தொடர்கள்
கதை
பொய் - சுஶ்ரீ

20240222214334558.jpg

இந்த கலிகாலத்து அரிச்சந்திரன் நான், எனக்கென்ன தெரியும்
பொய் பற்றி, இந்த 45 வருஷமா, என் வயசு 45 நம்புங்க, அப்பறம் எப்படி போன தடவை ரிடயர்மெண்ட் பத்தி ஏதோ எழுதி இருந்தேனு கேக்கறீங்களா?அது சும்மா உளவளாய்க்கு. வேடிக்கையா எழுதினா, அதெல்லாம் பொய்யா என்ன.

ஸ்கூல்ல சேர ஒரு வயசு கூடக் கொடுத்தா அது பெரிய பொய்யா, அதுவும் அப்பாதானே கொடுத்தார். ஸ்கூலுக்கு கொஞ்ச தூரம் அந்த அந்த சிக்னல் தாண்டி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கே அதுக்கு அந்த வயசுலயே வெள்ளிக் கிழமை தோறும் போவேன். பிள்ளையாருக்கும் வெள்ளிக்கிழமைக்கும் என்ன தொடர்புன்றீங்களா? தோண்டித் துருவி எல்லாத்தையும் கேக்கப் படாது.அப்பறம் நான் ஏதாவது சொல்ல பொய் சொல்றேன்கறது , எனக்கு பொய் பிடிக்காது.

இந்த சந்திரா தியேட்டர்ல வெள்ளிக்கிழமை தோறும் ஒரு படம் மாத்துவான் .தியேட்டர் வாசல்ல பெரிய போஸ்டர் வைப்பாங்க.ஹீரோயின் படம் போஸ்டர்ல பாக்கவே கூட்டம் கூடும்.நான் சின்னப் பையன் 8வது படிக்கறேன் எனக்கு அதுல எல்லாம் இண்டரஸ்ட் இல்லை. தியேட்டர் பக்கத்துலதான் நான் சொன்ன பிள்ளையார் கோவில். அச்சோ உடனே முடிச்சுப் போட்டுடாதீங்க அந்த போஸ்டர் பாக்கதான் வெள்ளிக்கிழமை கோவில் போறேன்னு. அது ஒரு கொயின்சிடன்ஸ் அவ்வளவுதான்.சீ இந்த வாரம் போஸ்டர் படு மோசம், ஒரு கவர்ச்சி நடிகை ரெண்டு கையை கீழே ஊனிண்டு தலையை உயர்த்தி சிரிக்கற மாதிரி நான் முகத்தை பாக்கவே இல்லை, அச்சோ i mean அந்த போஸ்டர் நடிகையை பாக்கவே இல்லை.
அட எங்க ஹிந்தி சாரும் அங்கே சைக்கிளை சாச்சு நின்னுண்டு
உத்து உத்து பாக்கறதைப் பாரு வெக்கமில்லாம.

ஐய்யோ திரும்பறப்ப என்னை பாத்துட்டார் நான் சட்னு திரும்பி பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போட்டேன். பூசாரி காட்டின கற்பூரத் தட்டுல இருந்து வீபூதி வச்சிண்டு அரச மரம் சுற்றி வந்தேன். கொஞ்சம் தள்ளிப் போயி என் ஒரு டைம்டேபிள் எழுதின நோட் புக்கை எடுத்து ஹிந்தி கிளாஸ் இருக்கானு செக் பண்ணி பாத்தேன். லன்ச்சுக்கு முன்னால இந்த ஹிந்தி பீரியட்தான்.எதாவது கேட்டா எப்படி சமாளிக்கறது எனக்கோ பொய் சொல்லத் தெரியாது.

சரியா அன்னிக்கு ஹிந்தி பீரியட் முடிஞ்சவுடனே என்னை கூப்பிட்டார். “ ஏண்டா அந்த போஸ்டர் பாத்தயா அது மலையாளப் படமா, தெலுங்குப் படமா அந்த கண்றாவி போஸ்ல நடிகையைப் பாத்தேன் படம் பேரு பாக்கலை.”

