தொடர்கள்
ஆன்மீகம்
முகிழும் நாமங்கள் முன்னூறு  ஸ்ரீலலிதா த்ரிசதீ – அழகியின் அறிமுகம் ஜி ஏ பிரபா

20260311084536626.jpeg

​அம்பிகையின் நாமங்களில் மிகவும் உயர்வானது லலிதா சஹஸ்ரநாமம். சஹஸ்ரநாமங்களில் மிகவும் முதன்மையானதும் கூட. பதினெட்டு புராணங்களை எழுதியும் வியாசர் திருப்தி அடையாமல் இருந்தபோது ஸ்ரீலலிதையின் புகழைப் பாடுங்கள் என்று நாரதர் உபதேசிக்க, பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானத்தில் உள்ளது அம்பிகையின் ஆயிரம் நாமங்கள்.

​திருமீயச்சூரில் ஸ்ரீஹயக்கிரீவரால் அகத்தியருக்கு இந்த நாமங்கள் உபதேசிக்கப்படுகிறது. அப்போது அவர் “ரகசியங்களுள் மிக ரகசியமானது இந்த நாமங்கள். இதைப் போன்ற துதி வேறு எதுவுமில்லை. இதைப் படித்தால் அனைத்துக் கடவுள்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்” என்கிறார்.

​பூர்வ புண்ணியத்தால் மட்டுமே இதைச் ஜெபிக்க முடியும். அம்பிகையின் அருளன்றி யாராலும் இதைச் ஜெபிக்க முடியாது என்று பலஸ்ருதியில் ஹயக்கிரீவர் கூறுகிறார். ஆனால் எல்லாவற்றையும் கேட்ட பின்னும் அகத்தியருக்கு திருப்தி ஏற்படவில்லை.

​“பகவானே! கேட்க வேண்டியது அனைத்தையும் உம்மிடம் கேட்டு விட்டேன். இனி எதுவும் இல்லை என்று நினைத்தாலும், ஏனோ என் மனதில் ஒரு திருப்தி இல்லை. இதற்குக் காரணம் என்ன? இன்னும் ஏதேனும் கேட்க வேண்டியது உள்ளதோ?” என்று வினவுகிறார்.

​ஹயக்கிரீவரின் காலைப் பிடித்துக் கொண்டு, “அப்படி ஏதானும் இருந்தால் அதை எனக்கு உபதேசிக்க வேண்டும்” என்கிறார். ஹயக்கிரீவரும் ஆழ்ந்து சிந்திக்கிறார். ஆனால் அம்பிகை தனக்கு இட்டிருந்த கட்டளையை மனதிற் கொண்டு அமைதியாக இருக்கிறார்.

​அகத்தியர் பற்றிய காலை விடாமல் இருக்க, அம்பிகை, ஈசனுடன் அங்கு தோன்றி ரகசியமாக ஹயக்கிரீவரிடம் கட்டளை இடுகிறாள். “எங்கள் இருவராலும் கூறப்பட்ட முன்னூறு நாமங்களை நீ அகத்தியருக்கு உபதேசிக்கலாம். அவர் அதற்குத் தகுதியுடைவர்” என்கிறாள்.

​இந்த ஸ்துதி ஸர்வ பூர்த்திகரீ எனப்படுகிறது. இதை ஜபம் செய்வதால் சகல குறைகளும் நீங்கும் என்று கூறுகிறாள் அம்பிகை. அகத்தியரும், அவர் மனைவி லோபமுத்திரையும் அம்பிகையை பக்தியுடன் உபாசித்தவர்கள். எனவே அவருக்கு லலிதா த்ரிசதீ உபதேசிக்கலாம் என்று அம்பிகை கூறுகிறாள்.

​அதன் பின் ஹயக்கிரீவர், தன் பாதத்தில் விழுந்திருந்த அகத்தியரைத் தூக்கி தன் அருகில் அமர்த்திக் கொண்டு “நீர் மிகவும் உயர்ந்தவர். அம்பிகையே நேரில் தோன்றி இதை உமக்கு உபதேசிக்கக் கட்டளை இட்டதால், மூவுலகிலும் உன்னை விடச் சிறந்த லலிதா பக்தர் வேறு யாரும் இல்லை” என்று புகழ்கிறார்.

​“மும்மூர்த்திகளும் யாருடைய தரிசனத்திற்காகப் பாடுபடுகிறார்களோ, அந்த அம்பிகையின் தரிசனம் உன்னால் எனக்குக் கிடைத்திருக்கிறது. இந்த லலிதா த்ரிசதீ,நினைத்த மாத்திரத்தில் மனதில் பூரண திருப்தியைத் தரக் கூடியது. இப்படிப்பட்ட சர்வ பூர்த்திகரா ஸ்தோத்திரத்தை உனக்குக் கூறுகிறேன்” என்று இந்தச் ஸ்துதியை அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

​மிக முக்கியமான முன்னூறு நாமங்கள் கொண்ட இந்தச் ஸ்துதி, மிக ரகசியமானது. லலிதாதேவியை உபாசிக்க இது மிகவும் அவசியம் என்கிறார். ஸ்ரீமத் பஞ்சதாசாக்ஷரியிலுள்ள அக்ஷரங்களின் வரிசையில் “க” வில் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் இருபது நாமங்கள் என்று மொத்தம் முன்னூறு நாமங்கள்.

