தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 1 "ரெட் இங்க்கா? ப்ளூ இங்க்கா?" - மோகன் ஜி

20240219211618823.jpg

நடந்தது இதுதான்.

அப்போது மாசமாக இருந்த என் மன்னிக்கு போஷாக்குக்காக 'டெக்ஸாரஞ்ச்' என்று ஆரஞ்சு சுவையுள்ள டானிக்கை டாக்டர் குடிக்கச் சொல்லியிருந்தார். ஆரஞ்சு சுவையுடன் அந்த டானிக் நன்றாகவே இருக்கும்.

அதுவும் நான் கமலா ஆரஞ்சு என்றால், காதை அறுத்துக் கொள்ளும் உபாசகன். அவ்வப்போது டெக்ஸாரஞ்சில் ஒரு ஸ்பூனை நானும் எடுத்து வாயில் விட்டு சுவைத்திருக்கிறேன்.

அப்போது மதறாசில் முதல் வருஷம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். டேர்ம் லீவில் ஒரு மாதத்தில் மீண்டும் கடலூருக்கு நான் வந்திருந்த சமயம்தான் ஒரு களேபரம் நிகழ்ந்தது.

அலமாரியில் தென்பட்ட அதே 'டெக்ஸாரஞ்ச்' பாட்டில் மீண்டும் என்னைப் பார்த்து கண்சிமிட்டியது.

அதை ருசிக்க ஒரு ஸ்பூனை எடுத்து வரும் பொறுமையில்லை. அப்படியே அண்ணாந்து கொஞ்சம் வாயில் கவிழ்த்துக் கொண்டு, உத்தேசமாக ஒரு ஸ்பூன் அளவில் நிறுத்திக் கொள்ளலாம் என்றுதான் டானிக் பாட்டிலை எடுத்தேன்.

பாட்டிலின் மூடியைத் திறந்தேன். மோட்டுவளையைப் பார்த்தபடி பாட்டிலை உயர்த்தினேன்.

கொஞ்சம் அடர்த்தியான கூழாகத் தான் அந்த டானிக் இருந்ததாக கவனம். எனவே கொஞ்சம் தாராளமாகவே வாயில் கவிழ்த்துக் கொண்டேன்.

அடடா.. என்ன இது... உள்ளிருந்த வஸ்துவானால் லொடக்கென்று திரவமாக என் வாயை நிரப்பி, கொஞ்சம் மூக்குக்குள்ளும் போய்விட்டது. கொஞ்சம் கடுப்பாகவும் வித்தியாசமான நெடியுடனும் இருந்தது. யோசிக்கும்முன் விழுங்கியும் தொலைத்து விட்டேன்.

வாய் கசந்து தொண்டையும் கமறுகிறது.

'என்னாச்சு?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தாள் மன்னி.

நானோ, டானிக் பாட்டிலை உயர்த்திப் பிடித்தபடி வாயில் இரத்தச் சிகப்பாக வடிய, 'வசந்த மாளிகை' சிவாஜி போல் கண்கள் சொருக நின்றிருந்தேன் .

நொடியில் நான் செய்த காரியத்தைப் புரிந்து கொண்டாள். ''அய்யய்யோ! ரெட் இங்க்கை குடிச்சுத் தொலைச்சிருக்கீங்க மோகன்!"

" ழெட் இழ்ங்க்கா?! இழுல எப்புழி!" என்று பாட்டிலைக் காட்டினேன். கண்களில் சிவாஜி மிச்சம் இருந்தார்.

" சொல்றேன். மொதல்ல வாயை நல்லா கொப்பளிச்சுட்டு வாங்க ! அட ஈஸ்வரா!"

கிணற்றடிக்கு ஓடினேன். வாய் கொப்பளித்து கொப்பளித்து தாடையெல்லாம் வலிக்க ஆரம்பித்து விட்டது. துப்பிய தண்ணீரோ வெட்கிச் சிவந்தபடியேதான் வந்து கொண்டிருந்தது. மூக்கிலேறிய இங்க்கின் காறல் வேறு.

"என்ன மோகன்? கொஞ்சம் வாய்க்குள்ள விட்டுக்கிட்டவுடனேயே டேஸ்ட் தெரியலையா? சட்டுன்னு துப்பியிருக்கலாமே? இப்படி பண்ணி வச்சிருக்கீங்களே?"

"இல்லே மன்னி! டேஸ்ட் வித்தியாசமாகத் தோணின உடனே வெளிய தள்ளறதுக்கு பதிலா உள்ளே தள்ளிட்டேன். கசப்பாத் தான் இருக்கு”

‘சே! ரூமுக்குள் போனவன் தலையை மட்டும் வாரிக் கொண்டு வந்திருக்கக் கூடாதோ? டெக்ஸாரஞ்சுன்னு நினைச்சு இங்க்கையா ஒருத்தன் குடிப்பான்?’....தனக்குத்தானே தட்டிக்கொண்டேன்.

