தொடர்கள்
கதை
கனம் - பா.அய்யாசாமி


20260311073905410.jpeg
"வலங்கைமானில் பிரசித்திப்பெற்ற பாடைக்காவடி திருவிழாவிற்கு போகணும்னு காலையிலேந்து சொல்லிகிட்டு கிடக்கான்,வீட்டிற்கு சீக்கிரமாக வாங்க
என தன் கணவன் சந்திரனை அழைத்தாள் ஈசுவரி.

போகத்தானே போகிறோம், வருகிறேனு சொல்லு என்று போனை வைத்து விட்டார் சந்திரன்.

சுத்துப்பட்டு எல்லா கிராமத்திலிருந்தும் மாட்டு வண்டியும், மோட்டார் சைக்கிளும்
சாரைசாரையா வலங்கைமானை நோக்கி மக்கள் சென்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
இதையெல்லாம் வாசலில் உட்கார்ந்து பார்த்துகிட்டேயிருந்த கிச்சா,ஆறாம் வகுப்பு தேர்வை தற்போது எழுதியுள்ளான்.

அப்பா மீது அவனுக்கு அலாதிப்பிரியம்.
கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார், வண்டியில் முன்புறம் அமர்ந்து,இரு பக்கமமுள்ள பச்சைப் பசேல்னு இருக்கிற வயக்காட்டிற்கு நடுவே கைகளை விரித்தபடி ஹோண்டா வாகனத்தில் போவது அவ்வளவு பிடிக்கும் கிச்சாவிற்கு.

"யம்மா.. அப்பா எப்போ வரும்,என அம்மாவை தொணதொணத்துக்கொண்டிருந்தான்.

ஏய்! கம்னு இரு. எத்தன தடவ சொல்றது, வரும் என்றவள்,பாவம் அது எந்தக் கடையிலே நிக்குதோ?! என்றவள்
பங்குனி வெயில் பல்லைக் காட்டுது.. ஸ்கூல் லீவு விட்டாலும் விட்டது...வெயில் முச்சூடும் உன் தலையிலாதான் இறங்குது என கவலைடைந்தாள் ஈசுவரி.

தனியார் நிதி நிறுவனத்தில் தவணை வசூல் செய்யும் பணி சந்திரனுக்கு சொற்ப வருமானந்தான்.
பொழுது விடிந்தால், பொய் சொல்பவர்கள், ஏமாற்றுபவர்கள், வீட்டில் இருந்துக் கொண்டே இல்லையென்று மறைப்பவர்கள், வீம்பிற்கு வண்டியை எடுத்து தவணைக் கட்ட முடியாமல் விழிப்பவர்கள், இவர்களையே தினசரி பார்த்துப்பார்த்து
மன உளைச்சல் ஏற்பட்டாலும்,பிறந்த ஊர் அருகேயுள்ள சந்திரசேகரபுரம்,
வசிப்பது சொந்த வீடு என்பதால் இதுவே வாழ்க்கைக்குப் போதுமென
ஊத்துக்காட்டிலேயே வசித்து வருகிறார் சந்திரன்.

வீட்டிற்குத் திரும்பியதும் மனைவின் அன்பிலும் குழந்தை கிச்சாவை கட்டி அணைத்துக் கொள்ளும்போதுதான் வெளியில் பல அழுத்தங்களிருந்
தாலும் உண்மையான அன்பைக்கண்டு அரவனைப்பது போலத்தோன்றும் சந்திரனுக்கு.

"தாயே யசோதா உந்தன் ஆயர்குலத்துதித்த மாயன்...." என்ற வேங்கடசுப்பையர் கண்ணனின் குறும்புகளை சொல்லும் பாடல் தோடியும் ஆதிதாளமும் சேர்ந்து ஆலயத்திலிருந்து இசைக்க.. அம்மா நான் கோவிலுக்கு போறேன் என ஓடினான் கிச்சா என்கிற கிருஷ்ணன்.

ஊத்துகாடு காளிங்க நர்த்தனன் அருளால் பிறந்தவன் என்பதால் அவன் பெயரையேச் சூட்டி வளர்த்து வந்தனர் ஈசுவரியும், சந்திரனும்.

