தொடர்கள்
பொது
நாங்கள் என்ன விளையாட்டு பொம்மைகளா?- ப ஒப்பிலி


கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான். இந்த விடுமுறை நாட்களில்தான் செல்ல பிராணிகள் விற்பனை அதிகரிக்கும். அதற்கு காரணம் உணர்ச்சி வேகத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை நச்சரித்து வளர்ப்பு பிராணிகளை/பறவைகளை வாங்க வைத்து விடுவார்கள். விடுமுறை முடிந்ததும் வாங்கிய விலங்கு/பறவைகளை பராமரிக்கும் பொறுப்பு பெற்றோர் தலையில் விடியும்.

வெள்ளெலிகள் (hamsters), முயல்கள், கினி எலிகள் (Guinea pigs), ஜெர்மன் ஸ்பிட்ஸ் (German spitz), போமரேனியன் (Pomeranian) வகை நாய்கள் ஆகியவைதான் அதிக அளவில் விற்கப்படும் வளர்ப்பு பிராணிகள் என்கின்றனர் சென்னையில் பெட் ஷாப் நடத்துபவர்கள். இந்த மாதிரி உணர்ச்சி வேகத்தில் வாங்கப்படும் விலங்குகள்/பறவைகள் விடுமுறை முடிந்தவுடன் பெட் ஷாப் வைத்திருப்பவர்களிடமே திரும்பி ஒப்படைக்க்கப்படும் அல்லது தெரிந்தவர்கள் வளர்க்க முன் வருவார்களா என்று கண்டறிந்து விலங்குகளை கொடுத்துவிடுவார்கள், என்கின்றனர் அவர்கள்.

20240415190448758.jpg

சென்னை வேளச்சேரியில் பெட் ஷாப் நடத்திவரும் ஏ ஆர் விஜய் கூறுகையில் விலை குறைவான விலங்குகள்/பறவைகள்தான் அதிக அளவில் கோடைகாலங்களில் விற்பனை செய்யப்படும். இந்த மாதிரியான விலங்குகள்/பறவைகளின் விலை அதிக பட்சமாக 5,000 ரூபாய்க்குள்தான் இருக்கும். விலை குறைவாக இருக்கும் பறவைகள்/விலங்குகள் என்பதால் அவற்றிற்கு பெரியதொரு மதிப்பு இல்லை என்கிறார் விஜய்.

இம்மாதிரி உணர்ச்சி வேகத்தில் செல்ல பிராணிகள் வாங்குவது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவுதான். குறைந்த விலையில் வாங்குவதால் சிலர் இந்த விலங்குகளை சரியான முறையில் பராமரிக்காமல் விட்டுவிடுவர். இன்னும் சிலர் இம்மாதிரியான செல்ல பிராணிகளை வாங்கிவிட்டு தங்களால் பராமரிக்க முடியாது என்று உணரும்பொழுது அவற்றை நிராதரவாக விட்டுவிடும் சம்பவங்களும் நடக்கிறது என்கிறார் வளர்ப்பு பிராணிகள் ஆர்வலர் ஷ்ரவன் கிருஷ்ணன். பராமரிப்பு சரியான முறையில் இல்லை என்றால் அது வளர்ப்பு பிராணிகளுக்கு வியாதிகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். எனவே வளர்ப்பு பிராணிகள் வாங்குவதற்கு முன் குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்தாலோசித்துவிட்டு வாங்குவதே சிறந்தது என்கிறார் ஷ்ரவன் கிருஷ்ணன்.

வெள்லெலிகள், முயல், மற்றும் கினி எலிகள் தோற்றத்தில் சிறிதாக இருந்தாலும் அவைகளின் பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை என்கிறார் விஜய். அதுவும் கோடை காலங்களில் அவற்றின் கூண்டுகளை அடிக்கொருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில் அவை நோய் வாய்ப்பட்டு இறந்து விடும் அபாயம் உள்ளது என எச்சரிக்கிறார் அவர். "எங்களது பெட் ஷாப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு செல்ல பிராணிகளை வாங்குவதற்கு முன் ஆலோசனைகளை வழங்குகின்றோம். வாடிக்கையாளரின் வீட்டின் அளவு, அதில் செல்ல பிராணிகளுக்கு ஒதுக்கப்படும் இடம், பராமரிப்பு, மருத்துவ செலவுகள், தரப்பட வேண்டிய உணவுகள் ஆகியவை குறித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்கெல்லாம் தயார் என்ற பதில் கிடைத்த பின்புதான் எங்கள் கடைக்கு வந்தவர்களுக்கு செல்ல பிராணிகளை விற்கிறோம்," என்கிறார் விஜய்.

அது மட்டுமல்ல வாங்கி சென்ற பின்பு அந்த விலங்கு/பறவைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அதற்கான உரிய மருத்துவ சிகிச்சை முறைகளையும் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து விடுவோம். அதனால் வாடிக்கையாளர்கள் சரியான பராமரிப்பு முறைகளை கடைபிடிக்க முடியும், மேலும் உரிய பராமரிப்பு உள்ளபொழுது அவற்றை நிராதரவாக விடுவது என்ற எண்ணமே பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ஏற்படாது என்கிறார் விஜய்.

செல்ல பிராணிகள் போல வண்ண மீன்களும் இந்த விடுமுறை நாட்களில் விற்பது அதிகரிக்குமா என்ற கேள்வியோடு வண்ண மீன்கள் விற்பனை செய்வோர் சங்க தலைவர் ராஜ ராஜன் அணுகினோம். அவர் கூறுகையில் மீன்கள் கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடியவை அல்ல. வண்ண மீன்கள் வாங்க மக்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கொளத்தூரில் உள்ள கடைகளுக்கு வருவார்கள். இந்த மீன்களை ஒரு பிளாஸ்டிக் பையில் ஆக்சிஜன் செலுத்தப்பட்ட நீரில் விட்டு அதை பேக் செய்து தருவோம்.

வெகு தூரத்தில் இருந்து வருபவர்கள் டூ வீலரில் கொளத்தூர் வந்து வாங்கி செல்வார்கள். அவ்வாறு செல்பவர்கள் அந்த மீன்களை கைகளில் பிடித்துக்கொண்டே செல்வார்கள். இதனால் அந்த பிளாஸ்டிக் பையில் நேரடியாக வெய்யில் படும் அவ்வாறு படும் பொழுது உள்ளே உள்ள நீர் சூடாகி விடும். இதனால் மீன்கள் இறந்து விடும். எனவே கோடை காலங்களில் மீன் விற்பனை மற்ற செல்ல பிராணிகள் போல இருக்காது என்கிறார் அவர்.

நாம் குழந்தைகளுக்காக வாங்கிக்கொடுப்பது ஒரு உயிரினம். அவைகளுக்கும் உணர்ச்சிகள் உண்டு. இதை புரிந்து கொண்டு செல்லப்பிராணிகளை வாங்கிக் கொடுங்கள். இல்லையேல் பொம்மை போதும்.