ஶ்ரீராமிடம் அவன் வீட்டுக்கு வருவதாக வேறு சொல்லியிருந்தேனே? பார்த்தா ‘ரெட் மவுத் மோகா!’ன்னு பேரும் வச்சுடுவானே? டெக்ஸாரஞ்சு பாட்டிலில் ரெட் இங்க் எப்படி வந்தது? இந்த வீட்ல யாருக்காவது பொறுப்பிருக்கா?

ஒரு வழியாக வாய் கொப்பப்பப்பப்பளித்து உள்ளே வந்தேன்.

"இந்த பாட்டிலிலே யார் ரெட் இங்க்கை கொட்டி வச்சது?" என்று கேட்டுப் பெற்ற பதில் ஆயாசம் தந்தது.

ஏதோ ஐந்து லிட்டர் கேன் பினாயிலை உபயோகப் படுத்த பெரிய பாட்டில் வேண்டியிருந்ததால், பிரில் ரெட் இங்க் பெரிய பாட்டிலில் பாதியளவு இருந்த இங்க்கை, காலியாக இருந்த டெக்ஸாரஞ்ச் பாட்டிலைக் கழுவி, அதில் மன்னி கொட்டி வைக்க.... அதை நான் வாயில் கவிழ்க்க... வாய் சிவக்க.. தொண்டை கமற….

"ஏதாவது பண்ணுதாடா?" என்று விசாரித்தாள் அம்மா.

அவள் குரலில் கொஞ்சம் கவலை...

' நீயாடா பிள்ளையாண்டிருக்கே? உனக்கெதுக்கு டானிக்?' என்று கண்களில் கேள்வியுமாக நின்றாள் .

"என்ன கெமிக்கலோ தெரியலையே? எதுக்கும் டாக்டரைப் போய் பார்த்துடுங்க மோகன்'' இது மன்னி.

"இப்போ டாக்டர் இருக்க மாட்டாரே! சாயங்காலம் தான் போகணும்" என்றேன் கண்ணாடியில் வாயைப் பரிசீலித்தபடி…. இது தான் செவ்வாயா? கருமம்...

"சின்ன விஷயம் தானே? நம்ம ஜி. எச் லயே ஒரு எட்டுப் போய் காமிச்சுடேன்"என்றாள் அம்மா.

" இதுவரை பார்த்திராத 'ஜி. எச்'சில் கால் வைத்தேன் . கூட்டமில்லை. டாக்டர் சேம்பருக்குள் போனேன்.

"என்ன தம்பி!" என்று வினவினார் முரட்டுப் பார்வையுடன் ஒரு டாக்டர்.

"கொஞ்சம் இங்க் குடிச்சிட்டேன் டாக்டர்"

"பரிட்சைல பெயிலாயிட்டியா? இல்லே எதுனா லவ் மேட்டரா?"

"நீங்க கேட்கிறது புரியல்லே டாக்டர்"

" எதுக்கு சூயிஸைட் முயற்சி செய்தேன்னு கேட்கிறேன்?"

இது வேறயா! நடந்ததை விலாவாரியாக விளக்கினேன் . அவர் நம்பினாற் போலத் தெரியவில்லை .

" எப்படியோ போ! பயப்பட ஒண்ணுமில்லே. ரெண்டு நாளைக்கு மூத்திரம்தான் கலராப் போவும்.

ராத்திரி வரைக்கும் எதுவும் ஆகாரம் சாப்பிடாதே.. தண்ணியா குடிச்சுகிட்டு இரு. வாயில் விரல்விட்டு வாந்தி எடுக்கப் பாரு... தலைசுத்தல் மயக்கமெல்லாம் இல்லையே?"

"அதுல்லாம் ஒண்ணும் இல்ல டாக்டர்"

"இப்போ மருந்தெல்லாம் தரல்லே. பிரச்னை இருந்தா நாளை காலைல வா! இதுல்லாம் போலீஸ் கேஸாயிடும்" என்றார் முரடர்.. ஸாரி டாக்டர்...

என் கையிலிருந்த ஓபி சீட்டையும் வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பி வைத்தார்.

வீட்டுக்கு வந்தேன்.

"ஒண்ணுமில்லேன்னு டாக்டர் சொல்லிட்டார்ம்மா!" என்று இங்க் அத்தியாயத்தை முடித்தேன் .

" மன்னி! குடிக்க எதாவது குடுங்களேன்"

"சரி மோகன். என்ன தரட்டும்?

ரெட் இங்க்கா? ப்ளூ இங்க்கா?"

2024021921234459.jpg