தொடர்கள்
அனுபவம்
 பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு -இந்துமதி கணேஷ்

2026012720421555.jpg

சூழலியலாளர் கோவை சதாசிவத்துடன் ஒரு நேர்காணல்

ஆசிரியர் : ஏ. சண்முகானந்தம்

நம்மைச் சுற்றி நிகழும் காலநிலை மாற்றத்தைக் குறித்து எந்தவித பிரஞ்சையும் இல்லாத மனிதர்களுடன் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நவீனமயமாக்கலும் இயந்திர வாழ்வும் நமக்கு என்ன உணர்த்துகிறது என்பதை மிக காத்திரமாக பேசுகிறார் சூழலியலாளர், எழுத்தாளர் திரு கோவை சதாசிவம் அவர்கள். உயிர் இதழாசிரியர் மற்றும் கானுயிர் ஒளிப்படக் கலைஞர் சண்முகானந்தம், கோவை சதாசிவம் நேர்காணல் செய்ததை இந்த நூலில் தொகுத்தளித்திருக்கிறார்.

தற்கால சூழலியலுக்கு பெரிய நெருக்கடியாக இருக்கும் விஷயங்களை குறித்த கேள்விகளுக்கு நேர்மையாகவும் தீர்க்கமாகவும் பதில் சொல்கிறார் கோவை சதாசிவம் .

மாணவர்கள் தங்களின் காடறிதல் பயணங்கள் மூலமாக என்னக் கற்றுக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு அறிவியலாளர் கான்ராட் லாரன்ஸை மேற்கோள் காட்டுகிறார்.

20260127204551394.jpg

"இயற்கையைப் பராமரிக்கும் செயலை மனிதர்களுக்கு கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே புரிய வைப்பது தான்" என்ற கூற்றில் இருந்து தொடங்கி மாணவர்களுக்கு இயற்கையை அறிமுகம் செய்து வைக்க வேண்டும், பறவைகளை, விலங்குகளை நேசிக்க, ஆற்று நீரை அள்ளிப்பருக, நல்லக் காற்றை சுவாசித்து மகிழ காடு வேண்டும்.

சோறும், நீரும், வாழ்வும் தரும் மேற்கு மழைத் தொடரை காப்பாற்ற வேண்டிய கரிசனத்தை குழந்தைகளின் மனதில் விதைக்க காட்டின் சூழல் அவசியம் என்ற பதில் தற்காலச் சூழலில் காடதறிலின் அவசியத்தை எடுத்துக் கூறுகிறது.

கோயில் காடுகள் என்றால் என்ன, அவற்றின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்விக்கு, பழங்குடி மக்களின் மரவழிப்பாட்டின் மிச்ச சொச்சங்களே கோவில் காடுகள் என்கிறார்.

பசுங்குடை விரிக்கும் ஒரு பெரிய மரநிழலின் கீழ் மிகச் சிறிய அளவில் கற்கள், வேல்கள், குதிரைகள், சுடுமண் சிலைகளை கொண்டவை தான் அவை.

பெரும்பாலும் வேனில் காலங்களில் தான் வழிபாடுகள் நடக்கும். இக்காடுகளில் தான் ஆதித்தாவரங்களை காண முடியும், அங்கு உதிர்ந்த இலைகளை பெருக்குவது, சுள்ளிகளைப் பொறுக்கி பொங்கல் வைப்பது வைப்பது, அங்குள்ள உயிரினங்களை துன்புறுத்துவது, பாம்புகளை கொல்வது எல்லாம் குலசாமிக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி வைத்திருந்தார்கள் நம் முன்னோர்.

நாம் தற்போதுள்ள கோவில் காடுகளை அழித்துவிட்டு குலசாமிகளுக்கு கான்கீரிட் கட்டடங்களைக் காட்டுகிறோம், இதனால் அங்குள்ள பல்லுயிர்ச் சூழல் சிதைந்து போகிறது, இருபது ஹெக்டேர்இருந்த காடு வெறும் ஒன்னரை ஹெக்டேராக சுருங்கி போனதை நான் பார்த்துள்ளேன் என்கிறார், கண் முன்னே அழிவை பார்ப்பது கொடுமையல்லவா !

2026012717380755.jpg

கோவில் காடுகளைப் பற்றி பேசும் போது இன்றைக்கு குறைந்த பரப்பில் அடர்வனம் உருவாக்கும் பிரபலமான ஜப்பானிய முறையான மியாவாக்கி முறையென்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் உருவாக்கிய கோவில் காடுகள் தான் என்ற உண்மை நமக்கு மிகவும் வியப்பான ஒன்று.

