தொடர்கள்
தொடர்கள்
சுப்புசாமியின் சபதம்...! புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஶ்ரீகாந்தன். 4

20240403232815650.jpg


"இன்னிக்கு இடியாப்பம் - பாயா செய்யட்டுங்களா?" என்று கேட்டார் சாய்ரா பானு.


"நஹி...மா. நேத்து மீந்த சாதம் இருக்குமே அந்தப் பழையதும் சின்ன வெங்காயமும் போதும்...!" என்றார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் தன் அன்பு மனைவியிடம்.


"ஏனுங்க அப்பா அம்மா ஞாபகம் வந்துவிட்டதா...?"


சிக்கனமாகப் புன்னகைத்தார் ரஹ்மான்.


"என்ன ஆச்சு?"
"தெரியல"

20240403232837413.jpg


"ஏதோ இழந்தமாதிரி..."


"வரலை, கிடைக்கலை..."


"மணி சார் படம் கமிட்மெண்ட்டா? டியூன் வரலையா?"


"டியூன்... பாட்டு எல்லாம் கிடைச்சாச்சு. ஒரு வித்தியாசமான ஒலி கிடைக்கலை. வேணும்...!"


"உங்களுக்கு கிடைக்காததா, யா அல்லாஹ்...!"


"ஏறக்குறைய 125 ஒலிகளைப் போட்டு காமிச்சேன். 'நோ, ரஹ்...மான். ஐ டூ வாண்ட் கெட் சம்திங் இன் டிபரெண்ட்'னு சொல்லிட்டார் மணி...!"


"எல்லாம் அல்லாவின் சோதனை. அவுர் கியா ஹே?" கணவரை கனிவாகப் பிடித்துக் கொண்டார் பீவி.


செல்போன் செல்லமாக அழைத்தது.


"போலியே மணிஜீ...!"


"கிடைச்சுதா?"


"இல்லை..."


"ஏன்?"
"பிடிபடலை...!"


"முயற்சி..."


"செய்கிறேன்..."


"வைக்கிறேன் ஃபோனை. வில் மீட் அட் ஸ்டுடியோ...!"


"யா... ப்ளஷர்!"


கணவரின் கைகளை ஆதரவாகப் பற்றிய மனைவி கேட்டார்:
"என்னதான் அப்படி வித்தியாசமான ஒலி...?"


"வேணும் ஒரு தவளையின் சத்தம் மாதிரி, தகர டின்னில் பட்டாசை வைத்தால் எழும் கிழிசல் ஒலி மாதிரி, சலவைக் கல்லில் அடித்து துவைக்கும் ஒலி... பிரேக் போடும் ஆட்டோவின் ஒலி மாதிரி, தொடையை திடீரெனக் கிள்ளினால் வருமே அலறல்...இதுபோல வித்தியாசமான ஓர் ஒலியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்...!"
'அகில உலகமும் இவரது இசைக்காக காத்திருக்கிறது. ஆனால், இவர் வித்தியாசமான ஓசைக்கு காத்திருக்கிறார்...!' மனைவி தலைமுக்காட்டை போர்த்தியபடி நினைத்தார்.


*****


"அதாங்க ரகுமான் ஊடு...!" என்றார் சாலையில் சென்றவர். பெரிய பங்களா, பெரிய கேட். புறத்தே ஏ. ஆர். ரஹ்மான் என மின்னும் பலகை. உயரக் கதவு அருகில் குள்ளமான ஒரு கூர்க்கா, பார்க்கும்போதே கருணை இல்லாத மனிதராகத் தெரிந்தான்.

"வணக்கமுங்கோ...!" என்றார் சுப்புசாமி.


"அரே தாத்தா என்ன வேணும்? உங்களுக்கும் பாட்டு பாடணும்? அதான் தெனமும் ஆயிரம் பேர் வர்றிங்க. ஐயாவுக்கு சி.டி.யில் பாடி அனுப்புங்க. புடிச்சிருந்தா கூப்பிடுவாரு...!"


"ரொம்ப அர்ஜென்ட்!" என்றார் தாத்தா.


"அர்ஜெண்டுக்கும் ஆர்டினரிக்கும் இங்க இன்னா சலவையா செய்றாங்க? அதெல்லாம் ஐயாவை இங்கு பார்க்க முடியாது. ஸ்டுடியோவிலை போய் ஓரமா நின்னா பார்க்கலாம்....!"


சட்டென தன் பூஞ்சையான கையால் வாஞ்சையாய் கூர்க்காவின் கைகளைப் பிடித்து அழுத்தினார் தாத்தா. இருபது ரூபாய் லஞ்சம் கொடுக்கத் திட்டம். மிக வித்தியாசமான வண்ணத்தில் உருவான ரூபாய்.


"சாயா சாப்பிடுங்க..." என்றார் சுப்புசாமி.


சுர்ரென்று கூர்க்காவுக்கு கோபம் எகிறியது.
"சாயா...போயா...கொண்டு போய் உன் ஆயாகிட்டே கொடு...!"


