் நாலு நாளா மாலதியைப் பார்க்க ஹாஸ்பிட்டல்ல இருக்கான்'னு உண்மையை உடைச்சுட்டான்!"
ராஜ் அன்று அழுது விடுவான் போல் இருந்தான். "வீட்டுக்கு போனதும் அனு என்கிட்ட முகம் கொடுத்துப் பேசலடா. என்ன பண்றதுன்னு தெரியாம, தலைகுனிஞ்சு அவகிட்ட பேசத் தொடங்கினேன்..." என்றவன், தன் மனைவியிடம் சொன்ன வார்த்தைகளை என்னிடம் விவரித்தான்:
'அனு, மாலதிக்கு அவங்க அம்மாவைத் தவிர யாருமில்லை. நான் உதவிக்கு போனதை நீ தப்பா புரிஞ்சுப்பியோன்னு பயந்துதான் சொல்லாம மறைச்சேன். என்னை மன்னிச்சுடு அனு...'
ராஜ் சொல்லி முடிப்பதற்குள், அனுவின் கண்கள் கலங்கிவிட்டனவாம். அவள் ராஜ் எதிர்பார்க்காத அந்த 'மறு பக்கத்தை'க் காட்டினாள்.
"உங்களை எவ்வளவு உயர்ந்த இடத்துல வச்சு மதிக்கிறேன் தெரியுமா? நான் அவ்வளவு இரக்கமற்றவளா ராஜ்? நானும் ஒரு பெண்ணுங்கிறதை, எனக்கும் ஈரநெஞ்சம் இருக்கும்ங்கிறதை நீங்க எப்படி மறந்துட்டீங்க?" என்று வெடித்துவிட்டாள்.
அன்று ராஜ் என்னிடம் சொல்லி வருத்தப்பட்டான்: "அவள் வேகமாய் பேசிய அந்தப் பேச்சு என் அடிமனதை உலுக்கியதுடா. என் மனைவியின் அந்த உன்னதமான மறு பக்கத்தைப் பார்க்கும் பக்குவம் இல்லாமல் போச்சேன்னு என்னையே நான் நொந்துக்கிட்டேன்."
கைப்பேசித் திரையில் விரல்கள் ரீல்ஸை நகர்த்திக் கொண்டிருந்தாலும், என் மனம் மட்டும் நகராமல், மனிதர்களின் அந்த 'மறு பக்கத்தின்' ஆழத்திலேயே நின்றுவிட்டது!

Leave a comment
Upload