
இன்னும் ஒரு சில நாட்களில் சித்திரை மாதம் பிறக்க இருக்கிறது. என் நினைவலைகள் என் பள்ளிப் பருவத்தை நோக்கிச் செல்கின்றன. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த நினைவுகள் இப்போதுதான் நடந்தது போல என் கண்முன்னே நிற்கின்றன.
அன்று சித்ரா பௌர்ணமி. அம்மா பிஸ்கட் தயாரித்து கொண்டிருந்தார். மைதா மாவை தண்ணீர் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி போலத் திரட்டி, அதனை சதுரமாக வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்தார். சுண்டல், காஞ்சிபுரம் இட்லி, சட்னி, பருப்பு அடை, எலுமிச்சை சாதம், புளி சாதம் ஆகிய உணவுகளும் தயாராகி இருந்தன. நானும் அக்காவும் சற்று தடிமனான அடையை கேக் போல வெட்டிக் கொண்டிருந்தோம். அத்தை தயாரான உணவுகளை தூக்குகளில் வைத்து மூடி கொண்டிருந்தார்.
அந்த காலத்தில் எங்கள் ஊரான காஞ்சிபுரத்தில், சித்ரா பௌர்ணமி அன்று இரவு பெரும்பாலான மக்கள் பாலாற்றங்கரைக்கு சென்று, குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அன்றைய இரவை கழிப்பார்கள். இரவு ஆற்றின் மணலில் படுத்து தூங்கி, காலையில் எழுந்து வீடு திரும்புவார்கள்.
அன்று நாங்களும் அங்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தோம். சித்ரா பௌர்ணமி அன்று பாலாற்றுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் எங்கள் வீட்டின் வழியாகத்தான் போகும்.
பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் குடும்பத்தினர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அத்தை, அப்பா, அம்மா மற்றும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து சாமான்களை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறினோம். பெரியப்பா தண்ணீர் நிரம்பிய பெரிய குடத்தை மூடி எடுத்து வந்து, பேருந்தில் டிரைவர் இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். குடத்திலிருந்து தண்ணீர் சிந்தாமல் இருக்க அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
பாலாற்றுக்கு செல்லும் பேருந்துகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தன. நாங்கள் பயணம் செய்த பேருந்தின் படிக்கட்டிலும் மக்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். பேருந்து சற்று ஒரு பக்கம் சாய்ந்தபடியே சென்றது. பாலாறு வந்தவுடன், நாங்கள் அனைவரும் சாமான்களுடன் இறங்கினோம்.
மழைக்காலங்களில் நீரால் நிரம்பி ஓடும் பாலாறு, கோடைக்காலங்களில் மணலால் மூடப்பட்டிருக்கும். அனைவரும் மணலில் சற்று தூரம் நடந்தோம். வீட்டிலிருந்து கொண்டு வந்த விரிப்பை விரித்து, அதில் நாங்கள் உணவுகளை எடுத்து வைத்தோம். பெரியவர்கள் பிள்ளைகளுக்கு உணவை பரிமாறினார்கள்.
அனைவரும் சாப்பிட்ட பிறகு ஓடிப்பிடித்து விளையாடினோம். பெரியம்மாவும் சித்தியும்,அத்தையும் எங்களுடன் சேர்ந்து விளையாடினார்கள். எப்போதும் வேலைப்பளுவில் இருக்கும் அவர்கள், இப்படி விளையாடுவதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அம்மா மட்டும் விளையாட வரவில்லை. நாங்கள் அழைத்தாலும் வரவில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லையா, அல்லது ஓடுவதற்கு வெட்கப்பட்டு கொண்டு வரவில்லையா அல்லது களைப்பாக இருந்தாரோ என்று அப்போது யோசித்ததே இல்லை. அம்மா அனைவருக்கும் சாப்பாடு கொடுப்பது, தண்ணீர் எடுத்துக் கொடுப்பது மற்றும் நாங்கள் விளையாடுவதை மகிழ்ச்சியுடன் பார்ப்பதுமாக இருந்தார்.
யோசித்துப் பார்க்கையில் எல்லா வீடுகளிலும் எல்லா அம்மாக்களும் அப்படித்தான். மற்றவர்கள் மகிழ்ச்சியில் தான் அவர்களது மகிழ்ச்சி போலும்.
அப்பா இரண்டு கைகளையும் நீட்ட, நானும் தம்பியும் அதில் பிடித்து தொங்கினோம். அப்பா எங்களை சுற்றினார். பிறகு நானும் அண்ணனும் ஆற்று மணலில் பள்ளம் தோண்டினோம். அப்போது சிறிது ஆழத்திலேயே தண்ணீர் வந்தது. பள்ளத்தில் கால்களை உள்ளே விட்டு, மணலை போட்டு மூடி விளையாடினோம். மணலில் மலை, கோட்டை போன்றவற்றை கட்டினோம். பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
எங்களில் இரண்டு பெரிய பிள்ளைகள் கைகளை கோர்த்து தூக்கிப் பிடித்த வண்ணம் எதிரும் புதிருமாக நின்றனர்.மற்ற அனைவரும் வரிசையாக அவர்களுக்கு நடுவே சென்று, சுற்றி சுற்றி வந்தோம். எல்லோரும் சேர்ந்து, ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூ பூத்தது, இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூ பூத்தது…என பாட்டு பாடி விளையாடினோம். அங்கே எங்கள் தங்கைதான் மிகவும் சிறிய பெண். பாட்டின் இறுதியில் அவள்தான் அகப்பட்டாள். நாங்கள் அனைவரும் சேர்ந்து விளையாடி, பாடி மகிழ்ந்தோம். பின்னர் பெரியவர்களின் மடியில் படுத்து ஓய்வு எடுத்தோம். பிறகு நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு திரும்பினோம்.
