தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 16 - ரேணு மீரா

20240005110849259.jpg

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்கும் கயிறு.

குறள்- 482

என்ற திருக்குறளின் குரலுக்கேற்ப தங்கள் பிள்ளைகளை கால மருந்து செயல்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு பயிற்சிகள் தேவை, இவ்வகையான பயிற்சிகளை இப்போது பார்ப்போம்.

நேரத்தை வீணாக்குகிற அம்சங்களை பற்றிய தெளிவு இருந்தால் நேரத்தை சரியாக பயன்படுத்த முடியும். முதலில் பெரியவர்களுக்கு ஒரு பட்டியல் போட்டு கொள்வோம்.

1. திட்டமிடாத சந்திப்புகள்

2. மனச்சோர்வினால் சுறுசுறுப்பின்மை.

3. சிறிய காரியத்தில் கூட முடிவெடுக்க தயக்கம் காட்டுதல்.

4. அவசியம் இல்லாத அவசரம் இல்லாத நீண்ட தொலைபேசி உரையாடல்கள்.

5. இயன்ற பணிகளையும் பொறுப்புகளையும் பிறருடன் குறிப்பாக பிள்ளைகளுடன் பகிர்ந்து அளிக்கும்போது நேரம் சேமிக்கப்படுகிறது என்ற உணர்வு இருத்தல் வேண்டும்.

6. தேவையில்லாத முக்கியமில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தி அதை பற்றி நினைத்துக் கொண்டிருப்பது.

7. சிறியதாயினும் பெரியதாய் எனும் நம் செயல்களை முன் கூட்டியே திட்டமிடுதல் அவசியம்.

8. ஒன்று இரண்டு மூன்று என நாம் அன்றாட செயல்களை வரிசைப்படுத்தி செய்ய திட்டமிடுதல்.

இதுபோன்ற நேரத்தை விரயமாக்கும் ஒரு சில செயல்களை கவனத்துடன் குறைத்தால் ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் நம்மால் சேமிக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் கடந்த காலத்தை பற்றி சிந்தித்து அதிலேயே வாழ்வதும் எதிர்காலத்தை பற்றிய கற்பனையில் வாழ்வதும் நேரத்தை வீணாக்குகிற செயல்கள் ஆகும் என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் ( குறிப்பாக நம் குழந்தைகளை பற்றி)

குழந்தைகளிடம் இதைப் பற்றி ஒரு கதை சொல்வதைப் போல் பேசுங்கள் இரவு படுக்கச் செல்லும் போது அவர்களிடம் பேசுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு :

டேவிட், என்ற ஒரு பையன், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவனிடம் உள்ள குறை எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க மாட்டான்.

அவனிடம்” நாளை இதை செய்து வா” என ஆசிரியர் சொன்னால் ”சரி “ என்று கூறுவான், ஆனால் அதை செய்து முடிக்க மாட்டான்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை அவன் பள்ளியில் அறிவியல் பொருட்காட்சி நடக்க இருக்கிறது .ஆகையால் அவனை ஒரு அழகிய செல்போன் டவர் மாடலாக செய்து வரச்சொல்லி இருந்தார் அவனுடைய ஆசிரியர். திங்கள் கிழமை கொடுத்தால் போதும், எனவே சனிக்கிழமை செய்யலாம் என திட்டமிட்டான். சனிக்கிழமை ஊரிலிருந்து உறவினர் வந்து விட்டனர், அன்று இரவு செய்து கொள்ளலாம் என்று இருந்தான், நாள் முழுவதும் உறவினர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு இரவு ப்ராஜெக்ட் வேலையை எடுக்கும் நேரம் கரண்ட் போய்விட்டது. இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் வந்ததும் களைப்பாக இருந்ததால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தானே என தூங்கி போய்விட்டான்.

