தொடர்கள்
அனுபவம்
சந்திப்போம் , பிரிவோம் -1 - பொன் ஐஸ்வர்யா

20240221111023292.jpg

அமெரிக்க அனுபவங்கள்.

இதுவரை யாரு எழுதாத அமெரிக்க அனுபவமா இருந்தாலும் ஒவ்வொரு முறை ஒவ்வொருவரின் கோணத்தில் எழும் புத்தம் புது அனுபவம் பயணக் கட்டுரைகள்.

அமெரிக்க மண்ணில் சில மாதங்கள் தங்கி , அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை நேரில் காணும் அரிய வாய்ப்பு எனக்கு அமைந்தது . பல இடங்களை பார்த்து ,ரசித்து பெற்ற பயண அனுபவங்களை ‘விகடகவி’ வாசகர்களுடன் தொடர்ந்து பகிர்வதில் மகிழ்கிறேன்

தினெட்டு மணி நேரம் தொடர்ந்து பறந்த ஏமிரேட்ஸ் போயிங்-777 பறவை, முன்னூற்றிருபது பேரை முதுகில் சுமந்தபடியே வேகத்தையும் உயரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொண்டே றெக்கையை ஒருபுறமாய் சரித்து, அர்லாண்டோ நகரில் கால் வைக்கலாமா என ஏர் டிராஃபிக் கன்ட்ரோலரிடம் அனுமதி கேட்டது.

காலை பத்து மணி வெயிலில் அமெரிக்கா பளிச்சென்று தெரிந்தது. தரையில் முதலில் தென்பட்டது நூல் பிடித்தது போன்ற நேர்கோட்டில் அமைந்த இன்டர்ஸ்டேட் ஹைவே -பல்வழிச்சாலைகளும் அதில் பறக்கும் கலர் கலரான கார்களுமே.

ரையிறங்கிய விமானத்தில் ஏரோபிரிட்ஜ் இணைய சற்று தாமதமானது. அதுவரை பெல்ட் அணிந்து, இருக்கைகளில் அமர்ந்து பொறுமை காத்த வந்த பயணிகள், விமானியின் எச்சரிக்கையைப் புறக்கணித்து கூட்டமாய் எழுந்து நின்று சோம்பல் முறித்து பெருமூச்சு விட்டனர்.

விமானக் கதவுகள் திறந்ததும் இறங்கி நடந்தால், நடக்க நடக்க பாதை வளைந்து வளைந்து போய்க் கொண்டே இருந்தது. முதியவர்களுக்கு உதவ சக்கர நாற்காலிகளோடு வரிசை கட்டி காத்திருக்கும் ஏர்லைன்ஸ் பணியாளர்கள். நம் கூடவே பயணித்தவர்களில் இத்தனை பேர் நடக்க முடியாதவர்களா..? மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர் தூரம் நடந்ததும் கன்வேயர் பெல்ட் கண்ணில் பட்டது. வாசல் வரை லக்கேஜ் எடுத்துச் செல்ல பயன்படும் "ட்ராலி" இந்த விமான நிலையத்தில் இலவசம் இல்லையாம். ஏழு அமெரிக்க டாலர்களை எண்ணி மெஷினில் சொருகியப் பிறகுதான் அடுக்கி வைத்திருந்த ட்ராலிகளில் ஒன்று அசைந்து கொடுத்தது.

ஸ்டம்ஸ், குடியுரிமைச் சோதனைகள் முடிந்து, தானியங்கி கண்ணாடிக் கதவுகளைக் கடந்து வெளியே வந்து, அமெரிக்கக் காற்றை நிதானமாய் சுவாசித்ததும் படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது.. அமெரிக்க AT&T டவரின் சிக்னலை சுவாசித்த மொபைல் போன் உயிர்பெற்றது. வாசலில் "சப்வே" பர்கர் கடையில் சுடச்சுட பொரித்த சிக்கன் வாசனை மூக்கைத் துளைத்தது.

