ஸ்ரீமஹாசாஸ்தா ரைவத மலையில் எழுந்தருளியது:
ஸ்ரீலலிதா அஷ்டோத்தர சதனாமாவளி போலவே பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு ஒரு அஷ்டோத்தர சதநாமாவளி உள்ளது. கம்பங்குடி வம்ச மூதாதையர்களில் ஒருவரான கவிசிரேஷ்டர் விஜயபட்டர் என்பவரால் இத அஷ்டோத்தர சதநாமாவளி எழுதப்பட்டுள்ளது. இந்த அஷ்டோத்தர சதநாமாவளியின் முதல் நாமாவளி ஓம் ரைவதாசலஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோ நம: என்று தொடங்கி ஓம் ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மைக்ய ஸ்வரூபாய நமோ நம: என்று நிறைவு பெருகிறது.
மேலே சொன்ன முதல் நாமாவானது பகவான் ரைவதம் என்ற மலையுச்சியில் நடுவில் வீற்றிருப்பவனாக பொருள் கொண்டுள்ளது.
விசேஷ நாமக்கள் அடங்கிய இந்த அஷ்டோத்தர சதநாமாவளி மந்திர சக்தி வாய்ந்தது.
த்வாரகாபுரிக்கு அருகில் அமைந்துள்ளது இந்த ரைவதமலை அல்லது ரைவத கிரி. இங்கு பகவான் தனது எட்டு பரிவார கணங்கள் புடை சூழ நித்ய வாசம் புரிகிறார்.
ரைவத மலையின் பெயர்க்காரணம்:
ஸ்ரீ காடந்தேத்தி மஹசாஸ்தா புரானம் கூறுவதாவது :-
புண்ய பூமியாம் பாரத பூமியின் வட பகுதியை ருத்ரவாகன் என்ற மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். குடிமக்கள சுகத்தினையே தனது குறிக்கோளாகக் கொண்டு வெகு சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்த அம்மன்னன் தவநெறியிலும் சிறந்து விளங்கினான்.
அம்மன்னனுக்கு ரேவதி நட்சத்தின் கடைசி பாதத்தில் சர்வ லட்சணங்களும் பொருந்திய ஒரு குமாரன் பிறந்தான். அதனால் ஆனந்தப் பரவசமடைந்த மன்னன் அக்குமாரனை மிகுந்த வாஞ்சையுடன் வளர்த்து வந்தான்.
ஆனால் அக்குமாரனோ துடுக்குத்தனம் மிகுந்தவனாகவும், பாப கர்மங்களில் விருப்பமுடையவனாகவும் வளர்ந்து வந்தான். அதனால் பெருங்கவலை கொண்ட மன்னன் ஒரு நாள் போற்றுதலுக்குரிய கர்க்க முனிவரிடம் சென்று அவரை நமஸ்கரித்து தனது மகனது நடத்தையினைக் குறித்து முறையிட்டு அவனை நல்வழிப்படுத்தும் மார்கத்தினைக் கூறுமாறு வேண்டினான்.
முனிவரும் அரசகுமாரனின் ஜாதகத்தைப் பரிசோதித்துவிட்டு, ராஜனே! உனது குமாரனின் கீழ்த்தரமான செய்கைகளுக்குக் காரணம் அவன் ரேவதி நட்சத்திரத்தின் கடைசி பாகமான நான்காம் பாதத்தில் பிறந்ததால் ஏற்பட்ட தோஷமே எனக் கூறினார்.
அதனால் அசாத்தியமாய் கோபம் கொண்ட அம்மன்னன் தனது குமாரனின் தீயகுணத்திற்கு காரணமான ரேவதி நட்சத்திரம் வானிலிருந்து நழுவி கீழே பூமியில் வந்து விழுமாறு சாபமிட்டான். அந்த சாபத்தினால் ரேவதி நட்சத்திரமும் தன் பொலிவிழந்து வான் வெளியிலிருந்து நழுவி பூமியிலுள்ள ஒரு மலை மீது வந்து விழுந்தது.
