தொடர்கள்
தொடர்கள்
‘தமிழுக்கு ஒரு முத்தம்’ – 7 -    பித்தன் வெங்கட்ராஜ்

20240402194028771.jpg

All the world is a stage. (உலகமே ஒரு நாடகமேடை)

-சொன்னவர் யார்?!

பலபேருக்குத் தெரிந்திருக்கலாம். பல்வேறு தத்துவங்களையும் கவிதைகளையும் தன் நாடகங்களின் வழியாகச் சொன்ன அவர்தான் ‘இந்த உலக வாழ்க்கையே ஒரு நாடகம் போன்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். அவர் யார் என்று கடைசியில் பார்ப்போம். இப்போதைக்கு நாடகம் பற்றிப் பார்ப்போம். உலகெங்கும் பல்வேறு நாடகங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், தன் மொழியில் நாடகத் தமிழ் என்று ஒரு பிரிவையே கொண்டுள்ள தமிழே உலக நாடகங்களுக்கெல்லாம் தலையாயது என்றால் அது மிகையில்லை.

சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் அதன் பாயிர உரையில் நாடகத்தமிழ் நூல்களாகிய அகத்தியம், பரதம் போன்ற நூல்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இப்போதைக்கு அவை பெயரளவில்தான் உள்ளன என்றாலும் அவற்றின் காலம் மிகப் மிகப் பழைமையானது என்று கணிக்கப்படுகின்றது. அகத்திய முனிவர் எழுதியது அகத்தியம் எனப்பட்டது போலவே, தொல்காப்பியர் எழுதியது தொல்காப்பியம் எனப்பட்டதுபோலவே, பரத முனிவர் எழுதியதால் அந்நூல் பரதம் என்றழைக்கப்பட்டது எனலாம். பரதம் என்பது தற்காலத்தில் பரத நாட்டியம் என்று அறியப்படுகிறது. ஆக, பரத நாட்டியம் என்பதும் நாடகத்தின் ஒரு வகை என்பதே சரியாக இருக்கும்.

20240402194158314.jpeg

இதனை உறுதி செய்யும் விதமாகச் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் நாடகம் என்னும் சொல்லை ‘ஆடல்/நாட்டியம்’ என்னும் பொருளிலேயே இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ளார்.

"நாடக மகளிரும் நலத்தகு மாக்களும்

கூடிசைக் குயிலுவ கருவியாளரும்" (சிலம்பு - கால்கோள் காதை: 141-142)

நாட்டியப் பெண்கள், நன்மக்கள், பக்க வாத்தியம் எனப்படும் இசைக்கலைஞர்கள் என்று தொடங்கி சஞ்சயன் முதலானோரை உள்ளே வர விடுக என்று சேரமன்னன் ஆணையிட்டான் என்கிறார் இளங்கோ. மேலும் மாதவியைக் குறிப்பிடும்போதும் 'நாடகமேத்தும் நாடகக் கணிகை' என்றே குறிப்பிட்டுள்ளார். சிலப்பதிகாரத்துக்கு நாடகக் காப்பியம் என்றும் ஒரு பெயருண்டு. நாடக அரங்கத்தின் அளவுகளைக்கூட அரங்கேற்றுக் காதையில் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.

நமக்குக் கிடைத்திருக்கும் பழைமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே நாடகம் பற்றிய பல குறிப்புகள் உள்ளன. (தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்பர்)

'நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

பாடல் சான்ற புலனெறி வழக்கம்' என்கிறது ஒரு தொல்காப்பியப் பாடல் (பொருளதிகாரம் – அகத்திணையியல்: 56).

20240402194503385.jpg

இந்நாடகக் கலையைக் கூத்து என்று அழைப்பதும் மரபு. (சிவபெருமானைக்கூடக் கூத்தன் என்று அழைப்பதும் உண்டு). ஆக, நாடகம் என்பது நடிப்பு மட்டுமல்லாது, இசையும் பாட்டும், நடனமும், அபிநயங்களும் சேர்ந்தது என்றே சொல்லலாம். இப்படியான நாடகக் கலை தமிழில் பல நூற்றாண்டுகளாகக் கண்டும் காணாமல் விடப்பட்டது. பின்னர் பம்மல் சம்பந்த முதலியாரால் மீண்டும் தொடங்கப்பட்டது. தொழில்நுட்பங்களோடு இணைந்து அதுவே இப்போது திரைப்படம்/சினிமா என்று வளர்ந்து நிற்கின்றது.

20240402194844910.jpg

சரி, இப்போது நம் கேள்விக்கு வருவோம். உலகமே ஒரு நாடகமேடை என்று கூறியவர் இவ்வுலகமே அறிந்த வில்லியம் ஷேக்ஸ்பியர்தான். நம் தமிழ்ப்புலவர் ஒருவரும் கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியர் காலத்துக்கு முன்பே வாழ்க்கையை நாடகத்துக்கு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்.

பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்

தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்

அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்

நிரம்புமேல் வீட்டு நெறி. - (ஏலாதி - 24)

நோய், ஊனம், மூப்பு, இறப்புச் சோகம், துன்பம், வறுமை இவை இல்லாமல் ஒருவனுக்கு அமையும் வாழ்க்கை ஒரு நாடகத்தைப்போல் இல்லாமல் நல்வாழ்வாக அமைந்து அவன் வீடுபேறு அடைவான் என்கிறார் கணிமேதாவியார். மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றேனும் இல்லாத ஒரு வாழ்க்கை அமைவது யாருக்கும் அரிதுதானே. ஆக, கணிமேதாவியாரும் மறைமுகமாக ‘வாழ்க்கை ஒரு நாடகம், உலகம் ஒரு நாடகமேடை’ என்றே குறிப்பிடுகிறார் அல்லவா!

பழங்காலந்தொட்டுத் தொடர்ந்துவரும் நாடகக் கலைக்கும், ஷேக்ஸ்பியருக்கு முன்னரே ‘வாழ்க்கை ஒரு நாடகம் போன்றது’ என்று கூறிய கணிமேதாவியார்க்கும் ஒரு தமிழ்முத்தம் தந்தோம்.

அவர்க்கும், நமக்கும், யாவர்க்கும் இன்பம் தரும் நம் தமிழுக்கு இஃது ஏழாவது முத்தம்.

முத்தங்கள் தொடரும்.