
வெயில் ஜன்னல் திரையைத் தாண்டி கார்த்திக்கின் கால்களைத் தொட்டபோது
அவன் கண்விழித்தான். சனிக்கிழமை. அவசரம் இல்லா காலைப் பொழுது.
ரம்யா போர்க்காலம் போல் இயங்கிக்கொண்டிருந்தாள்.
"எழுந்தாச்சா? ஏகப்பட்ட வேலை இருக்கு" நீண்ட பட்டியலை நீட்டினாள்.
"அந்த பேங்க் லாக்கர் கீ-யைத் தேடி எடுக்கணும்."
" ஸ்கூல் யூனிஃபார்ம் தையல் பிரியப்போகுது, அதை ரீ ஸ்டிச் பண்ண கொடுத்துட்டு வரணும்."
"மெயின் டோர் லாக் சரியா மாட்டல, கார்பெண்டரைக் கூப்பிடணும்."
" இன்சூரன்ஸ் பிரீமியத்த ஆன்லைன்ல கட்டிருங்க. இன்னிக்குத்தான் கடைசி நாள்."
"சரிம்மா... எல்லாத்தையும் முடிச்சிடலாம்" கார்த்திக் லேப்டாப்பைத் திறந்து ஒரு கையில் காபியுடன் அமர்ந்தான்.
ஒரு சினிமா பிரபலம் போட்டிருந்த பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருந்தது.
அந்த விவாதத்தில் ஒருவன் மட்டும் மிகக் காரசாரமாகப் பதில் சொல்லியிருந்தான். "யார் இவன்?" என்கிற தேடல் கார்த்திக்கை அந்த நபரின் புரொஃபைலுக்கு இட்டுச் சென்றது.
அவனது Facebook ID இருந்தது. சட்டென ஒரு தாவல். பேஸ்புக்கில் அவன் ஒரு 'வெபினார்' பற்றிப் பதிவிட்டிருந்தான்.
அந்தப் பதிவின் கீழே இருந்த லிங்க், கார்த்திக்கை YouTube-க்கு இழுத்தது.
யூடியூப்பில் அந்த வீடியோ ஓடிக்கொண்டிருக்கும்போதே, பக்கத்தில் 'Suggested' பகுதியில் ஒரு புதிய கார் ரிவியூ மின்னியது. அதைத் தட்டியவனுக்கு, அந்தக் காரைப் பற்றிய தகவல்கள் Instagram பக்கத்தில் இன்னும் விரிவாக இருக்குமெனத் தோன்றியது.
ரீல்ஸ்களுக்குள் நுழைந்தான். ஒரு ரீல் முடிந்து அடுத்தடுத்து என விரல்கள் தானாகத் தேயத் தொடங்கின.
"கார்த்திக்! சாப்பாடு ஆறிப்போகுது”,கிச்சனிலிருந்து
ரம்யாவின் குரல் அதட்டலாய்க் கேட்டது.
டைனிங் டேபிளில் அமர்ந்த கார்த்திக்கின் ஒரு கை மொபைலை விடவில்லை. தயிர் சாதம் பிசையும் போது இடது கை கட்டை விரல் ரீல்ஸைத் தள்ளிக் கொண்டிருந்தது.
"இன்னைக்கு அந்த இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணும், அந்த லாக்கர் கீ-யை தேடி எடுக்கணும்... மறந்திடாதீங்க" மறுபடியும் ரம்யாவின் ரிமைண்டர்.
போனில் ஒரு நாய் குட்டி வித்தை காட்டுவதைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே கார்த்திக்,
"ம்ம்... பாத்துக்கலாம்" என்றான்.
சாப்பிட்ட பின் மீண்டும் சோபாவில் சாய்ந்தான். இப்போது அவனுக்கு ஒரு சந்தேகம்.
