தொடர்கள்
கவிதை
சுழல்தகவு - ராகவன் ஸாம்யெல்

2024022112251646.jpeg

பூத்து பிஞ்சுவிட தொடங்கியிருந்தது
ஒரு வயசாளி மா
மற்ற ‘மா’க்கள் பூக்களில்
சோபையைக் காட்டிக்கொண்டிருந்தது
வெய்யல் காலங்களில் அதிகம் மினுக்கும்
தளிர்களிலினூடே தாவி மறையும்
குட்டிகளை சுமந்தபடியும் அல்லாததுமாய்
குரங்குகள்;
மிதந்து வரும் சிறகுகள்
பறக்கும் உயர்த்தும் இசைகோர்வை.
பூப்பதின் காய்ப்பதின் செய்தியை
யாரோ உரக்க வாசிக்கிறார்கள்
திரும்ப திரும்ப.
எங்கிருந்தோ வந்து சேரும்
எல்லாவற்றிற்குமான செயற்களம்
மரம்  விட்டு மற்றொரு மரத்திற்கு
குட்டி ஒன்று தாவுகையில்
உலகு தழுவி சரிந்தது அந்த வயசாளி மா
பதறிப்பறந்தன புள்கள்;
அழன்று பெயர்ந்தன அகவிளி உயிர்கள்
சமன்பாட்டின் சிறுகுலைவு.
தன்னை சேகரித்துக் கொள்ளும்,
பிரபஞ்சம்!

அறுந்த காம்புகளில் இன்னும் பால்கசிவு
மண்ணுக்குள் மறைந்திருந்த
நாவுகளின் சுவாசப்பெயர்வு அது
ஹோவென்று விழுந்த நிழல் பொத்தல்
நோவா மூழ்கிய துயரத்தின் உடைப்பு.
விரித்த கரங்கள் தாழவில்லை,
மீட்க மறந்த மேய்ப்பன்.
இருந்தும், பல்லுயிர் ஊட்டியவளின்
எச்ச அடுக்கில் எழும்பும்,
குரங்கு தாவ மற்றுமொரு கொம்பு.