தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 61 " - பரணீதரன்

20240221162451188.jpg

"அனைத்திற்கும் காரணம் நீயும் உனது விதியுமே

20240221162517181.jpg

யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- புறநானூறு 192 - கணியன் பூங்குன்றனார்

மேற்கூறிய பாடலின் மற்ற வரிகளில் அர்த்தங்களை வரும் வாரம் பார்ப்போம் என்று சென்ற வாரம் பரணீதரன் கூறியிருந்தார்.

அவர் தொடர்கிறார்

சாதலும் புதுவது அன்றே

இந்த உலகிற்கு சாவு என்பது புதுமை கிடையாது. எப்பொழுதும் சாவு என்பது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே

வாழ்க்கை இனிமையாக இருக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சி கொள்ளாமலும் வாழ்க்கை துன்பமாக இருக்கும் பொழுது வருத்தம் கொள்ளாமலும் இருக்க வேண்டும்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் இராமாயணத்தில் இராமருடைய வாழ்க்கையில் வருகிறது. முதல் நாள் ராமருடைய தந்தை தசரதர் அவருக்கு பட்டாபிஷேகம் செய்யப் போவதாக கூறுகிறார். அப்பொழுது ராமர் மகிழ்ச்சி கொள்ளவில்லை. நிதானத்தை கடைபிடிக்கிறார். அதேபோல அடுத்த நாள் காலையில் ராமரை காட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறும் பொழுதும் ராமர் வருத்தப்படவில்லை. நிதானத்தை கடைபிடிக்கிறார். இப்படி இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்று போல நாம் பார்க்க வேண்டும் என்று புலவர் கூறுகிறார்.

மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின்

இப்படி எதற்காக இருக்க வேண்டும் என்பதை அடுத்த வரியில் அவர் கூறுகிறார். மிகவும் மழை பெய்து அதனால் உண்டாக்கப்பட்ட ஒரு காட்டாற்று வெள்ளத்தில் செல்லக்கூடிய ஒரு படகு அல்லது ஒரு தெப்பம் எவ்வாறு தண்ணீரின் போக்கில் அடித்துச் செல்லப்படுமோ அது போல நமது உயிரும் வாழ்க்கையும் முறை அல்லது விதி என்ற ஆற்று வெள்ளத்தின் வழியில் தான் அடித்துச் செல்லும். அதை மாற்றுவது அவ்வளவு சுலபம் கிடையாது. அதனால் வாழ்க்கையில் அதன் போக்கிலேயே வாழுங்கள் என்று நமது முன்னோர்களும் பெரியவர்களும் நமக்கு அறிவினை ஊட்டி உள்ளனர்.

மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

இதன் காரணத்தால் பெரிய செயல்கள் மற்றும் பல நற்செயல்களை செய்யும் பெரியோரை பார்த்து நாம் எப்பொழுதும் வியக்கவும் கூடாது. அதேபோல சிறிய செயல்கள் மற்றும் தீய செயல்கள் செய்யும் சிறியோரை பார்த்து நாம் எப்போதும் எந்த காலத்திலும் எள்ளி நகையாடக்கூடாது. இவர்கள் இருவருமே விதியின் பாதையில் அவரவர்களில் கர்ம வினைகளுக்கு ஏற்றவாறு தங்களுடைய வாழ்க்கையை வாழ்கின்றனர் என்று புலவர் கூறுகிறார்.

இந்தப் பாடலை படிக்கக்கூடிய ஒவ்வொரு மாந்தருக்கும் தனித்தனியாக அவர் இந்த விஷயங்களை கூறுகிறார். அதனால் அவர் எல்லாமே உன் ஊர், எல்லாமே உன் உறவினர் என்று கூறாமல் எதுவுமே உனது கிடையாது, அனைத்தும் உனக்குள்ளேயே இருக்கிறது, அனைத்திற்கும் காரணம் நீயும் உனது விதியுமே மட்டும்தான் என்று கூறுகிறார். இந்தப் பாடலில் காஞ்சித் திணைக்குரிய நிலையாமையை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறார். இந்தப் பாடலே பொருண்மொழிக் காஞ்சி துறையில் பொதுவியல் திணையில் வருகிறது.

வாசகர்களே! இந்த பாடலுக்கு இந்த விளக்கம் புதியதாக இருப்பது போலத் தோன்றினாலும், இது தான் விளக்கம் என்பதில் திண்ணமாக இருந்தார் நமது கட்டுரையாளர்.

ஆதிசங்கராச்சாரியார் அவர்கள் இயற்றிய வடமொழிப் பாடலான பஜகோவிந்தம் பாடலும் இதையே நமக்கு உரைக்கிறது.

புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனி ஜடரே சயனம் |

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே, க்ருபயா'பாரே பாஹி முராரே

பிறப்பு மீண்டும் மீண்டும் வருகிறது, இறப்பும் மீண்டும் மீண்டும் வருகிறது, மீண்டும் மீண்டும் நாம் தாய் வயிற்றிலே பிறக்கிறோம், இந்த சம்சாரம் ஆகிய வாழ்க்கை கடப்பதற்கு மிகவும் கடினமானது, அதனை கடப்பதற்கு முராரி (முரன் என்று அசுரனை அழித்த கிருஷ்ணர் / விஷ்ணு / பெருமாள்)ஆகிய நீங்கள் கிருபை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

பகவத் கீதையிலும் கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு இதையே உபதேசிக்கிறார். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய். அது வரக்கூடிய சந்தோஷமும் துக்கமும் உன்னை பாதிக்காமல் பார்த்துக் கொள். அப்பொழுது நீ பிறப்பையும் இறப்பையும் கடந்தவனாக மாறுவாய் என்று கூறுகிறார்.

