தொடர்கள்
கதை
அன்ன தானம் - வி பிரபாவதி

20260311072947993.jpeg

பரமுவின் இந்த செயல் எல்லோரையும் வியக்க வைத்தது. இது அவன் குணமே இல்லை. தருமம் என்பதே பிடிக்காது. பிச்சைக்காரர்களைக் கண்டால் எரிந்து விழுவான். “கையும் காலும் நல்லாத்தானே இருக்கு. ஒழைச்சுச் சாப்பிட வேண்டியது தானே?” என்பான்.

சிக்னலில் பேனாக்கள், பொம்மைகள் விற்பவர்களிடம் பல சமயம் மொத்தமாக வாங்கி ஏழை குழந்தைகளுக்குக் பரிசளிப்பதும் உண்டு.

வீட்டு வேலை செய்யும் துணை தேவதைக்கு ளீவு எடுத்தால் சம்பளம் கட். உடம்பு சரியில்லை என்றால் தனியாக மருந்து வாங்கிக்கச் சொல்லி பணம் தருவான். அது தனி என்பான். மொத்தத்தில் மற்றவர்களை நாம் சோம்பேறி ஆக்கிவிடக் கூடாது என்பான்.

பரமுவைப் புரிந்து கொள்வது கடினம்தான் என்றாலும், அவன் மனைவி சாந்தி எல்லாவற்றையும் அனுசரித்து போவாள். அவளுக்கு அவன் உள்மனதின் மென்மை புரியும்.

அப்படி என்ன வியக்கவைக்கும் செயலைச் செய்தான் பரந்தாமன்? அன்று காலை முதலே ஏதோ எதையோ பறிகொடுத்தாற்போல் காணப்பட்டான். கேட்கும் கேள்விகளுக்கு எசகு பிசகாக பதில் சொன்னான். குறிப்பாக எதிலும் மூக்கை நுழைக்காமல் அமைதி காத்தான். அவனுக்கு மட்டுந்தான் தெரியும் அவன் மனது ஒரு நிலையிலில்லாது தவிப்பது.

இரண்டு முறை வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்தான். பிறகு யாருக்கோ போன் செய்து ஓகே வா? ரெடியா? என்று கேட்டான்.

சாந்திக்கு கோபமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. இது என்ன குணம்? என்னவென்றே புரிந்து கொள்ள முடியாமல் என்று நினைத்தாள்.

“பதினோறு மணிக்கு ரெடியா இரு. நம்ப கொஞ்சம் வெளில போறோம்” சொன்னவனிடம் சரி என்றாள். வேறு எதுவும் கேட்கவில்லை. கேட்டால் குழப்பத்தின் உச்சியில் இருப்பவன் எதையாவது சொல்லிக் குதறிவிடுவான் என்று தோன்றியது.

“வாங்க சார், வாங்கம்மா, வாங்க ஒக்காருங்க” வரவேற்பு பலமாக இருந்தது. ஏதோ ஒரு சிறிய வீடு போல் இருந்தது. நடுத்தர வயதில் இரண்டு தம்பதிகள் வரவேற்றனர்.

சிறிது நேரத்தில் வாசலில் ஒரு பெஞ்ச் போடப்பட்டது. ஒரு பெரிய அலுமினிய தேக்சாவில் சாம்பார் சாதமும், உருளை சிப்ஸ் பாக்கெட்டும் வந்திறங்கியது. வீட்டு உள்ளிருந்து தண்ணீர் பாட்டிலும், பாக்கு மட்டைத் தட்டுகளும் வெளியில் எடுத்து வந்தனர்.

எங்கிருந்துதான் வந்தார்களோ தெரியாது, வாசல் கேட்டுக்கு வெளியே சில ஏழைகள் ஆண்களும் பெண்களுமாய், பிச்சைக்காரர்கள் என கூடி விட்டனர்.

“வா சாந்தி, நீயும் தட்டுல போட்டுக் குடு” என்ற பரமு தானும் தட்டில் சாதம் போட்டு கொடுக்க ஆரம்பித்தான்.

இருவரும் அங்கேயே சாப்பிட்டனர். வீட்டுக்குத் திரும்பும் வழியில் கொஞ்சம் மனம் நிம்மதியாக இருப்பது போல் காணப்பட்டான்.

“என்ன சாந்தி எதுவுமே கேட்க மாட்டேங்கற? இவனுக்கு என்னாச்சுன்னு நெனைக்கிறயா?”

“இரண்டு நாள் முன்னாடி ஒரு ஏழைப் பிச்சைக்காரன் ட்ராபிக் அதிகமா இருக்கும் போது சிக்னல்ல பிச்சை எடுத்தான். நான் அவனைத் திட்டினேன். பக்கத்துல கார்லேந்து ஒரு அம்மா அவனுக்கு சாப்பாட்டுப் பொட்டலம் கொடுத்தாங்க. அவன் அதை வாங்கிட்டுத் திரும்பும் போது நான் திரும்பவும் திட்டி விரட்டினேன். ஆனால் அவன் கொஞ்சம் தடுமாறிக் கீழ விழுந்திட்டான். சாப்பாடும் கொட்டிப் போச்சு.

விழுந்ததுல அவனுக்கு தலையில நல்ல அடி. உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். அவனுக்கு மூளைச்சாவுன்னு சொல்லிட்டாங்க. பிழைப்பானான்னு தெரில. எனக்கு ரொம்ப மனசு பாரமாயிடுச்சு.

அதான் முடிந்த போது இதுமாதிரி ஏழைங்களுக்கு சாப்பாடு குடுக்கலாம்னு முடிவு பண்ணேன். விஷயத்தை சொன்னதும் டிபார்ட்மென்ட்டிலும் இரண்டு பேர் சேர்ந்து கிட்டாங்க.

நீ என்ன நெனைக்கிற” டிராபிக் போலீஸான பரமன் கேட்டான்.

“நல்ல விஷயங்க”. கண்ணீர் மல்க சொன்னாள் சாந்தி.