காலநிலை மாற்றம் அடுத்த தலைமுறையான் குழந்தைகளை எப்படி பாதிக்கிறது, கிரேட்டா துன்பர்க்கின் செயல்பாடுகளை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு குழந்தைகளின் போராட்டத்தை பெரியவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்பதே இங் பெரிய குறை என்கிறார்,

எவ்வ்ளவு போராடினாலும் பெரியவர்கள் கால நிலை மாற்றத்தினால் பாதிப்பு ஏற்படாம இருக்க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,

இந்தியாவில் கூட மணிப்பூரைச் சேர்ந்த மாணவி லிசி பிரியா கங்குஜம் மோடியிடம் தன்னுடைய கசப்பை பதிவு செய்திருக்கிறார் என்ற செய்தி உண்மையிலேயே நமக்கு அடுத்த தலைமுறைக் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.

அரசியல்வாதிகள் சூழலியலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதில்லையே ஏன் என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் நிகழப்போகும் சூழலியல் பாதிப்புகள் குறித்து பலருக்கு தெரியாது அவர்களுக்கு அது சார்ந்த அறிவியலறிவு இல்லை என்பதை பதிலாகக் கூறுகிறார்.

தன்னுடைய தொல்லியல் நூலான "காலம் நடந்த பெருவழி" நூல் குறித்துக் கேட்ட போது, மண்ணுக்கு கீழே மற்றொரு உலகம் என்பார்களே அந்த உலகம் தான் தொல்லியல், முந்தைய மனிதர்கள் விட்டுச் சென்ற எச்சத்தை ஆய்வு செய்து அக்காலத்தில் நிலவிய பண்பாட்டுச் சூழலை தொல்லியல் ஆராய்ச்சி மூலம் அறிகிறோம், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சூழலியல் உறவை இந்த நூல் சுருக்கமாக பேசுவதாக குறிப்பிடுகிறார்.

பெண் ஆளுமைகளாக சூழலியலுக்காக பங்களித்த வங்காரி மத்தாய், ரேச்சல் கார்சன், மரியா சிபெல்லா மேரியான் என்று மூவரையும் பற்றி பல தகவல்களை நமக்குப் பகிர்கிறார்.

கங்கை நதியை மீட்க வலியுறுத்தி நூறு நாட்களுக்கும் மேலாக உண்ணாமல் உயிர் துறந்த ஜி. டி. அகர்வால், நிகமானந்தா ஆகியவர்களின் போராட்டம் இன்று பலரும் மறந்து போன ஒன்று, அதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார் கோவை சதாசிவம் .

காடுகள் அழிக்கப்படுவதால் உலகின் நோய் தொற்றுக்கள் வேகமாக பரவுகின்றன என்ற கூற்றின் பின் இருக்கும் அறிவியல் என்ன என்ற கேள்விக்கு....

காடுகளை அழிப்பதால் வாழ்விடங்களை இழந்த விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வருகின்றன.

விலங்குகளுக்கு பரவியுள்ள நோய் தொற்று எளிதாக மனிதர்களுக்கும் பரவி விடுகிறது, இதனை சூனோடிக்டினிஸ் என்பார்களாம்.

இது மிகப் புதிய தகவல் எனக்கு.

காடு, பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்று மொத்தப் பல்லுயிர்ச் சூழல் குறித்த பல சந்தேகங்களைத் தெளிவுபடுத்துகிறது கோவை சதாசிவம் பதில்கள்.

புதிதாக சூழலியலை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு, சலிப்பில்லாமல் உரையாடல் வடிவில் அமைந்த எளிமையான நூலிது.

கடைசியாக ஒரு அற்புதமான கேள்வி-பதிலுடன் முடிக்கிறேன்....

அடிப்படையில் கவிஞரான நீங்கள், "எச்சரிக்கை பூமிக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" என்கிற கேள்விக்கு கவித்துவமான ஒரு பதில் சொல்லுங்களேன் என்று ஆசிரியர் கேட்க, அதற்கு கோவை சதாசிவம் இரண்டே வரியில் நச்சென்று ஓர் பதில் சொல்கிறார்.

மனிதனால் படைக்கப்படாத இந்த பூமியை மனிதனால் அழிக்கவும் முடியாது !

இன்னொரு பூமியை மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான்!

அவன் காலடியில் நழுவிக் கொண்டிருக்கிறது வாழும் பூமி !