தயாரா?! போகலாமா என்றபடி வந்தார் சந்திரன்.

நான் வரக்கூடாதுங்க.. நீங்களும் கிச்சாவும் போய்வாங்க..என்றாள்

என்ன நீதானே ஆசைப்படுவே,மக்கள் கூட்டம்,விழாக்காலக் கடைகள், இப்போ வரலைங்குறே என்றார்

வரக்கூடாதுனு சொல்றேன் புரியலையா ?

முதலியார் கடை புரோட்டாவில் உன் பெயர் எழுதலை போல.. சரி கிச்சாவும் நானும் போகிறோம் என்று கிளம்பினர்.

முதலியார்கடை புரோட்டா இவ்விழாவில் தனி பிரசித்திப்பெற்றது.
எப்போதும் அங்கு கடை கிடையாது. விழா நாட்களான பத்து நாட்கள் மட்டுமே இருக்கும், சிறுவயதிலேருந்தே சாப்பிட்ட பழக்கம் சந்திரனுக்கு. கிச்சாவையும் கூட்டிப்போயி பழகினதாலே அவனும் அப்பாவுடன் செல்ல ஆர்வமாக இருந்தான்.

வலங்கைமான் கடைத்தெரு பகுதி வரை வண்டியில் வந்தவர்களை, மக்களின் நெருக்கடியான நடமாட்டத்தைக் கருதி போக்குவரத்தை மாற்றியிருந்தார்கள்.

காவலர் இவர்களை மறித்து நடந்துப் போகச்சொன்னார்கள்.

கிச்சாவை தலைக்கு மேல் தூக்கி தோளில் அமர்த்திக்கொண்டு நடக்கலானார் சந்திரன்.

விழாக்கூட்டம், மேளச்சந்தங்களும்,
நாலாப்புறமும் கலர் கலரான பலூன்கள், ராட்டினம், ஒலிப்பெருக்கியில் அம்மன் பாடல்கள் என அந்த இடமே விழாக்கோலத்தில் அல்லோகலப்பட்டது.

அனைத்தையும் அப்பாவின் தோளில் அமர்ந்து ரசித்தபடி வந்தான் கிச்சா.

என்னடா கிச்சா !கனமே இல்லை, நீ ஒழுங்காக சாப்பிடறீயா இல்லையா? என மகனிடம் கேட்டு சிரித்தார் சந்திரன்.

அந்தளவிற்கு மன மகிழ்ச்சியில் வலிகூட தெரியாமல் எடை குறைந்துப்போயிருந்தான் கிச்சா.

அப்பா, நம்ம ஊரு கிருஷ்ண சாமி ஏன் பாம்பு மேலே நிற்குது? என காளிங்க கிருஷ்ணர் நினைவுக்கு வந்தவனாய் கிச்சா கேட்டதற்கு,

அது அவரின் விளையாட்டில் ஒன்று, ஆற்றில் கலந்த காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் விஷத்தன்மையை முறித்து மக்களை காப்பாற்றியதால், அந்த ரூபத்தில் வழிபடுகிறோம் என்று விளக்கினார்.

அவர் காலை ஏன் பாம்பு மேலே வைக்கலை?! என கேட்டான் கிச்சா
(காளிங்கன் மேல் தனது கால் படாமல் உள்ள வழிபடும் சிற்பம் இங்கு தனிச்சிறப்பு)

அதற்கும் வலிக்குமில்லே! காளிங்கனைச் சரண்டர் ஆக்குவதுதான் அவரின் நோக்கம், அதனை கொல்வதல்ல என்று விளக்கத்தோடு,

முதலியார் பரோட்டாக் கடை வர கிச்சாவை கழுத்திலிருந்து கீழே இறக்கிவிட்டார் சந்திரன்.

பாடைக்காவடிகள் கோவிலை நோக்கி அலங்கரித்துச் சென்றபடி இருந்தது.

சிகிச்சைப்பெற்று குணமானவர்கள் தங்களது நேர்த்திக் கடனாக பாடையில் படுத்துக்கொள்ள, உறவுகள் சுமந்துச்
சென்று அம்மன் ஆலயத்தில் இறக்கிவிடுவார்கள்.