புனிதமான ரேவதி நட்சத்திரம் வந்து விழுந்ததால் அந்த மலை ரைவதம் என்று சிறப்புப் பெயர் பெற்று இன்றளவும் அதே பெயரோடு அறியப் பட்டு வருகிறது.
ரேவதி என்ற மங்கை ஜனனம்
அம்மலையில் விழுந்த ரேவதி நட்சத்திரம் அம்மலையிலே ஒரு மடுவாக மாறி நின்றது. சில நாட்கள் சென்ற பின் அம்மடுவிலிருந்து அழகே உருவமாக, உருக்கிய தங்கத்தின் ஒளியையும் பழிக்குமாறு தகதக என ஜொலிக்கின்ற தாமரை மலரை பழிக்கின்றதுமான ஒரு பெண் குழந்தை தோன்றியது.
ஸ்ரீமஹாசாஸ்தாவின் பரம பக்தரான பிரமுச்சர் என்ற தவமுனிவர் அக்குழந்தையைக் கண்டு பெருமகிழ்வு கொண்டவராய் அக்குழந்தையை தனது குடிலுக்குத் தூக்கிச் சென்று ரேவதி என நாமம் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தார்.
தமது தந்தையைப் போன்றே பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் மேல் அளப்பரிய பக்தி கொண்ட அப்பெண் ரேவதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தாள்.
அக்னி தேவன் பிரமுச்ச முனிவருக்கு யோசனை கூறுதல்:
நாட்கள் நகர, ஒரு நாள் அக்னிதேவன் பிரமுச்ச முனிவரின் குடிலைத் தேடி வந்து அவருடன் உரையாடிக்கொண்டிருந்தார். அச்சமயம் பிரமுச்ச முனிவர் தனது மகளான ரேவதியை அக்னி தேவனுக்கு அறிமுகம் செய்து வைக்க, ரேவதியும் அக்னிதேவன் பாதங்களில் விழுந்து அவரது ஆசியைப் பெற்றாள்.
சித்திரப்பாவை போல் ஒப்பற்ற பேரழகியாய்த் திகழ்ந்த ரேவதியைக் கண்ட அக்னி தேவனும், “முனிவரே! அழகின் சின்னமாகத் திகழும் உனது மகளுக்கு ஏற்ற மணாளன் வட பாரதத்தை ஆண்டு வரும் துர்த்தமன் என்னும் சக்கரவர்த்தியே ஆவான்.
மேலும் அவன், பல தேவர்களிலும் மேம்பட்டவரும், வியாபகரும், பராபரனுமான ஸ்ரீமஹாசாஸ்தாவின் அத்யந்த பக்தனும் ஆவான்.
இத்தகைய பெருமை வாய்ந்த துர்த்தம சக்கரவர்த்தியையே உனது மகளுக்கு மணமுடித்து வைப்பாயாக என யோசனை கூறினார்.
ரேவதியை மணந்து கொள்ளுமாறு பிரமுச்சர் துர்த்தமனை வேண்டுதல்:
இதைக்கேட்டு பெரு மகிழ்ச்சியடைந்த பிரமுச்ச முனிவரும் பகவான் சாஸ்தாவை வேண்டியபடி துர்த்தம சக்கரவர்த்தியின் அரசவையை அடைந்து அவனிடம் தனது மகள் ரேவதியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி அவளை மணந்து கொள்ளுமாறு பணிவுடன் வேண்டினார்.
“மஹாராஜனே! சகல அகிலாண்டங்களுக்கும் அதிபதியான பகவானை சிந்தையில் நிறுத்தி எப்பொழுதும் வழிபட்டு கொண்டிருக்கும் பிரமுச்ச முனிவன் நான். எனக்கு ரேவதி என்று ஒரு பெண் இருக்கிறாள்.