மெரிக்க சாலைகளில் எப்பொழுதும் இடைவெளி இல்லாத கார்களின் ஊர்வலம். அங்காங்கே மணிக்கு எழுபது மைல் அதிகபட்ச வேகக் கட்டுப்பாட்டு எச்சரிக்கை பலகைகள் இருந்த போதிலும் வாகனங்கள் என்னவோ குறைந்தது எழுபத்தைந்து மைல் வேகத்தில்தான் காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தன. நம்ம ஊர் கிலோமீட்டர் கணக்கில் மணிக்கு நூற்று முப்பது கிலோமீட்டர் வேகம். யாரும் ஹாரன் அடிப்பதில்லை, ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு முந்தவில்லை. வாகனங்கள் அங்கிமிங்குமாய் சாலையை அலசவுமில்லை. அவரவர் லேன்களில் அவரவர் பயணம் என்பதில் உறுதியான நிதானம் தெரிந்தது.

இந்த ஊர் சாலைகளின் சிறப்பே அதன் லேன் (Lane) சிஸ்டமும் அவற்றில் மிகத் துல்லியமாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கைக் குறியீடுகளுமே. சாலையில் இறங்கி ஒரு லேனைப் பிடித்து விட்டால் இரயில்வே ட்ராக்கில் பயணிப்பது போல நாம் சேர வேண்டிய இடத்திற்கு கூகுள் துல்லியமாய் வழி சொல்லி அழைத்துச் சென்று சேர்த்து விடும். நெடுஞ்சாலைப் பாராமரிப்பு ஒரு மகத்துவமான இன்ஜினியரிங் என்பது இங்கு வந்த பிறகுதான் புரிகிறது.

சீறிப் பாயும் கார்களோடு சரி நிகராய் சீரான இரைச்சலோடு இழைந்து ஓடும் நீண்ட முரட்டு டிரக்குகள். ஜீ.பி.எஸ் பெண்ணின் கட்டளை குரலுக்கு ஸ்டேரிங் திருப்பும் ஸ்மார்ட் டிரைவர்கள். இங்கு ஜீ.பி.எஸ் மிகத் துல்லியமாய் வழிகாட்டுவதோடு செல்ல வேண்டிய லேனைக் குறிப்பிட்டுத் எச்சரிக்கைத் தந்து விளக்கமான வழிகாட்டுதல் மிகவும் சிறப்பு. மேலும் செல்லுகின்ற இடம், மால், மார்கெட், பார்க் அல்லது அலுவலகம் எத்தனை மணி வரை திறந்திருக்கும் போன்ற கூடுதல் தகவல்களையும் ஜீ.பி.எஸ் முன்கூட்டியே தானாகவே சொல்லிவிடுகிறது.

20240221111128125.jpg

ர்லாண்டோவிலிருந்து டாம்பா செல்ல ஐ-4 ஹைவே எடுத்து, சுமார் எழுபத்தைந்து மைல் தாண்டி, ஐ-75 ஐ பிடித்து, ப்ருஸ்பி புலேவரில் கவனமாய் இறங்கி, இடது புறம் திரும்பினால் நியூ டாம்பா புலேவர். "புலேவர்" (boulevard) என்பது பெரிய சாலைகளைக் குறிக்க இங்கு பயன்பாட்டில் இருக்கும் பிரென்சு வார்த்தை. "டாம்பா" புளோரிடா மாகாணத்தில் கடற்கரையை ஒட்டிய மாநகரம். நியூ டாம்பா புலேவரில் சற்று தூரத்திலேயே போர்டோஃபினோ டிரைவ் (Fortofino drive). குட்டிச் சாலைகளை “டிரைவ்” என்கிறார்கள்.

20240221111230727.jpg

யர்தரமான பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கு இலவசம், போக்குவரத்திற்கான சிறந்த பேருந்து வசதியோடு. பள்ளிகளில் அமெரிக்க சிட்டிசன் குழந்தைகள், அன்னிய நாட்டுக் குழந்தைகள் என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான சலுகைகள். பள்ளி வாகனங்களுக்கு சாலைகளில் எப்பொழுதும் முதல் மரியாதை. பள்ளிப் பேருந்து வந்து நின்றால் குழந்தைகள் ஏறி இறங்கி சாலையைக் கடக்கும் வரை, சாலையின் இருபுறமும் எல்லா விதமான வாகனப் போக்குவரத்தும் மொத்தமாய் ஸ்தம்பித்து நின்று பள்ளிக் குழந்தைகளுக்கு வழி விடுவதைக் காண்பதே ஒரு பேரழகு.

இன்னும் பல அமெரிக்க சுவாரஸ்யங்களைத் தொடர்ந்து பேசுவோம்

- பயணம் தொடரும்