தொடர்கள்
பொது
கோடையில் குரங்குகள், மழைக்காலங்களில் பாம்புகள்  - ப ஒப்பிலி

கோடை என்றாலே குரங்குகளுக்கு கொண்டாட்டம்தான். பல வீடுகளில் காற்றோட்டமாக இருக்க ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து விடுவார்கள். இதுவே குரங்குகளுக்கு அழைப்பு விடுத்தது போலாகிவிடும். இதை சமாளிக்க தனியானதொரு தேர்ச்சி பெற்ற அணி, தலைமைவனஉயிரின சரகத்தில் உள்ளது. இவர்கள் பணி வீடுகளில் புகும் குரங்குகளையும், பாம்புகளையும் பிடிப்பதே.

சென்னை வன உயிரின காப்பாளர் மனிஷ் மீனா கூறுகையில் கோடையில் குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து விட்டது என்ற புகார்கள் அதிக எண்ணிக்கையில் வரும். அதே போல மழைக்காலங்களில் பாம்புகள் வீட்டிற்குள் வந்து விட்டன என புகார்கள் வரும். பாம்புகள் வீட்டுக்குள் இருக்கும் இடம் தெரிந்து விட்டால் சுலபமாக பிடித்துவிடலாம். ஆனால் குரங்குகளை அவ்வளவு எளிதாக பிடிக்க முடியாது. இந்த வன சரகத்திற்கு குரங்கு தொல்லை குறித்தும், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தது குறித்தும் ஒரு நாளைக்கு 60 முதல் 70 புகார்கள் பெறப்படுகின்றன. மாதத்திற்கு கிட்டத்தட்ட 1,000 புகார்கள் வருகின்றன. உடனுக்குடன் ஆட்களை அனுப்பி பாம்புகளையும், குரங்குகளையும் பிடித்து விடுகிறோம் என்கிறார் அவர்.

குரங்குகள் பெரும்பாலான நேரங்களில் கூட்டமாக திரியும். அவைதான் வீட்டினுள் புகுந்து அட்டகாசம் செய்து விடும். அவற்றை பிடிக்க கூண்டு வைத்து, அதில் சில பழங்களை போட்டு வைப்போம். பழங்களை பார்க்கும் குரங்குகள் கூண்டு என்பதை அறியாமலே உள்ளே செல்லும். மெல்லிய கம்பி, கதவுடன் பிணைக்கப் பட்டிருக்கும். குரங்கு பழத்தை எடுக்க முயலுகையில் ஏற்படும் அதிர்வில் கம்பி விலகிவிட, கதவு தானாக மூடிக்கொள்ளும். பெரும்பாலும் குரங்குகள் பிடிக்க இந்த முறையையே பயன்படுத்துவோம் என்கிறார் மனிஷ் மீனா.

20240415185126592.jpg

பிடிக்கப்பட்ட குரங்குகள் காஞ்சிபுரம், திருப்போரூர், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் உள்ள காப்பு காடுகளில் (Reserved Forests) விடப்படும். இந்த காப்பு காடுகளுக்கு அருகில் மனித குடியிருப்புகள் எதுவும் இல்லை. எனவேதான் பிடிபட்ட குரங்குகளை இந்த பகுதிகளில் விடுகிறோம் என்றார் மனிஷ் மீனா.

மற்றொரு மூத்த வனத்துறை அதிகாரி கூறுகையில் சில வருடங்களுக்கு முன் எழில் என்றொரு ஊழியர் இருந்தார். குரங்குகள் பிடிப்பதில் கில்லாடி அவர். சிறிய குரங்குகள் என்றால் மிக எளிதில் பிடித்து விடுவார். பெரிய குரங்குகள், அதிலும் மந்திகள் என்றால் மிகவும் கவனத்துடன் அவைகளை கூண்டுக்குள் வர வைக்க வேண்டும். ஏனெனில், குரங்குகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். தங்களை பிடிப்பதற்கே கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டால் அவைகள் கூண்டு வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு அருகில் கூட வராது. எனவே அவர் கூண்டை சரியான இடத்தில் வைத்து விட்டு பின் மறைவாக நின்று கொள்வார். எழில் கூண்டின் அருகில் இருந்தால் குரங்குகள் கூண்டை நோக்கி வரத் தயங்கும், அதனாலே அவர் மறைந்து நின்று கொள்வார். சில மந்திகள் பிடித்த பின்னும் தாக்க முயற்சிக்கும். அந்த மாதிரியான குரங்குகளை கூண்டை விட்டு வெளியே விட மாட்டார்கள். சுதந்திரமாக திரிந்த இந்த மாதிரி குரங்குகளை கூண்டில் பல நாட்கள் அடைத்து விட்டால் அவைகள் தானாக அடங்கிவிடும், என்றார் அந்த அதிகாரி.

20240415184802700.jpg20240415184916595.jpg

கோடையில் குரங்குகள் என்றால், மழைக்காலத்தில் பாம்புகள். பொதுவாக பாம்பு தனியாகத்தான் வீடுகளுக்குள் புகும். விஷத்தன்மை கொண்ட பாம்புகள் அதில் மிகவும் ஆபத்தானவை. கண்ணாடி விரியன் (Russell's Viper), சுருட்டை விரியன் (saw-scaled viper), கட்டு விரியன் (krait), மற்றும் நாக பாம்பு (cobra). போன்றவற்றை கையாளும் பொழுது மிக கவனத்துடன் செயல் பட வேண்டும். இல்லையெனில் பிடிப்பவர்களை அவை கொத்தி விடும். அதிலும் கண்ணாடி விரியன் எதிர்பாராத சமயத்தில் கடித்து விடும். வனத்துறையில் விஷ பாம்புகளை திறமையாக கையாளும் இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் எளிதாக எந்தவிதமான பாம்புகளையும் பிடித்து விடுவார்கள், என்கிறார் மணீஷ் மீனா. இவ்வளவு திறமையான இருளர் சமூகத்தினர் கண்ணாடி விரியனை பிடிக்கையில் மிகவும் கவனத்துடன் செயல் படுவார்கள், என்கிறார் அவர்.

வாசகர்களுக்கு இப்படி ஏதாவது பிரச்சனை இருந்தால் கீழ்கண்ட எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

044 -22200335