ரைவத மலையில் உள்ள ஒரு மடுவில் தானே தோன்றிய பெண் அவள். பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவிடம் பெரும் பக்தி கொண்டவள். தற்பொழுது, அவள் இளம் வயதும், பேரழகும், நற்குணங்களும் உடையவளாக வளர்ந்து திருமணப் பருவம் எய்தியுள்ளாள். ஒரு நாள் எனது குடிலுக்கு விஜயம் செய்த வேத கீர்த்தி வாய்ந்த அக்னி தேவன் பேரழகு வாய்ந்த எனது மகளுக்கு ஏற்ற வரன், சாஸ்தா பக்தி, வீரம், சீலம், ரூப லாவண்யம் போன்றவற்றில் சிறந்து விளங்கும் தாங்களே எனக் கூறி விட்டுச் சென்றார். அன்றிலிருந்து எனது செல்ல குமாரியை தங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்ற பெருவிருப்பம் என்னுள் தோன்றிவிட்டது. அறிவிலும், அழகிலும், பக்தியிலும் ஈடற்ற எனது மகளைத் தாங்கள் திருக்கரம் பற்றி எனது மனோ விருப்பத்தை பூர்த்தி செய்து வைக்கவேண்டும் என வேண்டினார்.
துர்த்தம சக்கரவர்த்தி திருமணத்திற்கு சம்மதித்தல்:
ரேவதியின் பிறப்பையும், ஸ்ரீமஹாசாஸ்தாவின் பேரில் உள்ள பக்தியையும் பேரழகையும் கேட்டறிந்த துர்த்தம சக்கரவர்த்தியும், தாம் ரேவதியை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தான்.
பிரமுச்ச முனிவரும் தனது மனம் ஆனந்த சாகரத்தில் மிதக்க தமது குடிலுக்குத் திரும்பி வந்து முழு விவரங்களையும் தனது அன்பு மகள் ரேவதியிடம் கூறினார்.
ரேவதி நிபந்தனையின் பேரில் திருமணத்திற்கு சம்மதித்தல்:
ரேவதியும், “தந்தையே! தங்கள் சித்தம் போல் நான் துர்த்தம சக்கரவர்த்தியை திருமணம் செய்துகொள்கிறேன். எனினும் எனது திருமணம் ரேவதி நட்சத்திரத்தில் தான் நடைபெற வேண்டும். வேறு நட்சத்திரத்தில் நிகழ்வதாக இருந்தால் இந்தத் திருமணத்திற்கு நான் உடன்பட மாட்டேன்”, என உறுதியாகக் கூறினாள்.
இதனால் விசனமடைந்த முனிவரும், பெண்ணே! நீ விரும்பும் காரியம் நடப்பதற்கரியது. ஏனெனில் ருத்வாக மன்னனின் சாபத்தால் அந்த ரேவதி நட்சத்திரம் ஏற்கெனவே பொலிவிழந்து பூமியில் விழுந்துவிட்டது.
ஆதலால் இப்பொழுது நிலவும் சூழ்நிலையை நீ உணர்ந்து வேறு ஒரு நட்சத்திரத்தில் இந்தத் திருமணம் நடைபெற ஒப்புக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஆனால், ரேவதியோ, “தந்தையே! ராசி தேவதைகளும் நட்சத்திர தேவதைகளும் அவற்றை ஆதாரமாகக் கொண்ட நவக்ரஹ தேவதைகளும் அந்தந்த ஜீவர்களின் பூர்வஜென்ம பாப புண்ணியங்களுக்கு ஏற்ப பலா பலங்களை அளிக்கின்றன. அப்படி இருக்கையில், ருத்வாக மன்னன் தனது குமாரனின் துர் நடத்தைக்குக் காரணம் அவன் பிறந்த ரேவதி நட்சத்திரத்தின் தாக்கமே என எண்ணி சாபமிட்டது பெரும் மூடத்தனமாகும்.
தவ வலிமை மிகுந்த அந்த மன்னனின் சாபத்தால் பூமியில் விழுந்த அந்த நட்சத்திரத்தினை முனிகுல ரத்னமான தாங்கள் தங்களது தவ வலிமையால் மீண்டும் வான் வெளியில் நிறுத்தவேண்டும்.