ஜூனியர் சிட்டிசன் என்றால் நெட்டித் தள்ளியிருப்பார். சுப்புசாமி படு சீனியர் சிட்டிசன் என்பதால், பான்பராக் வாய் மட்டும் பேசியது.இருந்தாலும் கிழ பாய்சாப், தனது ஒன்றுவிட்ட காட்மாண்டு பெரியப்பா மாதிரி இருந்ததால் பாவப்பட்டவன்,
"சரிங்கோ பெரியவரே, ஐயாகிட்ட சான்ஸ் எல்லாம் கேட்க முடியாது. காம்பவுண்ட் பக்கம் பூப்பறிக்க சில சமயம் வருவார். அப்போ முகத்தை வேணும்னா காட்டுறேன். பார்த்துவிட்டு ஊர்ல போய் நான் ஏ. ஆர். ரஹ்மானை பார்த்தேன்னு சொல்லிக்கோங்க. இப்படி ஓரமா இந்த பிளாஸ்டிக் நாற்காலியில் குந்துங்க...!"


சுப்புசாமிக்கு சும்மா குந்தியிருப்பது கடினமாய் இருந்தது. பூக்காத போகன் வில்லாக்கள் சிலுசிலுக்க, கொட்டாவி வந்தது. பகல் கனவு கண்டார்.


காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு குளுகுளு அறையில் திலீப் என்ற ஏ .ஆர்.ரஹ்மான் சைகை காட்ட, சுப்புசாமி பாட, ரெக்கார்டிங். முதல் டேக்கிலேயே ஓகே. "சூப்பர்! தேங்க்ஸ்..." என்று கட்டைவிரலை உயர்த்தினார் இசைப்புயல்.

20240403232934414.jpg


"அடுத்த சாங் போகலாமா?"


"கொஞ்சம் இருடாப்பா தம்பி...!" என்ற தாத்தா ஜிப்பா பையிலிருந்து மூக்குப்பொடி டப்பாவை தன்னிச்சையாக எடுத்து, இச்சையாக இன்பப் பொடியை இழுத்தார். பேரானந்தம், பரம சுகம்! சுதியை ஜதி சொல்லி அழைக்கும் நெய்ப் பொடி. தேக்குப் பலகையில் பாலிஷ் பூசியதுபோல, நிறம், திடம், நெடி, கார மணம். நாசி நரம்பில் சகல கார சம்பத்துகளும் ஏற, "அ... அ ... ஹக்சூ...!" என்றது சுப்புசாமியின் மூக்கு.


ஒரு ஹக்சூ விஸ்வரூபம் எடுத்து பல ஹக்சூக்களை வானில் உலவ விட்டது. ஆல் இந்தியா ரேடியோவில் எழுதுபவர்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் வார்த்தை: 'என் என் படைப்புகள் காற்றில் கலந்தன!' என்பது. ரஹ்மான் வீட்டுத் தோட்டத்தின் காற்றிலும் சுப்புசாமியின் நீண்ட நாசித் தும்மல்கள் கலந்தன என்று சொல்லவும் வேண்டுமோ?


பூப்பறித்துக் கொண்டிருந்த இசை மேதை அசைவற்று நின்றார்.


கூர்க்கா குலுக்கினான்.
"யோவ்...யோவ்... பெரியவரே உதர் தேக்கோய்யா, ஐயா தோட்டத்தில் நிக்குறாருய்யா...!"
உலுக்கிய உலுக்கலில் மூக்கின் சிற்றின்ப அவஸ்தையிலிருந்து மீண்ட சுப்புசாமி எட்டிப் பார்த்தார்.


சாட்சாத் ரஹ்மான் தம்பிதான்!


கானம் பாட சான்ஸ் தரப் போகும் தம்பி...!
கிழவியை மூச்சடைக்க... ஆச்சரியப்பட வைக்கப்போற தங்கக் கம்பி...!


"யோவ் கிளம்பய்யா இடத்தை விட்டு. ஒரேயடியா காம்பவுண்டை தாண்டிடுவே போலிருக்கு. ஐயாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. கிளம்பு...கிளம்பு. என் வேலைக்கு வேட்டு வெச்சிடாதே. எனக்கு ரெண்டு குடும்பம் இருக்கு...!"


தாத்தா அவனது நியாயத்தை உணர்ந்து, 'பிறகு ஸ்டுடியோவில் பார்த்துக் கொள்ளலாம்' என முடிவெடுத்தவராக வந்த வழி நோக்கி நடக்கத் தொடங்கினார்.


"வாட்ச்மேன், அந்தப் பெரியவரை நிற்கச் சொல்லுங்க...!" என்ற சன்னமான குரல் தோட்டத்திலிருந்து ஒலித்தது.
ரஹ்மான்தான் சுப்புசாமியை அழைத்தார்!


(அட்டகாசம் தொடரும்