​மேலும் இது வெறும் பெயர் வடிவம் என்ற உணர்வு கூடாது. இந்த நாமங்கள் மந்திர வடிவமானது. எனவே எப்போதும் ஒருமுகப்பட்ட உணர்வுடன் கேட்கப்பட வேண்டும். இதை பரமேஸ்வரனே சொல்லியதாகக் கருதப்படுகிறது.

​ஒப்புமை இல்லாதவள் ஸ்ரீலலிதா. அதிமதுர சாபஹஸ்தா என்கிறது தியானம்.

​“அதிமதுர சாபஹஸ்தா–அபரிமிதாமோத –பாண-சௌபாக்யாம்I

​அருணா-மதிசய கருணா-மபிநவ குலசுந்தரீம் வந்தேII” என்று போற்றுகிறது தியான ஸ்லோகம்.

​தித்திப்பு நிறைந்த கரும்பு வில்லைக் கையில் ஏந்தியிருக்கிறாள் அம்பிகை. அளவு கடந்த ஆனந்த சௌபாக்கியமான அம்பையும், உதயகால சூரியனைப் போன்று சிவந்த திருமேனியுடையவளாயும் இருக்கின்றாள். அதிசயமான அளவற்ற கருணை உடையவள்.மூலாதாரம் முதல், சகஸ்ராராம்வரை உள்ள அனைத்து சக்கரங்களிலும், புதிது, புதிதான அழகுடன், விளங்குபவள். அப்படிப் பட்ட பரம தேவதையை வணங்குவோம் என்று தொடங்குகிறது தியான ஸ்லோகம்.

​இதில் சிவா அக்ஷரங்களில் தொடங்கும் நாமங்கள் தேவியாலும், சக்தி அக்ஷரங்களில் தொடங்கும் நாமங்கள் ஈஸ்வரனாலும் அருளப்பட்டவை. இரண்டும் சேர்ந்த நாமங்கள் இருவராலும் சேர்ந்து அருளப்பட்டவை. வேறு எந்தச் ஸ்தோத்திரமும் இந்த அளவுக்குச் சிறப்பாகவோ, இதற்குச் சமமாகவோ இல்லை.

​அம்பிகைக்கு மகிழ்ச்சி அளிப்பது. மூவுலகங்களிலும் சிறப்பான, இதற்குச் சமமான ஸ்தோத்திரம் வேறு எதுவும் இல்லை என்று ஹயக்ரீவர் கூறுகிறார். இதில் மகிழ்ச்சி அடைந்த அகத்தியர், மீண்டும் ஹயக்கிரீவரிடம் இதில் சிவ அக்ஷரங்கள் யாவை? சக்தி அக்ஷரங்கள் யாவை என்று கேட்கிறார்.

​ மூன்று ககாரங்களும், இரண்டு ஹகாரங்களும் சிவ அக்ஷரங்கள். ஹ்ரீங்காரங்கள் உபயாத்மகமானவை. மற்றவை சக்தி அக்ஷரங்கள் என்று கூறும் ஹயக்கிரீவர், சக்ர வடிவங்களைப் பற்றியும் விளக்குகிறார்.

​இதை அறிந்து செய்யப்படும் ஸ்ரீவித்தையே பலனளிக்கக் கூடியது. இதை ஒருமுறை ஒதினாலேயே வேறெந்த உதவியும் இன்றி சித்தத்தில் பரிபூரண திருப்தி ஏற்படும். தந்திரங்கள், மந்திரங்கள் மற்ற பிரயோகங்களில் என்னென்ன பலன் உண்டோ அவை அனைத்தும் இந்தச் ஸ்துதியைப் படிப்பதனால் உண்டாகும்.

​இதில் மகிழும் ஸ்ரீலலிதாம்பிகை தன் பக்தனுக்கு இஷ்டமான அனைத்தையும் தந்து, தானே கவசமாகவும் நின்றுக் காப்பாள். பக்தி இல்லாதவனும், நம்பிக்கை இல்லாதவனும் இந்தச் ஸ்துதியைப் படித்தால் அவனுக்கும் அருள் புரியும் கருணாசாகரம் ஸ்ரீலலிதை.

​அவளை அம்மா என்று சரணடைந்தால் அணைத்துக் காக்கும் அன்னை அல்லவா அவள்? என்னை வணங்க பக்தி மட்டுமே போதும் என்றுதானே கூறுகிறாள். அவளை பக்தியுடன் நினைத்தால், அவளே நம்பிக்கை தந்து நம்மைக் காப்பாள்.

​ வெள்ளிக்கிழமைகள் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் இதைப் பாராயணம் செய்யலாம். நமக்கு எதை, எப்போது தர வேண்டும் என்று அம்பிகை அறிந்து அதைத் தருவாள்.

​அவளின் பிரபாவத்தைக் கூறும் லலிதா த்ரிசதீ நாமத்திற்கான விளக்கங்களை எனக்குத் தெரிந்த முறையில் விளக்குவதற்கு, அம்பிகையின் துணையுடன், அவள், அருளால் முனைந்திருக்கிறேன்.

​அவள் அருளால் அனைவரும் நலமுடன், வளமுடன் வாழ வேண்டி, முதல் ஸ்தோத்திரத்தை ஆரம்பிக்கிறேன்.

இனி தொடர்ந்து வரும்.......