பரிபூர்ண கருணாசமுத்ரமாயும், எல்லா உலகங்களுக்கும் ஈஸ்வரராய் திகழும் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவினை நோக்கி நீங்கள் இது குறித்து தவம் இருந்தால் அந்த கருணாமூர்த்தி மீண்டும் அந்த நட்சத்திரத்தை முன் போலவே வான் வெளியில் ஜொலிக்கச்செய்வார்”, என தனது தந்தையிடம் எடுத்துக் கூறினாள்.
அதனை ஏற்ற பிரமுச்ச முனிவரும் தமது மகள் தோன்றிய புனித ரைவதமலையினை அடைந்து பகவானைக் குறித்து தவமியற்றலானார்.
ரேவதி நட்சத்திரம் பொலிவு பெற்று வான் வெளியை அடைதல்:
முக்காலத்திலும் அழிவில்லாத பரம்பொருளான பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவும் சிறிது காலத்திற்குப் பின் பிரமுச்ச முனிவரின் தவத்தில் மகிழ்ந்தவராய் அவர் முன் தோன்றி, “முனிகுலச் செல்வமே! உனது தவத்தினை மெச்சினேன். உனது அருமை மகளின் விருப்பத்தை நிறைவேற்றி அருள்வேன். ருத்வாக மன்னனின் சாபத்தால் இம்மலையில் விழுந்து மடுவாய் மாறி நிற்கும் ரேவதி நட்சத்திரம் நம் அருளால் இப்பொழுதே முன்னிலும் பொலிவுடையதாய் மாறி வான் வெளியில் எழுந்தருளும். நீயும் உன் மகளின் விருப்பப்படியே அந்நட்சத்திரத்தில் அவளுக்கு மணமுடித்து வைக்கலாம் என ஆசி கூறி அருளினார்.
உடனே அம்மலையில் விழுந்த மடுவாய் நின்ற ரேவதி நட்சத்திரமும் முன்னிலும் பொலிவுடன் வெளிக்கிளம்பி பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவையும் பிரமுச்ச முனிவரையும் வணங்கியது. பின் அது பகவான் அருளால் வான் வெளியில் சென்று அமர்ந்தது.
பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா ரைவத மலையில் அமர்தல்:
ரேவதி நட்சத்திரமும் பொலிவுடன் வானில் அமர்ந்ததைக் கண்டு மகிழ்ந்த முனிவரும் வேத மொழிகளால் பகவானை போற்றி வழிபட்டு, “என் மகளின் விருப்பத்தை நிறைவேற்றிய தங்கள் கருணையே கருணை. தம்மைச் சரணடைந்தவர்களின் உள்ளக் கிடக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் வள்ளல் குணம் வாய்ந்த தாங்கள் எனக்கு தரிசனம் தந்து அருள் பாலித்ததின் நினைவாக எப்பொழுதும் இப்புனித மலையிலேயே எழுந்தருளி சகல உலகினருக்கும் உயிரினங்களுக்கும் அருள் பாலித்து வரவேண்டும்”, என வேண்டினார்.
அதனை ஏற்ற பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவும் நித்யகல்யாண சுந்தர மூர்த்தியாய் அம்மலையிலேயே எழுந்தருளினார்.
ஸ்ரீமஹாசாஸ்தாவிற்கு ஆலயம் அமைத்தல்:
ரேவதியாகிய அம்முனிபுத்ரியும், தமது விருப்பத்தினை நிறைவேற்றிவிட்டு ரைவத மலையில் நித்யகல்யாண சுந்தரமூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பகவானுக்கு பிரம்மாண்டமான ஆலயம் நிர்மாணித்து தனது கணவனுடன் சேர்ந்து பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவை பக்தி சிரத்தியுடன் ஆராதித்தாள்.
Leave a comment
Upload