தொடர்கள்
பொது
சநாதன தர்மம் "வர்ண தர்மம் சமுதாயத்தில் மனிதர்களைப் பிரிக்கிறதா? - ஆர். சங்கரன்

20240219215324386.jpg

வர்ண தர்மத்தின் எதிரே எழும் முதல் குற்றச் சாட்டு அது சமுதாயத்தின் மனிதர்களைப் பிரிக்கிறது, அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது என்பதாகும். இது ஒரு தவறான புரிதல் என்பதை இங்கே பார்ப்போம் என்று நேராகவே கோதாவில் இறங்கிவிட்டார் சங்கரன்.

அவரே தொடர்கிறார்.

சனாதன தர்மத்தின் வர்ண தர்மம் என்பது நாம் மேலே பார்த்ததுபோல எல்லா சமுதாயத்திலும் உள்ள நான்கு பிரிவுகளைப் போலவேதான். அந்த உட்கட்டமைப்பு ஏற்படுத்தப் பட்டது. ஒரு மனிதனுக்கு இரு கண்கள், இரு கைகள், இரு கால்கள் என்று இருந்தாலும் அவை சமமான அந்தஸ்து உள்ளவை என்பது எல்லாரும் அறிந்ததே. அதேபோலத்தான் இந்த நான்கு பிரிவுகளும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமமான அந்தஸ்து உள்ளவையே ஆகும். ஒவ்வொரு பிரிவும் அவரவர் நிலையில் சமுதாயத்திற்குத் தமது பங்களிப்பைத் தந்து அந்த சமுதாயத்தைத் தாங்குகிறார்கள். அதில் ஒவ்வொரு பிரிவும் இன்றியமையாதவையே ஆகும்.

அறிவையும் ஞானத்தையுமே தமது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்களையும் நாட்டையும் மக்களையும் எவ்வித இன்னலும் தாக்காமல் காப்பவர்களையும் நீதியை நிலை நாட்டுபவர்களையும் ஒரு சமுதாயம் மரியாதையுடன் நடத்துமல்லவா! அதையே வர்ணதர்மம் சொல்கிறது. எந்த நிலையிலும் ஒன்று உயர்ந்தது என்றோ மற்றது தாழ்ந்தது என்றோ சொல்லப்படவில்லை.

குற்றம் சொல்பவர்கள் ரிக்வேதத்தின் புருஷ சூக்தத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். அதில் அந்தணர்கள் வேத புருஷனின் முகத்திலிருந்தும், சத்திரியர்கள் கைகளிலிருந்தும் வணிகர்கள் தொடையிலிருந்தும் சூத்திரர்கல் கால்களிலிருந்தும் தோன்றினர் என்று அது சொல்லும். இதில் தவறு ஏதும் இல்லையே! சமுதாயத்தின் நான்கு பிரிவினர் அதன் நான்கு முக்கிய அங்கங்களாக இருப்பதை இது குறிப்பிடுகிறது.

அறிவும் ஞானமுமே செல்வமாக இருப்பவர்களும், பாதுகாப்பைத் தருபவர்களும், செல்வத்தால் நிலைத்த தன்மையைத் தருபவர்களும் கால்களாக அந்த சமுதாயத்தை இயக்குபவர்களாகவும் அப்படி நான்கு விதமான மக்கள் ஒரு நல்ல சமுதாயத்திற்கு வேண்டும் என்பதே அதன் பொருள். எந்த ஒரு உறுப்பு குறைந்தாலும் அந்த மனிதன் குறையுள்ளவன் ஆவதுபோல, எந்த ஒரு பிரிவு திறன் இழந்தாலும் அந்த சமுதாயம் தன் வலிமையை இழக்கும் என்பது சொல்லப் பட்டது. சிறந்த முகமும் வலிமையான கைகளும் இருந்தால் போதும் கால்களும் பாதங்களும் எனக்குத் தேவையில்லை என்று சொல்லும் ஒரு மனிதனை நாம் காண முடியுமா!! அன்று முதல் இன்றுவரை நமது தர்மத்தில் ஒருவரின் காலில் விழுந்து வணங்குவதே உயர்ந்த மரியாதையாகக் கருதப்படுகிறது.

இவற்றில் முதலில் சொல்லப்பட்டது உயர்ந்தது என்றும் மற்றவை தாழ்ந்தது என்றும் தப்பான பிரசாரம் நம் நாட்டில் வெளிநாட்டவரால் பல காலமாகச் சொல்லப் படுகிறது. புருஷ ஸுக்தத்தைப் படித்தோமானால், நான்குவித மனிதர்கள் உருவாவதற்கு முன்னால் குதிரைகளும் மாடுகளும் ஆடுகளும் உருவாகின என்று சொல்லும். அப்படியானால் அவை மனிதர்களைவிட மேலானவை என்று சொல்ல முடியுமா. ஒன்றுக்கு மேற்பட்டவற்றை, பலவற்றைச் சொல்லும்போது ஒன்றன் பின் ஒன்றாகவே சொல்ல முடியும். அதனாலேயே அவற்றில் உயர்வு தாழ்வு சொல்வது மடமையே !

‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்ற வள்ளுவன் எண் என்பதை முதலில் சொன்னதால் அது எழுத்தைவிட உயர்ந்தது என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அது வள்ளுவனைக் கொச்சைப் படுத்துவது அல்லவா? அல்லது அறம் பொருள் இன்பம் என்று சொன்னதால் முதலில் சொன்னது மற்றவற்றைவிட உயர்ந்தது என்று கொள்ள முடியுமா? அதுபோலத்தான் புருஷ சூக்தத்தைப் புரிந்து கொள்வதும்,

வேற்று நாட்டவர்கள், வேற்று மதத்தவர்கள் நமது நாட்டின்மீது படையெடுத்து அதை ஆளவும் தொடங்கினர். ஏறக்குறைய 1300 ஆண்டுகள் அவ்விரு ஆட்சியாளர்களும் ஆண்டபோது அவர்களது கலாசாரத்தை மதத்தை நம் நாட்டின்மீது திணித்ததால் நமது தர்மங்களில் பலவற்றிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அழகான ஜீவநதியாக விளங்கிய நமது தர்மம் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டி வந்தது. குறுகிய காலமாக இல்லாமல் நெடுங்காலம் அந்த நிலை நிலவியதால் நமது தர்மத்தின் பல சிறப்புகள் அழிந்தன, கொச்சைப் படுத்தப் பட்டன. பல சிறப்புகளை நமது பாரதத்தின் மக்கள் மறக்கும் நிலையும் ஏற்பட்டது. இத்தனைக்கும் அவற்றை எழுதியவர்கள் எல்லாம் அன்னாட்டு அறிவாளிகள் அல்ல. பள்ளி படிப்பு கூட தாண்டாதவர்கள். அவர்களது குறிக்கோளெல்லாம் அவர்களது மதத்தைத் திணிப்பதுதான். அந்த முயற்சிக்கு இடைஞ்சலாக இருந்தது நமது சநாதன தர்மம். அதையே வேத வாக்காக எண்ணிக்கொண்டிருப்பதுதான் நமது மக்களின் மடமை.

ஆண்டுதோறும் பல நூறு பெரும் இனிய கனிகளைத் தரும் ஒரு மரத்தின் சில கனிகளை வண்டு துளைப்பதாலோ, காற்றில் கீழே விழுந்து வீணாகிப் போவதாலோ வழிப்போக்கர்கள் கல்லடித்து வீழ்த்துவதாலோ அந்த மரம் தவறானதாகவோ ஒதுக்கப்பட வேண்டியதாகவோ ஆவதில்லை. மாறாக அந்த மரத்தை நன்கு பாதுகாத்தால் அதன் ஒவ்வொரு கனியும் நமக்குப் பயனுள்ளதாக மாறும்.

சத்திரியனும், வேடனும், மீனவப் பெண்ணின் மகனும் தமது தவத்தால் பெரும் மகரிஷியாக ஆனதும் அவர்களை இன்றளவும் வேதம் கற்ற அந்தணர்களும் போற்றி வணங்குவதும் கண்கூடு. வர்ண தர்மம் என்பது இன்றைய பொருளாதார மற்றும் சமுதாயக் கோட்பாட்டு வல்லுனர்கள் சொல்லும் தொழில்முறைப் பிரிவு (Division of Labour) என்ற வழிமுறையிலேயே அமைந்தது. இவ்வழியால் அந்த நாடு முன்னேறும் என்பதை இன்றைய வல்லுனர்கள் சொல்கின்றனர்.

அவ்விதம் வல்லமை பெற்ற நாடாக இருந்த நமது பாரதம் அடுத்தடுத்து நிகழ்ந்த அன்னிய ஆட்சியால் நமது இயல்பான சிறப்பை இழந்து அடிமைப்பட நேர்ந்தது. அது வர்ண தர்மத்தின் தவறல்ல, அதனைச் சிதைத்து நம்மை அடிமைப் படுத்த அன்னியர்கள் செய்த சதி, சீர்குலைவு என்பதை நாம் உணர வேண்டும்.

இன்றைய நிலையில் வர்ண தர்மம் என்பது மீண்டும் தலையெடுப்பது இயலாத காரியமாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டின் சமுதாய கலாசார பாரம்பரியத்தின் சீர்குலைவிற்கு அது காரணமில்லை என்பது தெளிவு. அதை உணர்ந்தாலே நாம் நம் நாட்டிற்கு நாம் செய்யும் பெரிய தொண்டாகும்.

வர்ண தர்மத்தின் மீதுள்ள மற்றொரு பெரும் குற்றச் சாட்டை அடுத்த பகுதியில் பார்க்கலாம் என்று விடை பெற்றார் சங்கரன்.