தொடர்கள்
ஆன்மீகம்
அக்னி நட்சத்திரம் உஷார்…!! - சுந்தரமைந்தன்.

Agni star alert...!!


கோடை தொடங்கியதுமே நினைவில் வருவது பள்ளி விடுமுறை மற்றும், மாம்பழம், தர்பூசணி. இதைத்தவிர்த்து நமக்கு ஒருவித அச்சத்தைத் தருவது சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9:31 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க் கிழமை மே 28 ஆம் தேதி மாலை 4:37 மணிக்கு முடிவடைகிறது.
அக்னி நட்சத்திர காலம் என்பது, முன்னோர்களின் வானியல் கணக்கின் படியும், ஜோதிட முறைப்படியும் பூமத்திய ரேகைக்கும், கடகரேகைக்கும் நடுவில் சூரியன் பயணிக்கும் காலம், புவி மையக் கோட்பாட்டின் அடிப்படையில், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து ரோகிணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் வரை சூரியன் பிரவேசிக்கும் காலம். அக்னி நட்சத்திரத்தில் முதல் ஏழு தினங்களில் மெதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் அடுத்த ஏழு தினங்கள் அதிக அளவில் வெப்பம் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சித்திரை வைகாசி மாதங்களில் பூமியானது சூரியனுக்கு மிக அருகில் செல்வதால் வெப்பம் அதிகமாக இருக்கும் என அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக தற்போது ஒரு மாதம் முன்பாகவே வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மே மாதம் அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வானிலை ஆய்வு மையம் கூற்றின்படி அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் நான்கு நாட்களாகவே வெய்யிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

Agni star alert...!!

அக்னி நட்சத்திரத்திற்கு மருத்துவர்கள் ஆலோசனைகள்:
அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்கக் குளிர்ச்சி தரும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிக கார உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வெயிலில் அலைவதை முடிந்த அளவுக்குத் தவிர்க்க வேண்டும். கடும் வெயிலில் செல்லவேண்டுமென்ற கட்டாயம் ஏற்பட்டால் காலுக்கு நல்ல இதமான சூட்டைத்தாங்கும் காலணிகள் அணியலாம், தலைக்குத் தொப்பி வைத்துக் கொள்ளலாம், கண்களைச் சூரிய வெப்பம் தாக்காமல் இருக்க, குளிர் கண்ணாடிகளை அணியலாம். அவ்வப்போது, தண்ணீரைக் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும். செயற்கை பானங்களைக் குடிப்பதைவிட, நீர்மோர் குடிப்பது, இளநீர் மற்றும் நுங்கு போன்ற உடலுக்குக் குளிர்ச்சி தரும் இயற்கை பானங்களைப் பருகலாம், கோடையில் நம் உடலில் நீர்ச்சத்து எப்போதும் நிறைவாக இருப்பதை, உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் கூறும் ‘கர்ப்ப ஓட்டம்’:
சித்திரை மாத அக்னி நட்சத்திர வெயிலில் வயலில் வெடிப்புகள் தோன்றி அடுத்து வரும் மாதங்களில் அடிக்கும் காற்றினால் பூமியின் மேல் உள்ள இலைகள், சருகுகள் மற்றும் பிற குப்பைகள் அனைத்தும் வெடிப்புகளுள் நுழைந்து தங்கி விடும். பிறகு வரும் மழைக் காலங்களில் வெடிப்புகள் மூடப்பட்டு உள் நுழைந்த அனைத்தும் உரமாகி மண் வளம் பெறும். இதனைத் தான் ‘கர்ப்ப ஓட்டம்’ என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

வழிபாடுகள்:
தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அக்னி நட்சத்திர நாட்களில் உள்ள முருகர் ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் செய்கிறார்கள். சிவன் அக்னியின் அம்சம் என்பதால் சிவன் வழிபாடு செய்யப்படுகிறது. அம்மை போன்ற வெப்பு நோய்கள் வராமல் இருக்க அம்மன் கோயில்களிலும் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
சில கோயில்களில் விசிறி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்ச்சாதம் கொடுப்பது வழக்கம்.
வீடுகளில் அக்னி நட்சத்திர வெப்பம் தணிக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீரைக் கொண்டு வீட்டைத் தூய்மை செய்தும், உஷ்ண நோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்பு.

Agni star alert...!!

நாமும் வரும் அக்னி நட்சத்திர நாட்களில் எச்சரிக்கையுடனும், தகுந்த பாதுகாப்புடனும் இருப்போம்!!