தொடர்கள்
பொது
வாத்தியார் "சுஜாதா" நினைவுகள் - சுஜாதா தேசிகன்

20240403130705588.jpg

இன்று (மே 3)வாத்தியாருக்கு 89 பிறந்த நாள்.. அவரின் முதல் ரசிகரும், அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்தவருமான "சுஜாதா தேசிகன் " அவர்களின் பகிர்வு...

20240403130204172.jpg

"சுஜாதாவும் வெளிநாடும்
‘வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு’ என்று இந்தியாவைத் துறந்து அமெரிக்கா செல்லும் இளைஞர்களைப் பற்றி சுஜாதா ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

“இன்று சென்னை, பெங்களூர் மாதிரி நகரங்களில் திரியும் அத்தனை இளைஞர்களையும் உற்றுப் பார்க்கும் போது ஓர் ஆட்டு மந்தைத்தனம் தெரிகிறது…ஜீன்ஸ் போன்றவை ஸ்கூட்டர் மெக்கானிக் வேலைகளுக்கு சரி. மற்றவர்களுக்குத் தேவைதானா என்பதே எனக்குச் சந்தேகம். “ என்று கட்டுரையை படித்த பல இளைஞர்களுக்கு அந்த கட்டுரை சுருக் சென்று குத்த வழக்கம் போல சுஜாதாவை காய்ச்சி எடுத்தனர்.

கட்டுரை வந்த மறுவாரம் சுஜாதா அக்கட்டுரைக்கு ஒரு ‘ஃபாலோ-அப்’ எழுதியிருந்தார். அதில் ஒரு பகுதி

”முக்கியமாக சிலர் உன் இரண்டு பிள்ளைகளுமே அமெரிக்காவில் வாசம் செய்கிறார்களே… உனக்கு என்ன தகுதியிருக்கிறது மற்றவருக்கு உபதேசம் செய்ய, புத்தி சொல்ல என்று கேட்டிருந்தார்கள். அவர்கள் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லை. நான் போகாதே என்று சொல்லவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். செல்லும்முன் அதற்குக் கொடுக்கும் மறைமுகமான விலைகளை அறிந்து செல்லுங்கள் என்றுதான் எழுதியிருந்தேன். வெளிநாட்டில் போய் சம்பாதிப்பதைத் தவிர்க்க அல்ல. மேலும் என் பிள்ளைகள் இருவரும் அமெரிக்கா சென்று வேலை செய்வதால்தான் என்னால் அந்தக் கட்டுரையை உண்மையாக எழுத முடிந்தது என்பதை அவர்கள் அறியவில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டு இருக்கும் விளைவுகளை எல்லாம் சந்தித்தவன் என்கிற தகுதியில்தான் எழுதினேன்”

என்று எழுதியிருந்தார்.

நான் கல்லூரியில் படித்த போது சுஜாதாவின் எழுத்தின் மீது மோகம். இதைப் பற்றி சில வாரங்கள் முன் எழுதியிந்தேன். ”ஏண்டா நாளைக்கு காலேஜ் இருக்கில்ல ” என்று அம்மாவின் பேச்சிலிருந்து தப்பிக்க மாடிக்குச் சென்றேன். மாடியில் தனி அறை நிம்மதியாக படிக்கலாம். ஆனால் ஒரு பிரச்சனை இருந்தது. எங்கள் வீட்டு மாடிக்கு இரவில் யாரும் அதிகம் போக மாட்டார்கள். பல வருடங்கள் முன் நாங்கள் குடிவருவதற்கு ஓர் இளம் பெண் தூக்கு போட்டுத் தற்கொலை செய்துகொண்டாள் என்று என் பாட்டி சொல்லியிருக்கிறாள்.

சுஜாதா எழுத்தின் பாய்ச்சல் பேயை ஓவர் டேக் செய்தது. இரவு 11.30 மணிக்குச் சின்னதாக ஒரு விளக்கைப் போட்டுக்கொண்டு படிக்க ஆரம்பித்தவுடன், அதில் ஆழ்ந்துவிடுவேன் அதனால் பேய் போடும் சின்ன சின்ன சத்தங்கள் என் காதில் விழுந்ததில்லை. விடியற்காலை ஐந்து மணிக்குப் புத்தகம் படித்து முடித்து, கொஞ்சம் தூக்கம், காபி, குளியல் மீண்டும் அடுத்த புத்தகம் என்று கல்லூரிப் படிப்பையும் முடித்து வேலையில் சேர்ந்த காலகட்டத்தில் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அமேரிக்க டாலரை இந்திய ரூபாயுடன் பெருக்கல் செய்து வரும் தொகை மனதில் பேராசையைக் கிளப்பும். இந்தியாவில் பல வருடங்களில் குப்பை கொட்டினால் கிடைக்கும் சம்பளத்தை ஒரே வருடத்தில் சுருட்டிக்கொண்டு வந்து நிம்மதியாக இங்கே வாழலாம் என்ற மோகம் விரகதாபத்துக்கு ஒப்பானது.

அப்பாவிடம் “வெளிநாட்டுக்குப் போகட்டுமா ?.. நல்ல சம்பளம் இவ்வளவு கிடைக்கும்” என்றேன்.

“வாழ்க்கையில் உனக்கு எது முக்கியம் என்று நீயே தீர்மானித்துக்கொள், it all depends what you value in life, its your choice” என்றார்.

நான் தீர்மானித்தேன்.

சுஜாதாவின் கட்டுரைகள் அடங்கிய ‘கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று நான் தொகுத்த புத்தகத்தில் வெளிநாடு செல்லும் இளைஞர்களைப் பற்றிய முன்பு சொன்ன அந்தக் கட்டுரையைச் சேர்த்திருந்தேன். அது பிரசுரமான போது நிகழ்ந்த நிகழ்வுகளை அவரிடம் நினைவுகூர்ந்தேன். அப்போது சுஜாதா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

“தேசிகன், நீங்க ஏன் வெளிநாடு போகவில்லை ?”

“போகணும் என்று தோன்றவில்லை.. ஆனால் என்னுடன் காலேஜில் படித்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்” என்றேன்.

“சரி... நீயும் போகலாமே... “

“இந்திய மண்ணுக்கு.. .. “

சிரித்துக்கொண்டு “இது ஜல்லி” என்றார்

கொஞ்சம் தயங்கி அந்த உண்மையைச் சொன்னேன்

“சார் நீங்க இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு போக மனசு வரவில்லை...” என்றேன்.

ஒரு சின்ன புன்னகை.

என் அப்பா ஒரு முறை “நீ ஏன் அமேரிக்கா போகலை என்று எனக்கு தெரியும். சுஜாதா இருக்கிறார் என்பதால் தானே ?” என்றார்.

டக் என்று பொய் சொல்ல முடியவில்லை. “ஆமாம்” என்றேன்.

போயிருந்தால் பல லட்சம் டாலர் சம்பாதித்திருப்பேன். ஆனால் சுஜாதா உட்படப் பல விஷயங்களை இழந்திருப்பேன். இந்தக் கடைசிப் பக்கம் உட்பட !

20240403130620546.jpg

3 மே - சுஜாதா பிறந்த தினம்.

(சுஜாதா தேசிகன் அவர்களுக்கு நன்றி )