“எது சார் கோவில் வாசல்ல வச்சிருந்தாளே, சதுர்த்தி உற்சவ விசேஷம் யாரோ கணபாடிகள் கதா காலட்சேபம்னுனா போட்டிருந்தா கொட்டை எழுத்துல, அந்த கணபாடிகளோட படம் பெரிசா இருந்தது மார்ல எல்லாம் வெள்ளை முடியோட விபூதியெல்லாம் தொப்பைல பூசிண்டு அதுவா”

“ போடா மண்டு பொய்சொல்லாம சொல்லு வெள்ளை முடியோடயா பாத்தே”

“ஆமாம் சார் ரொம்ப வயசானவர் போல இருக்கு”

“ படவா சண்டே உங்க வீட்டுப் பக்கம் வருவேன் உங்கப்பன் கிட்ட போட்டுக் கொடுக்கறேன் நரைச்ச முடியா பாத்தே”

“சார் ஏதோ தப்பா புரிஞ்சிண்டிருக்கீங்க நான் ஏன் பொய் சொல்லணும்.”

கிளாஸ்மேட் மகேந்திரன் செவ்வாக்கிழமை ஸ்கூல் கட் அடிச்சு
சந்திரா டாக்கீஸ் படம் பாக்க போனானா பால்கனி டிக்கட் வரிசைல ஹிந்தி வாத்யாரை பாத்தானாம்.பாருங்களேன் காலம் கெட்டுப் போச்சு பசங்கதான் ஸ்கூல் கட் அடிச்சு படம் பாக்க போறாங்கன்னா வாத்யாருமா, சிவ,சிவா.

உங்களுக்கு காலேஜ் லைப் பத்தியெல்லாம சொல்லக் கூடாது, அப்பறம் நான் சகோதர பாசத்தோட பழகின பெண்கள் பேரையெல்லாம் சந்தி சிரிக்க வச்சிடுவீங்க. நளினியை பாசமலர் படம்னு நினைச்சுதான் ஷில்பா தியேட்டருக்கு மாட்டினி ஷோ கூட்டிண்டு போனேன்.

கடங்காரப் பசங்க ஸ்பெஷல் ஷோனு சொல்லி அந்த இங்லீஷ் படம் போட்டுட்டான். அதுல அந்த ஹீரோவும், ஹீரோயினும் படு மோசம்.பப்ளிக்காவே எல்லாம் பண்றா.நளினி என்னடா இவ்வளவு இருக்கா லவ் பணறதுன்னானு கேட்டா. என்னத்தை சொல்றது காலம் கெட்டுப் போச்சு இதைப் பாக்க வெக்கமில்லாம இத்தனை கூட்டம் ஜோடி போட்டுண்டு.

இதுல என்ன பிராப்ளம் ஆச்சுன்னா படம் முடிஞ்சு வரப்ப சுரேஷ் பாத்துட்டான். “ டே என்னடா ரெண்டாவது வாட்டியா? மூணு நாள் முன்னாடிதானே பாத்தே ரமாவோட”

அசால்டா கேட்டுட்டு நடந்து போயிட்டே இருக்கான், நளினி ஒரு முறை முறைச்சிட்டு ஒரு ரிக்‌ஷா பிடிச்சு ஏறிப் போயிட்டா. என் கிட்ட கேட்டிருந்தா உண்மையை சொல்ல மாட்டேனா. உண்மைல என்ன ஆச்சுன்னா ரமா அவதான் எங்க வீட்டு எதிர் வீட்டுப் பொண்ணு, சிவாவோட தங்கைங்க.

அவ ரொம்ப நாளா புதுசா கட்டி இருக்கற ஷில்பா ஏ.சி. தியேட்டர்ல படம் பாக்கணும்னு சொல்லிண்டிருந்தா. சரி ‘மணாளனே மங்கையின் பாக்யம்’ ஸ்பெஷல் மாடினி ஷோனு எங்கேயோ தப்பா படிச்சிட்டு கூட்டிண்டு போனா இதே கண்ராவி படம்.

என்ன பண்றது யாரு உண்மை சொன்னா நம்பறா உலகத்துல, பொய் சொல்றவங்களுக்குதான் காலம், கடவுள்தான் என்னை பொய்யே சொல்லத் தெரியாதவனா படைச்சிட்டானே.