கூட்டம் குறைந்ததும் சென்று பார்க்கலாம் என்ற சந்திரன் நாம வந்த வேலையைப் பார்ப்போம் என்றபடி கடைக்குள் நுழைந்தனர்.

நல்ல கூட்டம், அடுப்பில் 60 க்கும் மேற்பட்ட பரோட்டாக்கள் உஸ்..உஸ் என்ற சப்தத்துடன் வெந்துக்கொண்டிருந்தன. அதனை விட புரோட்டா மாஸ்டர் வியர்வையில் உடல் வெந்தபடியிருந்தார்.

கல்லாவில் அமர்ந்தபடி சாப்பிட்டுவிட்டு வருவோரிடம், "எத்தனை புரோட்டா" என அவர்களிடமே கேட்டு பணத்தை வாங்கி போட்டுக் கொண்டிருந்தார் முதலாளி.

சாப்பிட மேசைக்கருகே காத்திருக்க வேண்டியதாக இருந்தது இருவருக்கும்.

சால்னா குருமாவின் கொதி வாசனை மேலும் பசியைத் தூண்டியது கிச்சாவிற்கு. அவனைக் கண்டதும் நடுத்தரவயதுக்காரர் ஒருவர் எழுந்து
"புள்ள முதலில் சாப்பிடட்டும், வா மாமா " என கூட இருந்தவரை அழைத்துக்கொண்டு வெளியே சென்று இவர்களிருவருக்கும் அமர இடம் கொடுத்தார்.

சுடச்சுட மொறு மொறுவென இருந்த புரோட்டாவை சுவைத்த சந்திரன், டீ ஒன்றுகேட்டு குடித்துவிட்டு,

நான்கு புரோட்டோ, ஒரு டீ என சொல்லி 50/- ரூபாயை கல்லாவில் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.

பாடைக்காவடி அம்மனைத் தரிசித்து விட்டு ஊருக்கு திரும்புகையில் மீண்டும் தன் தோளில் ஏற்றிய கிச்சா ஏதும் பேசாமல் வரவும், தூக்கம் வருதா கிச்சா என கேட்டதும்,

இல்லை என ஒரே வார்த்தையில் பேசினான்.

ஏன் பேசாமல் வர? ஏதாவது பேசுடா என்றபோது தோளில் சந்திரன் கனமாக உணர்ந்தான்.

கிச்சா தோளில உட்காரமுடியாமல் நெளிந்ததை உணர்ந்தார் சந்திரன்.

என்ன கிச்சா?! இப்படி கனக்குறே? என்று கேட்டு சிரிக்க..

நான் நாலு புரோட்டா சாப்பிட்டேன்,நீங்க ஆறு புரோட்டா சாப்பிட்டீங்க, டீ வேற குடிச்சீங்க.. ஒரு புரோட்டா 10/- ரூபாய்110/- ல்ல நீங்க கொடுத்திருக்கணும் என்று கிச்சா சந்திரனிடம் கேட்டதும்,
கூட்டத்தைப் பயன்படுத்திகிட்டு 50/- கொடுத்துட்டு வந்தீட்டீங்களே இது தப்பில்லையாப்பா?!
என்றபோது மேலும் அவன் தோள்கள் கனத்தன.

கிருஷ்ண பகவான் காளிங்கனை இப்படித்தான் அழுத்திருப்பாரோ?!

வியர்த்துக்கொட்டியது சந்திரனுக்கு.. சே!மகனிடம் இப்படி அசிங்கப்பட்டோமே, யாரும் கவனிக்கலை என்ற நினைப்பில் தப்புசெய்து மகனுக்கு ஒரு தவறான விசயத்தை நாமே கற்பித்து விட்டோமே என வருந்தினான்..

கடையை நோக்கி நடந்த சந்திரன் மன்னிக்கச்சொல்லி தொகையினைக் திரும்பக்கொடுத்ததும்வாங்கி கல்லாவி்ல் சிரித்துக் கொண்டே போட்டுக்கொண்டார் முதலாளி.

மனம் மகிழ்ந்த கிச்சாவை தோளில் ஏற்றிக்கொண்டு ஊர் திரும்பினார் சந்திரன்
வழி நெடுக அவன் கனக்கவேயில்லை.