இந்த தத்துவத்தை ஸ்டார் படத்தில் உள்ள ‘தோம் கருவில் இருந்தோம்’ திரைப்படப் பாடல் மிகவும் அழகாக விளக்கும்.

ஜனனம் என்பது ஒரு கரைதான்…

மரணம் என்பது மறு கரைதான்…

இரண்டுக்கும் நடுவே ஓடுவது…

தலைவிதி என்னும் ஒரு நதிதான்…

பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது…

மண்ணுக்குள் முடிகிறதே…

விஷயம் தெரிந்தும் மனித இனம்…

விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே…

இப்போது இவரது நற்றிணை பாடலையும் பார்த்து விடுவோம் என்று தொடந்து கூறுகிறார்

மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்

உரம் சாச் செய்யார் உயர்தவம் வளம் கெடப்

பொன்னும் கொள்ளார் மன்னர் நன்னுதல்

நாந்தம் உண்மையின் உளமே அதனால்

தாம் செய் பொருளன அறியார் தாம் கசிந்து

என்றூழ் நிறுப்ப நீளிடை ஒழியச்

சென்றோர் மன்ற நம் காதலர் என்றும்

இன்ன நிலைமைத்து என்ப

என்னோரும் அறிப இவ் உலகத்தானே

ஒரு மரம் சாகும் அளவிற்கு அந்த மரத்தை முழுவதுமாக அழித்து மருந்தை மனிதர்கள் எடுக்க மாட்டார்கள். வேரே தேவைப்பட்டால் கூட வேரின் ஒரு பகுதியை மட்டுமே எடுத்து அந்த மரம் சாகாமல் மனிதர்கள் காப்பாற்றுவார்கள். மரத்திற்கும் உயிர் உண்டு என்பதை அந்த காலத்திலேயே மனிதர்கள் கண்டு வைத்திருந்தார்கள். உயிர் போகும் அளவிற்கும் உடலில் சக்தி போகும் அளவிற்கும் தவம் செய்ய மாட்டார்கள். மக்களை வாட்டி வதைத்து ஒரு மன்னராகப்பட்டவன் வரி போட மாட்டான். அதாவது தங்களுடைய ஆசைக்காக தங்கள் உடம்பையும் மற்றவர்களையும் மக்கள் வருத்த மாட்டார்கள். இவையெல்லாம் நாம் கண்ணால் பார்க்கும் உண்மைகள். ஆனால் என் தலைவனோ ஆசையின் காரணமாக கொடிய பாலை நிலம் வழியாக பெருத்த செல்வம் தேட சென்றுள்ளார். அவர் தன்னையும் வருத்திக்கொண்டு என்னையும் வருத்தப்பட வைக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்று மக்களுக்கு இவர்கள் நிரூபிக்கிறார்கள் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக கணியன் பூங்குன்றனார் நமக்கு கூறுகிறார்.

ஆக அகத்திணை இலக்கியமாக இருந்தாலும் சரி புறத்திணை இலக்கியமாக இருந்தாலும் சரி இரண்டிலும் அவர் பல்வேறு விதமான தத்துவ விஷயங்களை கூறியுள்ளார். இவை பெரும்பாலும் காஞ்சித் திணைக்கே உரிய பொருட்களாகும்.

இதே போல மதுரை காஞ்சியிலும் காஞ்சித் துறை மிகுந்து வந்துள்ளது. அதனாலேயே இந்த நூலிற்கு காஞ்சி என்று சொல் கூடவே வருகிறது. இந்த நூலை எழுதிய மாங்குடி மருதனார் போரின் உடைய கொடுமையை பின்வருமாறு விளக்குகிறார் :

நாடெனும்பேர் காடுஆக

ஆசேந்தவழி மாசேப்ப

ஊர் இருந்தவழி பாழ்ஆக

போர் நடப்பதால் ஒரு நாடு காடு போல் ஆகிறது. பசுக்கூட்டங்கள் மேய்ந்த நிலம் புலிகள் உலவும் இடமாக மாறுகிறது. ஊர்கள் இருந்த பகுதிகள் அனைத்தும் பாழாகி மக்கள் நடமாட்டம் இல்லாமல் போகிறது.

மறத்தை (வீரம்) புகழ்வதற்கு கலிங்கத்துபரணி, நெடுநல்வாடை போன்ற பல நூல்கள் இருந்தாலும் அறத்தை (தர்மம்) புகழ்வதற்கு இது போன்ற சில நூல்களும் உள்ளன. மறம் மட்டுமே வாழ்க்கை இல்லை, அறமும் சேர்ந்துதான் வாழ்க்கை என்பதை இவ்வாறான புலவர்களும் அவர்களது நூல்களும் அவர்களது செய்யுள்களும் நமக்கு எப்பொழுதும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

இத்துடன் பொருள் இலக்கணம் நிறைவு பெற்றுக்கொள்வதாகக் கூறி . அடுத்த வாரம் யாப்பிலக்கணம் பார்ப்போம் என்று விடை பெற்றுக்கொண்டார் பரணீதரன்.