இப்படியாக சில ஆண்டுகள் தொடர்ந்து சித்ரா பௌர்ணமியை மகிழ்ச்சியாக கொண்டாடினோம். அந்த இரவில் நிலவொளியில் சாப்பிட்ட நிலாச்சோறும், குடும்பத்துடன் கழித்த அந்த தருணங்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. பின்னர் காலப்போக்கில் பாலாற்றங்கரையில் கூட்ட நெரிசலும் சிரமங்களும் அதிகமானதால், அங்கு செல்வது குறைந்தது. அதற்குப்பிறகு வந்த காலங்களில், சித்ரா பௌர்ணமி அன்று பாலாற்றுக்கு செல்லும் பேருந்துகளில் சந்தோஷமாக கூச்சலிட்டுக் கொண்டு போகும் மக்கள் கூட்டத்தை, நான் ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.
சிறுவயதில் இன்னொரு நிலாச்சோறு அனுபவமும் எனக்கு நினைவில் நிற்கிறது. நானும் என் உடன் பிறந்தவர்களும்,அத்தை வீட்டிற்கு கோடை விடுமுறையில் ஒரு சித்ரா பௌர்ணமி அன்று சென்றிருந்தோம். அருகில் இருந்த பெரியப்பாவின் பிள்ளைகளும் அங்கு வந்தார்கள். அன்று சாயந்திரம் அத்தை, அவர்கள் வீட்டு திறந்தவெளி மாடியை தண்ணீர் ஊற்றி கழுவி தள்ளினார். சற்று இருட்டிய பிறகு, அனைவரும் மாடிக்குச் சென்றோம்.
அத்தை கிண்ணத்தில் சாதத்துடன் சாம்பாரை ஊற்றி, காய்கறிகளைபோட்டு,நன்கு பிசைந்து எடுத்துக்கொண்டு மாடிக்கு வந்தார். நானும் என் உடன் பிறந்தவர்களும், என் பெரியப்பாவின் பிள்ளைகளும் அவர்களை சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டோம். அத்தை கிண்ணத்தில் இருந்த உணவை, உருண்டை உருண்டையாக உருட்டி ஒரு பெரிய தட்டில் வைத்துக் கொண்டார். நாங்கள் எல்லோரும் எங்களுடைய வலது கையை நீட்டினோம். அத்தை ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் ஒரு உருண்டையை அடுத்தடுத்து வைத்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொருவரும் ஒரு உருண்டையை சாப்பிட்டு முடிக்கும் போது, சரியாக அடுத்த முறை வரும். உணவு சீராக சாப்பிடாத பிள்ளைகள் கூட, இப்படி கொடுக்கும்போது, எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியாமலேயே நன்றாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
அன்று இரவு பாய், தலையணை, விரிப்பு ஆகியவற்றை நாங்கள் அனைவரும் எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தோம். பாயை விரித்து போட்டு வரிசையாக அனைவரும் படுத்தோம். எங்கள் வீட்டில் திறந்த வெளி மாடி கிடையாது. அதனால் எனக்கு இந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது.
அன்று ஒன்றுவிட்ட அத்தையின் மகளான சித்ராக்காவும் வந்திருந்தார்.என் பக்கத்தில் படுத்துக்கொண்டார். மந்திரவாதி, சித்திரக்குள்ளன், சூனியக்கார கிழவி ஆகிய பாத்திரங்கள் உடைய மாயாஜால கதைகள் நிறைய சொல்லிக்கொண்டே இருந்தார். தூக்கம் வந்து கண்களை தழுவ, அவற்றை மூடி மூடி திறந்தேன்.கண்களை திறந்து பார்த்தால், முகத்திற்கு மேலாக முழுநிலவு ஒளியில், கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் தெரியும். அந்த காட்சி ஏதோ ஒரு மாய உலகத்தில் இருப்பது போல தோன்றியது. அந்த அமைதியான இரவும், மென்மையான காற்றும், குடும்பத்தின் அருகாமையும் என் மனதில் என்றும் நிலைத்திருக்கின்றன.
நானும் என் தங்கையும் பல ஆண்டுகள் கழித்து, ஒரு சித்ரா பௌர்ணமி அன்று அந்த நினைவுகளை மீண்டும் நினைத்து, அதனை புதுப்பிக்க நினைத்தோம். தங்கை வீட்டில் உப்பு உருண்டை செய்து எடுத்துக்கொண்டு, அவள் வீட்டு மாடியில் நாங்களும் என் உடன் பிறந்தவர்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம், பலகை விளையாட்டுகள் (board games) விளையாடினோம்.நீண்ட நாள் கழித்து,ஒரு நல்ல அனுபவமாக இருந்தது .
முன்பு நிலாச்சோறு என்றால், அமைதியான இரவின் நிலவு வெளிச்சத்தில் வீட்டிற்கு வெளியே அல்லது திறந்தவெளி மாடியில் கூட்டமாக அமர்ந்து பேசி களிப்போம்; உணவு உண்ணுவோம். இன்றும் அதே நிலா மேலே இருக்கிறது, ஆனால் தற்போது அமைதியான தருணம் சிறிது கிடைத்தாலும், அனைவரும் தங்கள் கைபேசியில் மூழ்கி விடுகிறார்கள். அன்றைய சித்ரா பௌர்ணமி போல மனதை நிறைக்கும் தருணங்கள் இனி வருமா?

Leave a comment
Upload