தொடர்கள்
கவர் ஸ்டோரி
இசையா? மொழியா? - எம்.பி. உதயசூரியன்

20240404071505652.jpeg
கண்ணதாசன் இருந்தால் கைதட்டி ரசிப்பார்.

எம்.எஸ்.வி. கேட்டால் மெட்டுப் போட்டுச் சிரிப்பார்.

ஆம். சங்கதி பழசு சர்ச்சை பழசு. இசையா? மொழியா? எது பெருசு? இரண்டுமே தமிழுக்குப் பரிசு. ஆனால் இதில் சம்பந்தப்பட்டத் தலைகளால் இப்போது அனல் பறக்குது ரவுசு.

நதிமூலம் ஸாரி, ’சுதி’மூலம் பார்த்தால், இந்த விவகாரத்திற்கு விதை போட்டதே சென்னை ஹைகோர்ட்தான். சென்ற வாரம், ராயல்டி தொடர்பாக இளையராஜா வழக்கில் நீதிபதிகள் கேட்ட கேள்வி இது: “வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது பாடலுக்குப் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?”

அப்புறம்? ’படிக்காத பக்கங்கள்’ என்ற படத்தின் ஆடியோ ரிலீஸ். விழாவில் பேசிய வைரமுத்து ”இசை எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிது மொழி. மொழி எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிது இசை! இரண்டும் கூடினால்தான் அதற்குப் பாட்டு என்று பெயர்” என்று பேசிவிட்டு, “இதைப் புரிந்துகொண்டவன் ஞானி. புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என்று ஒரு சாட்டையை வீசி வைத்தார்.

மொத்தப் பேச்சிலும் வைரமுத்து எங்கேயுமே ‘மொழிதான் பெரிது’ என்று முழங்கவில்லை. ஆனால் ‘அஞ்ஞானி’ என்று அவர் விமர்சித்தது இளையராஜாவைத்தான்’ என்று வைரமுத்துவின் வைரிகள் திரி கொளுத்திப்போட, சமூக ஊடகங்களில் ’இளையராஜா – வைரமுத்து மோதலாகப்’ பற்றி எரிகிறது.

20240403154348351.jpeg

இன்று நேற்று அல்ல, என்றுமே ராஜா ’இசைதான் பெரிது’ என்று கெத்தாக கூறிக் கொண்டேதான் இருக்கிறார். கூடவே ’சொற்கள் வெத்துதான்’ என்றும் சொல்லிக்காட்டிக்கொண்டே இருக்கிறார். ஆகவே இந்தச் சர்ச்சை குறித்து ராஜாவின் கருத்து புதிதாகத் தேவைப்படாது.

20240403154615385.jpeg

ஆனால் இந்த இசையா மொழியா விவாதத்தில் வெறுப்பு நெருப்பை மூட்டிவிட்டது கங்கை அமரனின் பேச்சு. ”வைரமுத்துவை நாங்கள்தான் வளர்த்து விட்டோம்” என்று தனிப்பட்ட தாக்குதலில் தரம் தாழ்ந்து பேசி, வழக்கம்போல கடும் விமர்சனத்திற்கு உள்ளானார் கங்கை அமரன். வைரமுத்துவின் மீதான அரசியல் பகையை இப்படித் தீர்த்துக் கொள்கிறார் கங்கை அமரன்’ என்று பதிலடி தருகிறார்கள் வைரமுத்து ரசிகர்கள்.

சரி, எது பெரிது? இசையா? மொழியா? வெட்டவெளி வானத்தில் மேகம் சூழ்ந்து மழை பொழிய வைக்கும் அமிர்தவர்ஷினி ராகம் பாடினால்! அமாவாசை நாளில் அம்பிகை அருளால் பௌர்ணமி தோன்றியது அபிராமி பட்டரின் அந்தாதித் தமிழால்! இசையும் மொழியும் தனித்தனியே உன்னதமே. இணைந்தால் தான் அற்புதமே. இதற்கு இப்படிச் சரித்திரச் சான்றுகள் பலநூறு உண்டு.

”திரைப்பாடலில் இசையமைப்பாளரின் வேலை என்பது பாடலுக்குப் பக்கத்தாளம் போடுவதுதான். தலைமுறை தாண்டிய பிறகு, இசையின் புத்தழகு குறையலாம். ஆனால் பாடல் வரிகளின் மொழிச்செப்பம் குன்றுவதில்லை” என்கிறார் கவிஞர் மகுடேசுவரன். ”மொழியா இசையா என்றால் சந்தேகமே இல்லாமல் மொழிதான் பெரிது. பாடலில், வார்த்தையா வாசிப்பா என்றால் சந்தேகமே இல்லாமல் இசைதான் பெரிது” - இப்படிச் சொல்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

ஆனால் எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன் கருத்து வேறுமாதிரி: ”எப்போதும் மனதில் எங்கோ ஆழப் புதைந்திருப்பது பாடலின் இசைதான். வரியைத்தான் நினைவுபடுத்தத் தேடுவோம். இசை ஆன்மா. வரிகள் அதன் பொழிப்புரை மட்டுமே!”

இசை ஆல்பங்களோ, கவிதைத் தொகுப்புகளோ பெறும் வரவேற்புகளை விட, உலக அளவில் ’ஹிட்’ அடிப்பவை இசையும் மொழியும் கலந்த பாடல்கள்தான் என்பது காது ரசித்துக் கண்கண்ட வரலாறு.

‘நீ பாதி நான் பாதி கண்ணே’ என்று இறுகத் தழுவிக் கொஞ்சிக் கொள்ளவேண்டிய இசையையும் மொழியையும் தனிப்பட்ட ‘இளையராஜா - வைரமுத்து மோதலாக’ மாற்றி இந்த 106 டிகிரி வெயிலிலும் சிலர் குளிர்காய்வது கொடுமைக் காமெடி.

20240403154534900.jpeg

பாருங்கள் மேஸ்ட்ரோவை! கத்தரி வெயிலில் இந்த மாதிரி கசமுசாப் பேச்சுக்கு கத்திரி போட்டுவிட்டு மொரிஷியஸ் பீச்சில் கூலாக இருக்கிறார்.

ஆகவே மோதலர்களே, ”ராஜா’ மாதிரி இருங்க!