மறுநாள் காலை ஞாயிற்றுக்கிழமை மாடல் செய்யலாம் என்று உட்கார்ந்தான், டேவிட் இன் தந்தை கார் வாட்டர் வாஷ் செய்து வெகு நாளாகி விட்டது ஆகையால் இருவரும் சேர்ந்து அதை செய்யலாம் என்றார். இவனுக்கு அந்த ஓஸ் பைப்பை எடுத்து தண்ணீரை பீச்சி அடித்து விளையாடி கொண்டு காரை கழுவுதல் மிகவும் பிடிக்கும். அப்பாவே வா என்று அழைத்தவுடன் மிகவும் உற்சாகமாக சென்றுவிட்டான். அதன்பின் அவனுடைய நண்பனான மதன் அவனை பார்ப்பதற்காக வந்தான். அவன் வேறு பள்ளியில் இவனுடன் இதற்கு முன் படித்த மாணவன் இப்போது வெளியூரில் இருக்கிறான் வெகு நாட்களுக்குப் பிறகு அவன் உறவினர் வீட்டிற்கு வந்த மதன் டேவிடை சந்திக்க வந்தான். மதனோடு பேசிவிட்டு வேலையை தொடங்கினான், எப்படி மாடல் செய்வது என யோசித்தபோது அவனது மற்றொரு நண்பன் பிரகாஷ் நினைவுக்கு வந்தான் பிரகாஷின் அப்பா இந்த மாதிரியான மாடல்கள் எல்லாம் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் செய்பவர் அவரிடம் யோசனை கேட்டால் நல்லது என்று நினைத்து பிரகாசுக்கு போன் செய்தான். பிரகாஷ் என் “தந்தை வீட்டில் இல்லை மாலை தான் வருவார்”என்றான் பிரகாஷ். சரி நாம சாப்பிட்டுவிட்டு அப்படியே மதியம் அதை முடித்து விடலாம் என தீர்மானித்து கவலை இன்றி பொழுதை மதனுடன் கழித்தான்.

பிரகாஷின் அப்பா வீட்டுக்கு வர மாலை 6 மணிக்கு மேலாகி விட்டது. ஒரு வழியாக அவரிடம் யோசனைகள் சிலவற்றை கேட்டு வேலையை தொடங்கினான் என்றால்….. வீட்டில் வந்த விருந்தாளிகளும் மற்றும் சில உறவினர்களும் சேர்ந்து சினிமாவிற்கு போக திட்டமிட்டு இருப்பது இவனுக்கு தெரிய வந்தது வெகு நாட்களுக்குப் பிறகு அனைவரும் சந்திக்கின்றோம் ஆகையால் குடும்பத்துடன் மாலுக்கு சென்று சினிமா பார்க்கலாம் என்றதும். டேவிட் ஆல் எப்படி சினிமா பார்க்காமல் இருக்க முடியும்? அனைத்தையும் மறந்தவனாய் படத்தை பார்க்க சென்று விட்டான்.

படம் முடிந்தவுடன் அனைவரும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றனர் இதற்கிடையில் திங்கள் கிழமை முடித்தாக வேண்டிய சில வீட்டு பாடங்கள் இருந்தமையால் முதலில் அந்த வேலைகளை முடித்து விடலாம் என்று அதை முடித்துவிட்டு மணியை பார்த்தால் இரவு 12 :00.

அதன்பின் அவசர அவசரமாக நாலு குச்சிகளை வைத்து ஒரு ஒழுங்கில்லாமல் செய்ய வேண்டுமே என்பதற்காக செல்போன் டவரை செய்தான். டேவிட் எதிர்பார்த்தபடி வரவில்லை, வேறு மாதிரி செய்யலாம் என்றால் நேரமில்லை, நாள் முழுவதுமே உடலாலும் மனதாலும் கொண்டாட்டம் வேலை என்று இருந்தமையால் புது யோசனையும் வரவில்லை தூக்கமும் கண்ணை கட்டியது. மறுநாள் திங்கட்கிழமை காலை சரியான தூக்கம் இன்றி தூங்கி வழியும் முகத்துடன் பள்ளிக்கு சென்றான் டேவிட்.

இப்படி ஒரு கதையை சொல்லி அதில் இருந்து சில கேள்விகளை ஆக்டிவிட்டியாக கேட்டு ஒரு பேப்பரில் உங்கள் குழந்தைகளை எழுத சொல்லுங்கள்.

கேள்விகள் நான்கு பிரிவுகளாக இருக்கும். அவர்களுக்கு தோன்றும் பதிலை எழுதட்டும்.

டேவிட்டுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க நேரம் இருந்தா?

அதை அவனால் சரியான முறையில் பயன்படுத்த முடிந்ததா?

டேவிட் எந்த வேலைகளை தவிர்த்து இருக்கலாம்?

டேவிட் ன் தவறு என்ன?

தன் வேலைக்கு முன்னுரிமை கொடுப்பது என்றால் என்ன?

ஒரு ப்ராஜெக்ட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்ற தெளிவு திட்டமிடுதல் டேவிட்க்கு இருந்ததா?

உன்னை டேவிட் நிலையில் வைத்து பார்த்தால் என்ன செய்திருப்பாய்?

இப்படி உங்கள் குழந்தைகளுக்கு கதைகள் மூலமாக ஒரு விஷயத்தை சொல்லி அவர்களிம் அதைப்பற்றி தெளிவாக ஆராயச் சொல்லிக் கொடுக்கும் போது பல நல்ல விஷயங்கள் அவர்களுக்குள் விதையுண்டு மலரும். உங்கள் குழந்தைகளுக்காக உங்கள் நேரத்தை ஒதுக்குங்கள்.

தொடர்ந்து பேசுவோம்……..