தொடர்கள்
தமிழ்
அமிழ்தமிழ்து தமிழமிழ்து 17 : “சீண்டலும் சிண்டும் ” – மோகன் ஜி

20260309213837215.jpeg

ஒரு முறை சிலேடைப் புலவர் காளமேகம் திருவண்ணாமலைக்குச் சென்றிருந்தார்.

அண்ணாமலையார் கோவிலின் உயர் அதிகாரியான சம்பந்தாண்டான் அங்கு மாட வீதியில் வசித்து வந்தார். சம்பந்தாண்டானைப் பற்றி கேள்விப்பட்டிருந்த காளமேகம் அவரை சந்திக்க வேண்டி அவர் இல்லத்திற்குச் சென்றார்.

அந்த சமயம், வீட்டின் முற்றத்தில் சம்பந்தாண்டானின் வழக்கப்படி ஒரு நாவிதர் அவருடைய தலையை மழுங்க சிரைத்துக் கொண்டிருந்தார். கவி காளமேகம் அங்கு வருவதைக் கண்ட ஏனையோர் அவரை வணங்கி, சம்பந்தாண்டானிடம் பெரும் கவி காளமேகம் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

அகந்தைமிக்க சம்பந்தாண்டான் அவர்களிடம், “அந்த ஆள் பெரும் கவிஞனாக இருந்தால், இவ்வூரையும் என்னையும் மொட்டையடிக்கப்படும் என் தலையையும் வைத்து, ‘மண்’என்று தொடங்கி ‘மலுக்கு’ என்று முடியும் வகையில் ஒரு வெண்பாவை பாடச் சொல்லுங்கள் பார்ப்போம்!” என்று எள்ளலாகச் சொன்னார்.

வரகவியான காளமேகம் அந்தக் கணமே பின்வரும் வெண்பாவைப் பாடி சம்மந்தாண்டானுக்கு கர்வ பங்கம் செய்தார். அந்த வெண்பாவை பார்ப்போம் :-

‘மன்னுதிரு வண்ணா மலைச் சம்பந்தாண்டாற்கு

பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன்? - மின்னின்

இளைத்தஇடை மாத ரிவன்குடுமி பற்றி

வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு’

இதற்குப் பொருளையும் பார்க்கலாம்:-

‘உயரிய திருவண்ணாமலையில் வாழும் சம்பந்தாண்டானுக்கு மழுங்க தலையை சிரைப்பது ஏன் தெரியுமா? மின்னலைப் போன்ற சிற்றிடையுடைய மங்கையர் இவன் குடுமியைப் பற்றி வளைத்திழுத்து தலையில் குட்டாமல் இருக்கத்தான்!’ என்பதாகும்.

சுற்றி இருந்தோர் இந்த கவிதையிலிருந்த ஏளனத்தை உணர்ந்து சிரிக்கத் தொடங்கினார்கள். சம்பந்தாண்டானோ வெட்கித் தலை குனிந்தார்.

கவி காளமேகத்திடம் தன் கைவரிசையைக் காட்டலாமோ?!