தொடர்கள்
ஆன்மீகம்
பராபவ ஆண்டே வருக..! பரவசம் அள்ளி தருக..!! - ஆரூர் சுந்தரசேகர்.

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

விகடகவி வாசகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு (பராபவ) நல்வாழ்த்துக்கள்.
பராபவ வருடம் (2026-2027) தமிழ் பஞ்சாங்கத்தின் 60 ஆண்டு சுழற்சியில் 40-வது ஆண்டு, பராபவ தமிழ்ப் புத்தாண்டு, ஏப்ரல் 14, 2026 (சித்திரை 1) செவ்வாய்க்கிழமை காலை 8.26 முதல் 8.40 மணிக்குள் (பஞ்சாங்க வேறுபாடுகளின்படி) மேஷ ராசியில் சூரியன் பிரவேசிப்பதன் மூலம் பிறக்கிறது. மேலும் செவ்வாய்க் கிழமையில் பிறப்பதால், இது ஒரு முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகிறது.

சித்தர்களின் சித்திரை:
தமிழ் மரபில், சித்திரையை ‘முதல் மாதம்’ என்றும், பங்குனியைக் ‘கடை மாதம்’ என்றும் சித்தர்களின் ஏட்டுச் சுவடிகளில் எழுதியிருக்கிறார்கள். அதேபோல சித்திரையில் சூரியன் சஞ்சரிக்கும் மேஷ ராசியைத் ‘தலை’ என்றும், ‘தலை ராசி’ என்று குறிப்புகளும் உள்ளன.
இடைக்கட்டு சித்தர் சித்திரை மாதம் தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே மாத பலன்களையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றையே நாம் இன்று வரை பின் பற்றி வருகிறோம்.
சித்தர்களின் கணிப்புப்படி, இந்த பராபவ ஆண்டில் கால்நடை வளம், பால் வளம் பெருகும், ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் வளர்ச்சி, சில பொருளாதார மாற்றங்களும் இருக்கும். இந்த ஆண்டு தீமைகள் குறைந்து, நன்மைகள் பெருகும் காலமாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் செழிப்புடன் வாழ்வார்கள். ஆண்டின் பிற்பாதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

சங்க காலத்தில் சித்திரை:
சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அகத்தியரின் பன்னீராயிரம், மற்றும் புட்ப விதி முதலான நூல்கள் சித்திரையை முதல் மாதம் என்று சொல்கின்றன. சங்க இலக்கியமான நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடையில் சூரியன் மேஷம் (சித்திரையில்) தொடங்கி அடுத்தடுத்த 11 ராசிகளுக்கும் பயணப்படுவதாக எழுதியுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டு:
தமிழர்கள் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் பண்டிகை. இந்த புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

தமிழ்ப் புத்தாண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் கணக்கிடப்பட்டது. அதாவது பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தின் கால அளவு. சூரியன், மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது ஆண்டு தொடங்கி மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு ஒரே சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள் மற்றும் நேரம் கணிக்கப்படுகிறது.

தமிழ்ப் புத்தாண்டும்… சித்திரை முதல் நாளும்…

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

சித்திரை மாதம் பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு பூஜை அறையைத் தூய்மை செய்து கோலமிட்டு அதன் மேல் ஒரு மனையை வைத்து அதற்கும் அழகிய கோலமிட்டு அதில் ஒரு நிலைக் கண்ணாடியை வைத்து அதற்கு முன்பாக தட்டில் பணம், காசுகள், நகைகள், அரிசி, பருப்பு போன்ற தானியங்களும் மற்றும் பலவகையான பழங்கள், காய்கறிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து காலையில் தூங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் கண் விழிப்பார்கள் இது காலம்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டு முழுவதும் செல்வம், மற்றும் மகிழ்ச்சி சேரும் என்றும் நம்பப்படுகிறது.
சித்திரை புதுவருடமன்று புதுப் பஞ்சாங்கம் வாங்கி அதற்குச் சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்துப் பூஜிக்க வேண்டும். பின்னர் புது வருடப் பஞ்சாங்கத்தை வீட்டில் உள்ள பெரியவர்கள் வாயால் பஞ்சாங்கப் பலனைக் கேட்பதும், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாக உள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.

சித்திரை புத்தாண்டு விருந்து:

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தின் மிக முக்கிய அம்சமான உணவு முறை, நம் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது.
சித்திரை பிறப்பன்று வீடுகளில் மதிய விருந்தில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய் பச்சடி, வடை பருப்பு, பாயசம் போன்றவை கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.
கசப்பும் இனிப்பும்: வேப்பம்பூ பச்சடியின் கசப்பு துன்பத்தையும், பாயசம் மற்றும் மாங்காய் பச்சடியின் இனிப்பு இன்பத்தையும் குறிக்கிறது.
தத்துவம்: வாழ்க்கையில் இன்பம் மற்றும் துன்பம் (6 சுவைகளும்) கலந்து வருவதை ஏற்றுக்கொண்டு, சமநிலையுடன் வாழ வேண்டும் என்பதை இந்த அறுசுவை உணவு உணர்த்துகிறது.
வடை பருப்பு: சுப காரியங்களில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த உணவும் விருந்தில் இடம்பெறும்.
இந்த அறுசுவை உணவை உண்பதன் மூலம், வரவிருக்கும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் சமநிலையும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.

தமிழ்ப் புத்தாண்டு ஒரு மங்கலகரமான நாள்:

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!

தமிழ்ப் புத்தாண்டு என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, அது ஒரு புதிய தொடக்கத்திற்கான மங்கல நாளாகும். மங்கலத்தின் பிறப்பாகக் கருதப்படும் தமிழ்ப் புத்தாண்டில் உப்பு, மஞ்சள், அரிசி, கற்கண்டு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைப்பது மகாலட்சுமியின் அனுகூலத்திற்கு வழிவகை செய்யும்.
தமிழ்ப் புத்தாண்டு அன்று சில கிராமங்களில் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில், கோயில்களில் சிறப்புப் பூஜை நடைபெற்று மக்கள் பொங்கல் வைத்தும் வழிபடுவார்கள். பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, கோதுமை பொருட்கள் கொடுப்பது நல்லது. இந்த நாளில் பிறருக்கு தானம் செய்வதாலும் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்குதல் கூடுதல் சிறப்பு.

இந்த புது வருடத்தில் (பராபவ) இறை வழிபாடு, ஆசி பெறுதல், தான தர்மம் போன்றவற்றைக் கடைப்பிடித்து சித்திரை மாதத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்று, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வோம்..!!

Welcome to the year of Parabhava..! Give me happiness..!!