"சிக்ஸ் பேக் வைக்க என்ன டயட் வேணும்?" என ChatGPT-யிடம் அரட்டை ஆரம்பமானது. அது கொடுத்த பட்டியலைப் பார்த்துவிட்டு, அதைச் செயல்படுத்தும் முறையைத் தேட மீண்டும் யூடியூப். அங்கே இருந்து ஏதோ ஒரு பிட் நோட்டீஸில் பார்த்த Netflix சீரிஸின் டிரெய்லருக்குத் தாவினான். ஒரு எபிசோட்... இரண்டு எபிசோட்...
"சூடா டீயும் பிஸ்கட்டும் வச்சிருக்கேன், சாப்பிட்டுட்டு கிளம்புங்க. பசங்களை பார்க்குக்கு கூட்டிட்டுப் போகணும்!" ரம்யா டீ கப்பை மேஜை மீது வைத்தாள். ஜன்னலுக்கு வெளியே சூரியன் மெல்லத் தணிந்து, ஆரஞ்சு நிறம் படரத் தொடங்கியிருந்தது.
கார்த்திக் டீயைக் குடித்துக்கொண்டே Amazon Prime-ல் அடுத்த வாரம் வரப்போகும் படத்தைப் பார்த்தான்.
"கார்த்திக், கிளம்பலாமா? இருட்டப்போகுது!" ரம்யா குழந்தைகளுடன் தயாராக வந்து நின்றாள்.
"இருமா... இந்த ஒரு சீன் மட்டும்... இதோ முடிஞ்சுடும்" என்றான் கார்த்திக்,
"நீங்க வரவே வேண்டாம்!" - ரம்யா கதவைச் சாத்திக்கொண்டு குழந்தைகளுடன் கிளம்பினாள். வீடு சட்டென நிசப்தமானது.
T20 மேட்சின் ஆரவாரம். டிவியில் மேட்ச், மடியில் லேப்டாப், கையில் WhatsApp. வாட்ஸ்அப் குரூப்பில் நண்பர்களுடன் 'வைடு' பாலுக்குச் சண்டை என மாலை நேரம் காணாமல் போனது.
" தோசை வச்சிருக்கேன், வந்து சாப்பிடுங்க!" ரம்யா திரும்பி வந்து குரல் கொடுத்தபோது இரவு நன்றாகக் கவிழ்ந்திருந்தது.
சாப்பிடும்போதும் அதே கதைதான். JioCinema-வில் ஹைலைட்ஸ் பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். ரம்யா சொன்ன இன்சூரன்ஸ் வேலை, லாக்கர் சாவி எதுவும் அவன் நினைவில் இல்லை.
இரவு மெல்ல ஆழமானது. வீட்டின் விளக்குகள் அணைந்தன. ரம்யாவும் குழந்தைகளும் தூங்கிவிட்டனர்.
தெருவில் நாய்கள் எழுப்பிய சத்தம்.
கார்த்திக்கின் முகம் மட்டும் லேப்டாப்பின் நீல வெளிச்சத்தில் பேய்த்தனமாக மின்னிக்கொண்டிருந்தது.
கடைசியாக ஒருமுறை எல்லா சமூக வலைதளங்களையும் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, எரிச்சலோடு லேப்டாப்பை மூடினான். கண்கள் அனலாய்க் கொதித்தன. கை விரல்களில் ஒரு வலி.
கார்த்திக் படுக்கையில் அமர்ந்தான். அவனது போன் மட்டும் ஒருமுறை அதிர்ந்தது. யாரோ ஒரு தெரியாத நபர், அவன் காலையில் போட்ட ட்வீட்டுக்கு மறுப்புச் சொன்னார்.
நாள் முழுவதும் அந்தச் சின்னத் திரைக்குள் வாழ்ந்துவிட்டு, இப்போது நிஜ இருட்டில் இருப்பது, அவனுக்குள் ஒரு வெறுமையை உண்டாக்கியது.
மெதுவாய்ப் போனைத் தள்ளி வைத்து விட்டுப் படுத்தான். தூக்கம் வரவில்லை. மூடிய கண்களுக்குள் அந்த ரீல்ஸ்கள் மட்டும் ஏனோ இன்னும் ஓடிக்கொண்டே இருந்தன.

Leave a comment
Upload