தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் - 16 - பத்மா அமர்நாத்

2024022114340787.jpg

“You can tell the condition of a nation by looking at the status of women” - Nehru.
பெண்களின் நிலையைப் பார்த்தே, அந்நாட்டின் நிலையைச் சொல்ல முடியும், என்றவர் நேரு அவர்கள்.

சென்ற கட்டுரையில், ஷாஹனாஸ் ஹுசைனின் அறிமுகத்தைப் பார்த்தோம். இனி, அவருடைய சாதனைகளைப் பார்ப்போம். ஷாஹனாஸின் பெற்றோர்கள், சிறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். சாதாரண இல்லத்தரசி என்று வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க, அவர் விரும்ப வில்லை. முரண்பாடுகளை முறியடிக்க முடிவு செய்து, அடுத்த வருடத்திலிருந்தே, அழகுக் குறிப்பு மற்றும் ஆயூர்வேதம் சம்பந்தமாகப் படிக்க ஆரம்பித்தார். அடுத்த பத்து ஆண்டுகளில், அவர் லண்டனில் இருந்து பாரிஸ், ஜெர்மனி, டென்மார்க் முதல் நியூயார்க் வரை சென்று, அழகுக் கலை பற்றி மேலும் படித்துப் பட்டம் பெற்றார்.

1977 இல் இந்தியாவுக்குத் திரும்பியதும் ஷாஹ்னாஸ், தன் தந்தையிடமிருந்து ரூ.35,000 கடன் வாங்கி, முதல் சலூனைத் தொடங்கினார், டெல்லியில் உள்ள தனது வீட்டின் வராண்டாவைக் கிளினிக்காக மாற்றினார். “கவனிப்பு மற்றும் சிகிச்சை" “Care and Cure” என்ற முற்றிலும் புதிய கருத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், சொந்தமாக ஆயுர்வேதத் தயாரிப்புகளையும் உருவாக்கினார்.

2006 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, இந்திய அரசாங்கத்தால் உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் மூலம், வணிக விளம்பரம் இல்லாமல் ஒரு சர்வதேச பிராண்டை நிறுவியதன் வெற்றிக் கதையைப் பற்றிப் பேச, அவர் அழைக்கப்பட்டார்.
மேலும், ஹாவர்டின் பாடத்திட்டத்தில் இவருடைய சாதனை, ஹார்வர்ட் கேஸ் ஸ்டடியாகவும் பதிவாகி உள்ளது. 1996 இல், ‘சக்ஸஸ் மேகஜீன்’ (Success Magazine) வாயிலாக, "உலகின் தலைசிறந்த பெண் தொழிலதிபர்" விருதை வென்றார்.

இது எல்லாவற்றிற்கும், சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் தான் அடிப்படை.

இதை அடுத்து,
நாம் வளர்த்துகொள்ள வேண்டிய ஆற்றல்….

4.Empathy - பிறர் நிலையை உணர்தல், பச்சாதாபம்.

Empathy is a Universal solvent. பச்சாதாபம் ஒரு உலகளாவிய அரு மருந்து.

பச்சாதாபம் என்பது மற்றவர்களின் உணர்ச்சிகளை அடையாளம் காணும் திறன் மற்றும் எந்த ஒரு சூழ்நிலையிலும், மற்றவர்களின் பார்வையைப் புரிந்துகொள்வதாகும். பச்சாதாபம் பெரும்பாலும் அனுதாபமாகக் கருதப்படும். ஆனால் இரண்டும் வெவ்வேறு.

20240221144329118.jpg

வார்பி பார்க்கர் (Warby Parker) என்ற மூக்கு கண்ணாடி நிறுவணத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி, நீல் புளூமென்டல் (Neil Blumenthal), பிறர் கண்ணோட்டத்தில் இருந்து விஷயங்களைப் பார்ப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டவர். அவருடைய அனுபவத்தை, ஒரு நாளிதழில் பகிர்ந்துள்ளார்.

“வங்காளதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நெசவாளர்களின் சமூகம் ஒன்று உள்ளது. அவர்களுக்குப் பார்வைக் குறைபாடு இருப்பது எனக்குத் தெரியும், ஆனால் ஒருவர் கூட கண்ணாடி அணியவில்லை. 'பார்ப்பதில் சிரமம் இருந்தால் கையை உயர்த்துங்கள்' என்று சொல்வேன். யாரும் கையை உயர்த்த மாட்டார்கள்.

மீண்டும் அவர்களிடம் 'ஊசியில் நூல் கோர்ப்பதில் சிரமம் இருப்பவர்கள், கையை உயர்த்துங்கள்' என்றேன். எல்லோரும் தங்கள் கைகளை உயர்த்தினார்கள்.
இதன் சாராம்சம், எதிராளியிடம் சரியான கேள்வியைக் கேட்கத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.

அதாவது, உங்கள் ஆணவத்தை ஒதுக்கி வைத்து, நம் அணுகுமுறை, எப்படிப் பட்ட உணர்வை ஏற்படுத்தும், என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்தவர் நிலையிலிருந்து பார்ப்பதும், பிறர் உணர்வுகளை மதிப்பதிலும் தான் நம்முடைய ஆளுமை வெளிப்படும். இதைக் கடைபிடித்தால், என்றைக்குமே, பிறர் விரும்பும் நபராக நாம் இருப்போம்.

5.Social skills - பொதுத் திறமை.
உணர்வு நுண்ணறிவால், நாம் சம்பாதிக்கும் நன் மதிப்பு மற்றும் நண்பர்களால், நம் வேலை எளிதாக முடியும். பொதுவான சமூகத் திறன்களை வளர்த்துகொள்வதன் மூலம், மற்றவர்கள் மீது நாம் செல்வாக்கை செலுத்தலாம். ஒரு முடிவை எடுக்கவோ, அல்லது தான் நினைத்த வேலையைச் சாதிக்கவோ, தனக்கிருக்கும் பொதுத் திறமையால், பிறரைச் சமாதானப்படுத்தப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

1205 இல், தில்லி சுல்தான் இல்துமிஷின் மகளாகப் பிறந்தவர் ரஸியா சுல்தானா. 1236ல், டில்லி சுல்தானகத்தின் பெண் ஆட்சியாளரானார். அக்காலப் பாலின விதிமுறைகள் காரணமாக, அவரது ஆட்சி, பழமைவாத அமைப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. சுல்தானாக இருந்தாலும் கூட, அவர் முன்வைக்கும் சில மாற்றங்கள், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்த வேறுபாட்டை, முற்றிலுமாக எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து, தன் பொதுத் திறமையால், தன்னைச் சுற்றி உள்ளவர்களைச் சமாதானப் படுத்தி, பாரம்பரியத்தைக் காப்பாற்றியவாரே, திறமையான நிர்வாகத்தையும் சமநிலைப்படுத்தினார்.

20240221143615570.jpg

ரசியா தனது ராஜ்ஜியத்தில் பொது நூலகங்கள் மற்றும், பள்ளிகளைத் திறந்து வைத்து, உயர் பதவிகளில் கல்வியாளர்களை நியமித்தார். மதம் சார்ந்த படிப்புகளைத் தவிர, வேறு பாடங்களை மேம்படுத்துவதையும் உறுதி செய்தார். நிர்வாக சீர்திருத்தங்களை நோக்கி அவர் பணியாற்றினார்.

இது, இந்திய வரலாற்றில், அவரை ஒரு குறிப்பிடத்தக்க நபராக மாற்றியது.

ஆக, உணர்வு நுண்ணறிவின் (emotional intelligence) கீழ்,
Self awareness- உங்களை நீங்கள் பகுத்தாய்வு செய்தல்,
Self regulation- உங்களை நீங்கள் சமன் படுத்திக்கொள்வது,
Motivation - உந்துதல்,
Empathy - பிறர் நிலையை உணர்வது,
Social skills - பொதுத் திறமை, ஆகியவை இடம்பெறும்.

பெண்கள் சுய அதிகாரம் பெற்றுத் திகழ, புத்தக வாசிப்பு, தன்னை அறிதல், பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் உணர்வு நுண்ணறிவு ஆகிய திறமைகளைத் தொடர்ந்து, அடுத்து வருவது, தகவல் பரிமாற்றம் - communication..

தொடர்ந்து பேசுவோம்...